இலங்கை அரசாங்கம், அனைத்துலக சமூகத்துக்குக் கொடுத்த வாக்குறுதிகள் நிறைவேற்றப்பட்டுள்ளனவா என்று முறையாக ஆராய்ந்த பின்னரே, ஜி.எஸ்.பி.பிளஸ் வரிச்சலுகையினை மீண்டும் வழங்க வேண்டும் என, ஐரோப்பிய ஒன்றியத்தின் சிறப்புத் தூதுக் குழுவிடம் வலியுறுத்தியதாக, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பேச்சாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான சுமந்திரன் தெரிவித்துள்ளார்.
ஐரோப்பிய ஒன்றிய சிறப்பு தூதுக் குழுவுடன், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன், அதன் ஊடகப் பேச்சாளர் சுமந்திரன் ஆகியோர், சிறப்பு கலந்துரையாடலொன்றை, நாடாளுமன்றக் கட்டடத் தொகுதியில் உள்ள எதிர்க்கட்சித் தலைவரின் அலுவலகத்தில் நேற்று மேற்கொண்டனர்.
இந்தச் சந்திப்புத் தொடர்பில் ஊடகங்களுக்கு கருத்து வெளியிட்ட சுமந்திரன், ஜி.எஸ்.பி பிளஸ் வரிச் சலுகையை இலங்கைக்கு வழங்குவதா, இல்லையா எனத் தீர்மானிப்பதற்கு, இலங்கைக்கு வருகைதந்துள்ள ஐரோப்பிய ஒன்றிய சிறப்பு தூது குழுவுடன் கலந்துரையாடிதாக குறிப்பிட்டுள்ளார்.
ஜி.எஸ்.பி பிளஸ்-ஐ இலங்கைக்கு வழங்குவதை வரவேற்பதுடன், கட்டாயம் அது கொடுக்கப்பட வேண்டும் என்ற போதிலும், என்ன காரணங்களுக்காக அது நீக்கப்பட்டதோ, அந்தக்காரணங்கள் தொடர்பில் ஆராய வேண்டும் எனவும், பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்துக்குப் பதிலாக கொண்டுவரப்படவுள்ள பயங்கரவாத எதிர்ப்புச் சட்டம் மிகவும் மோசமானதாக உள்ளது என்பதையும் ஐரோப்பிய குழுவிடம் தெரிவித்ததாகவும் அவர் விபரம் வெளியிட்டுள்ளார்.
இலங்கை அரசாங்கம் மனித உரிமைகள் தொடர்பிலும் புதிய அரசியலமைப்புத் தொடர்பிலும் அனைத்துலக சமூகத்துக்குக் கொடுத்த வாக்குறுதிகள் நிறைவேற்றப்பட்டுள்ளதா என முறையாக ஆராய்ந்த பின்னரே, ஜி.எஸ்.பி.பிளஸ் வரிச்சலுகையினை மீண்டும் வழங்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
பொறுப்புக் கூறல் கடப்பாட்டின் அடிப்படையில் இலங்கை அரசாங்கம் வழங்கிய வாக்குறுதிகளில், காணாமற் போனோர் தொடர்பான அலுவலகம் அமைப்பது தொடர்பான சட்டம் மட்டுமே நிறைவேற்றப்பட்டுள்ள போதிலும், காணாமற் போனோர் தொடர்பான ஆணைக்குழு அமைக்கப்படவில்லை என்பதையும் அவர்களிடம் சுட்டிக்கட்டியதாகவும் சுமந்திரன் மேலும் தெரிவித்துள்ளார்.