வடமாகாண முதலமைச்சர் விக்னேஸ்வரனின் அதிருப்தி எந்த விதத்திலும் தமிழ் தேசியக் கூட்டமைப்பை பாதிக்காது என்று நாடாளுமன்ற உறுப்பினர் சுமந்திரன் தெரிவித்துள்ளார்.
மக்களுக்கு நம்பிக்கை ஏற்படாமல் இருப்பது நியாயமான விடயம் என்றும், அவர்களுடைய கருத்தை முதல்வர் பிரதிபலிப்பதாகவும் குறிப்பிட்டுள்ள அவர், இதனால் கூட்டமைப்பிற்கு எந்த விதத்திலும் பாதிப்பு ஏற்படாது என்றும் விபரித்துள்ளார்.
மீனவர் பிரச்சனை தொடர்பாக இந்திய – இலங்கை அமைச்சர்கள் நிலையிலான கூட்டத்தில் பங்கேற்க புதுடெல்லி சென்றிருந்த சுமந்திரன், அனைத்துலக ஊடகம் ஒன்றிற்கு அளித்துள்ள நேர்காணலிலேயே இவ்வாறு கூறியுள்ளார்.
போர் குற்ற விசாரணை தொடர்பான விடயங்களும், காணாமல் போனவர்களை கண்டுபிடிப்பதிலும் மிகுந்த தாமதான நடவடிக்கைகளே இடம்பெறுகின்ற போதிலும், இலங்கையில் எந்த அரசாங்கம் வந்தாலும் இதனை தட்டிக் கழிக்க முடியாது என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
இலங்கை பொறுப்பு கூறல் நடவடிக்கையை ஏற்றுக் கொண்டதற்கு தமிழ் தேசிய கூட்டமைப்பின் வற்புறுத்தல்தான் காரணம் என்றும், அதன் தாக்கத்தை குறைப்பதற்கு எப்போதும் செயல்பட மாட்டோம் என்றும் அவர் கூறியுள்ளார்.
இலங்கையில் பெளத்த மயமாதல் குறித்தும் பேசிய அவர், போர் முடிவடைந்த போது இதுபோன்ற சம்பவங்கள் இடம்பெற்றதாகவும், பின்னர் தணிந்திருந்த இவ்வாறான சம்பவங்கள் தற்போது மீண்டும் திடிரென துரிதம் அடைந்திருப்பதாகவும் தெரிவித்துள்ளார்.,
இதற்கு பின்னால் இருந்து செயல்பட கூடியவர்கள் யார் என்பது தங்களுக்கு தெரியும் என்று அவர் கூறியுள்ளார்.
இதுபோன்ற செயற்பாடுகள் நல்லிக்கணத்திற்கு எதிரானவை என்றும், இதுபோன்ற சம்பவங்கள் நடைபெற கூடாது என்பதில் தாம் தெளிவாக இருப்பதாகவும் சுமந்திரன் மேலும் தெரிவித்துள்ளார்.