வடக்கில் இயங்கி வரும் குழுக்களின் பின்னணியில் முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோதபாய ராஜபக்ச இருக்கின்றாரா என்பது தொடர்பில் தமக்குத் தெரியாது என புனர்வாழ்வு மற்றும் மீள்குடியேற்ற அமைச்சர் ஹிஸ்புல்லாஹ் தெரிவித்துள்ளார்.
இன்று இடம்பெற்ற ஊடக மாநாட்டில் எழுப்பப்பட்ட கேள்வி ஒன்றிற்கு பதிலளித்த போதே அவர் இவ்வாறு கூறியுள்ளார்.
சிறிய சிறிய பிரச்சினைகள் பூதாகாரமாக வெடிக்கக் கூடும் என்றும் குறிப்பிட்டுள்ள அவர், வடக்கில் இயங்கி வரும் குழுக்கள் தொடர்பில் அரசாங்கம் விசாரணை நடத்தி உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளார்.
வடக்கில் செயற்படும் ஆவா குழுவை கோத்தபாயவே உருவாக்கியதாக அமைச்சர் ராஜித சேனாரத்ன தகவல் வெளியிட்டுள்ள நிலையிலேயே, அமைச்சர் ஹிஸ்புல்லாஹ் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
இதேவேளை யாழ்ப்பாணத்தில் காணப்படும் பிரபல பாடசாலைகளில் கல்விப் பொதுத் தராதர உயர்தரம் மற்றும் சாதாரண தரம் கற்கும் மாணவர்களே அதிகளவில் ஆவா குழுவில் அங்கம் வகிப்பதாக வடக்கில் கடமையாற்றி வரும் காவல்துறை அதிகாரியொருவர் கொழும்பு ஊடகமொன்றுக்கு தெரிவித்துள்ளார்.
ஆவா குழு குறித்த விசாரணைகளின் மூலம் இந்த விடயம் அம்பலமாகியுள்ளதாகத் தெரிவித்துள்ள அவர், ஆவா குழுவில் சுமார் 500க்கும் மேற்பட்ட உறுப்பினர்கள் அங்கம் வகிப்பதாகவும், இவர்களில் அதிகளவானர்கள் பாடசாலை மாணவர் எனவும் தெரிவித்துள்ளார்.
இந்த ஆவா குழு உறுப்பினர்கள் தொலைபேசி உரையாடல்கள் மூலம் தொடர்பாடுவதில்லை எனவும் வைபர், வட்ஸ்அப் போன்ற நவீன தொடர்பாடல் வழிமுறைகளையே பின்பற்றுவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
அத்துடன் யாழ்ப்பாணம், சுன்னாகம், கந்தரோடை, மானிப்பாய், கோப்பாய், அச்சுவெலி, தெல்லிப்பழை போன்ற பகுதிகளைச் சேர்ந்தவர்களே இந்தக் குழுவில் அங்கம் வகிப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
சன்னா, தேவா மற்றும் பிரகாஸ் ஆகியோரே இந்தக் குழுவினை வழிநடத்துகின்றனர் எனவும் குறிப்பிட்டுள்ள அவர், இந்தக் குழுவினர் வெளிநாடுகளிலிருந்து தருவிக்கப்பட்ட வாள்களைப் பயன்படுத்துவதுடன் 20 மோட்டார் சைக்கிள்களையும் பயன்படுத்தி குற்றச் செயல்களில் ஈடுபட்டு வருவதாகவும் தெரிவித்துள்ளார்.