எதிர்வரும் 27 ஆம் நாள் மாவீரர் நாளை தமிழ் மக்கள் விளக்கேற்றி நினைவுகூர அரசாங்கம் அனுமதிக்க வேண்டும் என்று தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறிதரன் கோரிக்கை விடுத்துள்ளார்.
நாடாளுமன்றில் இன்று இந்த கோரிக்கையை விடுத்து உரையாற்றிய அவர், போரில் உயிரிழந்த எமது பிள்ளைகளின் உருவப் படங்களை வீட்டில் வைத்து நினைவுகூர முடியாத நிலைமையே தற்போதும் காணப்படுவதைச் சுட்டிக்காட்டியுள்ளார்.
இந்த நிலையில், எதிர்வரும் 27ஆம் நாளான மாவீரர் நாளில் தமிழர்கள் தங்களுடைய பிள்ளைகளை நினைவுகூர்ந்து அவர்களுக்கு விளக்கேற்றுங்கள் என்றும், மாவீரர் துயிலும் இல்லங்களில் விளக்கேற்றுங்கள் என்றும் நாட்டு மக்களுக்கு தற்போதைய அரசாங்கம் செய்தி சொல்லுமேயானால், நல்லிணக்கத்திலும் பாரிய மாற்றத்தை எதிர்பார்க்க முடியும் என்றும் அவர் விபரித்துள்ளார்.
அதேவேளை இறுதி போரில் பாதுகாப்புப் படையினரிடம் ஒப்படைக்கப்பட்டவர்களுக்கு என்ன நடந்தது என்பது தொடர்பில் இதுவரை எந்தத் தகவலும் இல்லாத நிலையில், இன்னமும் அவர்களுக்காக காத்திருக்கும் உறவுகளுக்கான பதில் எப்போது கிடைக்கப் போகிறது என்றும் அவர் அரசாங்கத்திடம் கேள்வி எழுப்பியுள்ளார்.
பொறுப்புக்கூறல் பொறிமுறையில் வெளிநாட்டு நீதிபதிகளை ஏற்க முடியாது என சனாதிபதி கூறியுள்ளதையும் சுட்டிக்காட்டிய சிறிதரன், குற்றங்களை இழைத்தவர்களே விசாரணைகளை நடத்தும் போது தமிழர்களுக்கு எப்படி நீதி கிடைக்கும் என்றும் ஆதங்கம் வெளியிட்டுள்ளார்.
தமிழ் மக்களுக்கு நீதி கிடைக்க வேண்டும் என்பதனாலேயே அனைத்துலக நீதிபதிகளைக் கொண்டதாக விசாரணைக்குழு அமைக்கப்பட வேண்டும் என வலியுறுத்தி வருவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
ஐ.நா மனித உரிமைகள் பேரவையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டதுடன், இதற்கு அரசாங்கமும் இணங்கியிருந்தது என்ற போதிலும், இதுவரை எதுவும் நடக்கவில்லை என்றும் அவர் விசனம் வெளியிட்டுள்ளார்.
தமிழர் தாயகப் பகுதிகளில் நிறுவப்பட்டிருக்கும் வெற்றிச் சின்னங்கள் அவர்களுக்கு இழப்புக்களை நினைவு படுத்தும் அதேநேரம், தாம் ஆக்கிரமிக்கப்படுகிறோம் என்ற எண்ணப்பாட்டையே தோற்றுவிக்கிறது என்றும் அவர் விபரித்துள்ளார்.
நாட்டில் நல்லிணக்கமும் சமாதானமும் ஏற்பட வேண்டுமாயின் மனங்களில் மாற்றம் ஏற்பட வேண்டும் என்றும் குறிப்பிட்டுள்ள சிறிதரன், தமிழர்களின் விடுதலைப் போராட்டத்தை தொடர்ந்தும் பயங்கரவாதமாக சித்தரிக்கக் கூடாது என்றும், பயங்கரவாதம் என்ற பதத்தினை அரசாங்கம் நீக்க வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளார்.