மட்டக்களப்பு மாவட்டம் பட்டிப்பளை பிரதேச செயலர் மற்றும் கிராம சேவகர் உள்ளிட்ட உத்தியோகத்தர்களை காவல்துறை உயரதிகாரி முன்னிலையில் மங்களராமய விகாரதிபதி அம்பிட்டிய சுமனரத்ன தேரர் மிரட்டிப் பேசியுள்ளமை, சிங்கள பௌத்த பேரினவாத ஆழ்மனதின் ஆழத்தை வெளிப்படுத்தும் இனவெறிப்பேச்சாகும் என்று அனைத்துலக ஈழத்தமிழர் மக்களவை தெரிவித்துள்ளது.
சட்டத்திற்குட்பட்டு முறையான அனுமதியுடன் மேய்ச்சலுக்கு அனுமதிக்கப்பட்ட நிலத்தில் கால்நடைகளை மேய்சலுக்கு விட்டு பயனடைபவர்கள் தமிழர்கள் என்பதனை பொறுத்துக்கொள்ள முடியாத இனவாத மனோன்நிலையின் வெளிப்பாடாகவே இந்த ஆர்ப்பாட்ட நிகழ்வு திட்டமிடப்பட்டுள்ளதாகவும் அது குறிப்பிட்டுள்ளது.
சமூகத்தில் மதிப்பு மரியாதையுடன் பணியாற்றிவரும் தமிழ் அரச உத்தியோகத்தர்களுக்கு எதிராக, நூற்றுக்கணக்கானவர்கள் சுற்றி நின்று வேடிக்கை பார்க்க சுமனரத்ன தேரர் பிரயோகித்த வார்த்தைகள் மிகவும் கீழ்த்தரமானவையாகவும் அருவருக்கத்தக்கதாகவும் உள்ளதாகவும் அது தெரிவித்துள்ளது.
இந்த சம்பவத்தை தனிப்பட்ட ஒரு விடயமாக எடுத்துவிட முடியாது எனவும், தமிழர்களுக்கு எதிரான சிங்கள பௌத்த பேரினவாத மனோன்நிலையின் வெளிப்பாடாகவே சுமனரத்ன தேரரின் இந்தச் செயற்பாடு அமைந்துள்ளது என்பதையும் அது சுட்டிக்காட்டியுள்ளது.
தமிழர்கள் என்றும் சிங்களர்களுக்கு அடிமைகளாகவே இருக்க வேண்டுமென்ற பௌத்த சிங்கள பேரினவாத மனநிலையில் மாற்றமேதும் நிகழவில்லை என்பதுடன், ஒருபோதும் ஒன்றாக வாழ்வதென்பது சாத்தியமில்லை என்பதையே இந்த சம்பவம் அப்பட்டமாக வெளிப்படுத்தி நிற்பதாகவும் அது தெரிவித்துள்ளது.
கொலைவெறியுடன் பேசிய பௌத்த பிக்குவின் அராஜகத்தை தடுத்துநிறுத்தி, அரச உத்தியோகத்தர்களது மாண்பினை பாதுகாக்க வேண்டிய காவல்துறை உயரதிகாரி, பெயரளவிலான தலையீட்டினை வெளிப்படுத்தியதுடன் வேடிக்கை பார்த்திருந்தமை சிறிலங்கா காவல்துறையும் தமிழர்களுக்கு விரோதமாகவும் சிங்களர்களுக்கு ஆதரவாகவும் இருப்பதனை மீண்டும் உணர்த்தியுள்ளதாகவும் ஈழத்தமிழர் மக்களவை குறிப்பிட்டுள்ளது.
எதுவித அச்சுறுத்தல் முனைப்புமின்றி, அதற்கான புறச்சூழமைவும் அற்றிருந்த தருணத்தில், யாழ் பல்கலைக் கழக மாணவர்கள் மீது துப்பாக்கிச் சூடு நடத்தி உயிர்ப்பலியெடுத்த அதே சிறிலங்கா காவல்துறைக் கட்டமைப்புதான் இங்கு பௌத்த பிக்குவின் கொலைவெறி தாண்டவத்தினை வேடிக்கை பார்த்து நின்ற என்பதையும் அது சுட்டிக்காட்டியுள்ளது.
இவ்வாறான இனவெறி செயற்பாடுகளே நாட்டை பேரழிவுக்கு இட்டுச்சென்றன என்ற வரலாற்றுப் பாடத்தை மறந்து, தொடர்ந்தும் இதே பாதையில் பயணித்தால் அதுவே சுதந்திர தமிழீழத்திற்கான திறவுகோளாக அமையும் என்பதனையும் ஈழத்தமிழர் மக்களவை வலியுறுத்தியுள்ளது.
சிறிலங்கா முழுவதும் பௌத்த சிங்களர்களுக்கே சொந்தமானது என்ற சிங்கள பௌத்த பேரினவாத சித்தாந்தத்தின் ஊற்றுக்கண்ணாகத் திகழ்ந்து வரும் பௌத்த பீடங்கள் இன்னும் தமிழர்களின் உயிர் குடித்து உரிமைகளைப் பறிக்கும் பலிபீடங்களாகவே தகித்துக்கொண்டிருக்கின்றன என்பதன் அண்மித்த சாட்சியாக இச்சம்பவம் அமைந்துள்ளது எனவும் அது தெரிவித்துள்ளது.
தமிழர் கைகள் பலமாகும் போதே சிங்களர் கொட்டம் அடங்கும் எனவும், சிங்களர் கொட்டமடக்கி தமிழ்க் குடி காக்க, தமிழீழத் தேசியத் தலைவர் அவர்கள் வழிகாட்டுதலில் தாயக விடுதலைக்காய் தம்முயிர் துறந்த மாவீரர்கள் வழித்தடத்தில், உலகத் தமிழர்கள் அனைவரும் ஒன்றுபட்ட வேண்டும் எனவும் அனைத்துலக ஈழத்தமிழர் மக்களவை அழைப்பு விடுத்துள்ளது.