நாட்டின் பாதுகாப்புச் செயற்பாடுகளில் ஈடுபடவேண்டிய இராணுவம், வடக்கில் முன்பள்ளிகளை நடாத்த வேண்டியதன் அவசியம் என்னவென்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சிறிதரன் நாடாளுமன்றில் கேள்வியெழுப்பியுள்ளார்.
நேற்றைய நாடாளுமன்ற அமர்வின் போது இவ்வாறு கேள்வி எழுப்பிய சிறிதரன், வடக்கில் இராணுவத்தினரால் நடாத்தப்படும் முன்பள்ளிகளில் கற்கும் சிறார்களின் ஆடைகளில் இராணுவத்தின் இலச்சினைகள் பொறிக்கப்பட்டுள்ளமைக்கான புகைப்பட ஆதாரங்களையும் அவையில் உள்ளவர்களுக்கு காட்டியதுடன், அதனை சபாநாயகரின் கவனத்திற்கும் கொண்டுசென்றுள்ளார்.
இத்தகைய ஒரு இராணுவ சூழலுக்குள்ளேயே வடக்கின் வருங்கால சந்ததி கல்வி கற்று வருகின்றதென சுட்டிக்காட்டிய சிறிதரன், முன்பள்ளிகளுக்காக அரசாங்கம் வழங்கும் நிதியை ஏன் கல்வியமைச்சினூடாக வழங்கக் கூடாதென்றும் வினவியுள்ளார்.
முன்பள்ளி சிறார்களின் ஆடைகளில் இவ்வாறு இராணுவ அடையாளங்கள் பொறிக்கப்பட்டுள்ளமை வன்முறைகளை தூண்டிவிடும் நடவடிக்கையாக அமையும் என்றும் சுட்டிக்காட்டிய அவர், இந்த எண்ணம் சிறார்களின் மனதில் ஆழமாக பதியும்போது அவர்கள் இன்னும் 10 ஆண்டுகளுக்கு பிறகு ஆயுதம் ஏந்த மாட்டார்கள் என்ற உறுதிமொழியை வழங்க முடியுமா என்றும் கேள்வி எழுப்பியுள்ளார்.