மட்டக்களப்பு மங்களராமய விகாராதிபதி அம்பிட்டிய சுமனரத்ன தேரரை கைது செய்யுமாறு கோரி மட்டக்களப்பு மண்முனை- தென்மேற்கு பட்டிப்பளை பிரதேச செயலகம் முன்பாக கவனயீர்ப்பு போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது.
பிரதேச சிவில் சமூகத்தின் ஏற்பாட்டில் இன்று இடம்பெற்ற இந்த கவனயீர்ப்பு போராட்டத்தில் பிரதேச மக்கள், மாகாண சபை மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்கள் உள்ளிட்ட பலர் பங்கேற்றிருந்தனர்.
மட்டக்களப்பு மண்முனைத் தெற்கு உட்பட கெவிலியாமடுப் பகுதியில் கால்டைகளுக்காக ஒதுக்கப்பட்டுள்ள மேய்ச்சல் நிலங்காணிகளை அபகரிக்க மங்களராமய விகாராதிபதி அம்பிட்டிய சுமனரத்ன தேரர் தலைமையிலான குழுவினரின் முயற்சியை தடுத்த அரசாங்க அதிகாரிகளையும், தமிழ் முஸ்லிம் மக்களையும் அவர் மோசமான வார்த்தைகளால் திட்டியிருந்தமை குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையிலேயே மங்களராமய விகாராதிபதியின் இந்த இனவாத செயற்பாட்டிற்கு எதிர்ப்பு தெரிவித்தும் அவர் கைது செய்ய வேண்டும் என்பதை வலியுறுத்தியும் இன்று இந்த கவனயீர்ப்பு போராட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது.
இந்த கவனயீர்ப்பு போராட்டத்தின் இறுதியில் சனதிபதி, பிரதமர், எதிர்க்கட்சி தலைவர் மற்றும் காவல்த்துறைமா அதிபர் ஆகியோரிடம் கையளிப்பதற்கான மனு தமிழ் தேசியக் கூட்டமைப்பின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் அரியநேத்திரனால் கையளிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை மட்டக்களப்பில் அரசாங்க உத்தியோகத்தர் ஒருவரைத் தகாத வார்த்தைகளால் இனத்துவேச ரீதியாக திட்டிய பௌத்த பிக்கு மீது சட்ட நடவடிக்கை எடுக்குமாறு காவல்த்துறையினருக்கு பணிப்புரை விடுத்துள்ளதாக கிழக்கு மாகாண முதலமைச்சர் ஹாபிஸ் நசீர் அஹமட் கூறியுள்ளார்.
இனவாத செயற்பாடுகளுக்கு ஒரு போதும் இடமளிக்காதவன் என்ற வகையில் தமது முழு அதிகாரத்தையும் பயன்படுத்தி குறித்த தேரர் மீது சட்ட நடவடிக்கை எடுப்பதற்காக அனைத்து நடவடிக்கைகளையும் முன்னெடுத்துள்ளதாகவும் அவர் தகவல் வெளியிட்டுள்ளார்.
நல்லிணக்கத்திற்கு சிறுபான்மை சமூகம் இரு கரம் நீட்டி தயராகவுள்ள நிலையில் இவ்வாறு திட்டமிட்டு முன்னெடுக்கப்பட்டு வரும் இனவாத செயற்பாடுகள் இனங்களிடையே மீண்டும் முறுகல் நிலையை தோற்றுவிக்கலாம் என்றும் அவர் எச்சரித்துள்ளார்.
கிழக்கில் சிறுபான்மையினரை திட்டமிட்ட வகையில் ஒழிப்பதற்கு இனவாதிகள் இவ்வாறான செயற்பாடுகளை முன்னெடுக்கின்றனரா என்ற சந்தேகத்தை ஏற்படுத்துவதாகவும், பெரும்பான்மையின தேரர் ஒருவர் நீதித்துறையின் செயற்பாடுகளை விமர்சிப்பதும் அதை மதிக்காமல் அதற்கு எதிராக செயற்பட முனைவதும் இலங்கையின் நீதிக்கட்டமைப்பையே கேள்விக்குட்படுத்தும் விடயம் என்பதையும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
இலங்கையில் சிறுபான்மையினருக்கு ஒரு சட்டம் பெரும்பான்மையினருக்கு ஒரு சட்டம் என்பதில்லை என்றும் குறிப்பிட்ட கிழக்கு மாகாண முதலமைச்சர், தேரராக இருந்தாலும், ஐயராக இருந்தாலும், பாதிரியாராக இருந்தாலும், மௌலவியாக இருந்தாலும் சட்டம் அனைவருக்கும் சமமானது என்பதை நினைவில் வைத்துக் கொள்ள வேண்டும் என்றும் தெரிவித்துள்ளார்.