இலங்கையில் தமிழர்கள் கைது செய்யப்பட்டு சித்திரவதை செய்யப்பட்டமை தொடர்பில் இலங்கை அரசாங்கத்திற்கு எதிராக பிரித்தானிய நீதிமன்றத்தில் வழக்குத் தாக்கல் செய்வதற்கு அனைத்துலக மனித உரிமைகள் அமைப்பு நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றது.
பிரத்தானியாவில் அரசியல் தஞ்சமடைந்த ரேனுகாரூபன் வேலாயுதபிள்ளை திருமணம் செய்துக் கொள்வதற்காக இந்த ஆண்டின் ஆரம்பத்தில் இலங்கைக்கு சென்றபோது, காவல்த்துறையினர் வீட்டிற்குள் நுழைந்து அவரை அழைத்து சென்றுள்ளதுடன், அவரை தடுத்து வைத்து சித்திரவதை செய்ததாக குற்றம் சுமத்தி வழக்கு தாக்கல் செய்வதற்கு ரெட்ரெஸ் (REDRESS) என்ற அமைப்பு நடவடிக்கை மேற்கொண்டு வருவதாக, மனித உரிமைகள் வழக்கறிஞர் குலசேகரம் கீதரத்னம் தெரிவித்துள்ளார்.
இலங்கையில் நபர்களை கடத்தி சென்று சித்திரவதை மேற்கொண்டமை இந்த ஆண்டிலும் இடம்பெற்றமைக்கான மேலும் பல புதிய சாட்சிகள் கிடைத்துள்ளதாகவும், எதிர்வரும் வாரத்தில் இருந்து ஒரு மாதம் ஜெனீவாவில் நடைபெறவுள்ள அனைத்து சித்திரவதைக்கு எதிரான ஐக்கிய நாடுகள் குழு, இலங்கை தொடர்பில் மேற்கொண்ட சிறப்பு ஆய்வின் போதே இந்த தகவல் கிடைத்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
ஐக்கிய ராஜ்ஜியத்தின் குடிமகனான சித்திரவதைக்குள்ளான ரேனுகாரூபன் இலங்கையில் துன்புறுத்தல்களுக்குள்ளான சந்தர்ப்பத்தில் அவரது பாதுகாப்பிற்காக தலையிடாத குற்றச்சாட்டிற்காக பிரித்தானிய வெளியுறவு அமைச்சுக்கு எதிராகவும் வழக்கு தொடரவுள்ளதாக வழக்கறிஞர் கீதரத்னம் தெரிவித்துள்ளார்.
வழக்கறிஞர்கள், மனித உரிமை செயற்பட்டாளர்களின் தலையீட்டின் பின்னர் விடுதலையாகி லண்டன் நோக்கி சென்ற ரேனுகாரூபனை பரிசோதித்த சிறப்பு வைத்தியர்கள், அவரது மூளைக்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக தெரிவித்துள்ள நிலையில், கைது செய்யப்பட்டு சித்திரவதை செய்தமையினால் தனது சகோதரனின் தலை, முகம், கால் ஆகிய பகுதிகளில் காயம் ஏற்பட்டுள்ளதாக அவரது தங்கையும் தகவல் வெளியிட்டுள்ளார்.
ரேனுகாரூபன் கடத்தி செல்லப்பட்டமை தொடர்பில் சனாதிபதி ஆலோசகரும் கிழக்கு மாகாண ஆளுநருமான ஒஸ்டின் பெர்ணான்டோ மற்றும் யாழ்ப்பான இராணுவ மேஜர் ஜெனரல் மஹேஷ் சேனாநாயக்க உட்பட அரசாங்க அதிகாரிகளிடம் அனைத்துலக மனித உரிமை அமைப்பாளர்கள் வினவியுள்ள நிலையில், பிரித்தானிய வெளியுறவு அமைச்சிற்கும், அனைத்துலக மன்னிப்பு சபைக்கும் கடத்தப்பட்டமை தொடர்பில் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் ரேனுகாரூபன் கைது செய்யப்பட்டதை ஒஸ்டின் பெர்ணான்டோவினால் ஏற்றுக் கொள்ள வேண்டிய நிலைமை ஏற்பட்தாக வழக்கறிஞர் மெலனி திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.
இந்த நிலையில், இலங்கை அரசாங்கத்தின் பாதுகாப்பு பிரிவு மற்றும் காவல்த்துறையினர் தற்போதய அரசாங்கத்தின் கீழும் சித்திரவதையில் ஈடுபடுவதாக அனைத்துலக மனித உரிமை அமைப்பு மற்றும் இலங்கை மனித உரிமை ஆணைக்குழு ஆகியன, ஐ.நாவுக்கு முழுமையான அறிக்கை ஒன்றை வழங்கியுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.