இடம்பெயர்ந்த முஸ்லிம் மக்கள் வடக்கில் மீள் குடியேற்றப்பட வேண்டுமென தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் தெரிவித்துள்ளார்.
இன்றைய நாடாளுமன்ற அமர்வில் உரையாற்றும் போதே இவ்வாறு தெரிவித்துள்ள அவர், வடக்கில் முஸ்லிம்கள் குடியேறுவதனை தமிழர்கள் விரும்பவில்லை என்ற ஓர் எண்ணக்கரு முஸ்லிம்கள் மத்தியில் காணப்படுவதாகவும் குறிப்பிட்டுள்ளார்.
வடக்கிலிருந்து இடம்பெயர்ந்த முஸ்லிம்கள் மீளவும் வடக்கில் குடியேற வேண்டுமென தமிழர்கள் விரும்புவதாகவும், தமிழர்கள் மற்றும் தமிழ் பேசும் மக்களின் பிரச்சினைகளுக்கு தீர்வு காண அரசாங்கத்துடன் இணைந்து செயற்பட விரும்புவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
புதிய அரசியல் சாசனமொன்றின் தேவை எழுந்துள்ளதாகவும் அதனை அரசாங்கம் பூர்த்தி செய்யும் என எதிர்பார்ப்பதாகவும் குறிப்பிட்டுள்ள அவர், ஐக்கிய இலங்கைக்குள் அனைத்து மக்களினாலும் ஏற்றுக்கொள்ளக் கூடிய வகையில் புதிய அரசியல் சாசன தீர்வுத் திட்டம் அமைய வேண்டுமெனவும் வலியுறுத்தியுள்ளார்.
நல்லிணக்கம், சனநாயகம், சுதந்திரத்தை வலுப்படுத்தல் மற்றும் தேசிய சமாதானத்தை நோக்கி, தமிழ் தேசிய கூட்டமைப்பு முன்னோக்கி செல்லும் என்றும் இரா.சம்பந்தன் தெரிவித்துள்ளார்.
ஐக்கிய தேசியக் கட்சி மற்றும் சிறீலங்கா சுதந்திரக் கட்சி தலைமையிலான தேசிய அரசாங்கம் நாட்டினை ஒரு தெளிவான பார்வைக்கு இட்டுச் செல்ல வழிவகுக்கும் அதேவேளை, நாடு தற்போது புதிய அரசாங்கத்தின் வழிகாட்டலின் கீழ் செயற்ப்பட்டு வருவதாகவும் அவர் விபரித்துள்ளார்.
இந்த நிலையில் நல்லாட்சி அரசாங்கம் சட்டம் ஒழுங்கு, சுதந்திரம் அனைத்தையும் நிலைநிறுத்தி நாட்டை சமாதானத்தை நோக்கி கொண்டுச் செல்ல முயற்சித்து வருகின்றது என்றும் எதிர்க்கட்சி தலைவருமான இரா.சம்பந்தன் மேலும் தெரிவித்துள்ளார்.