புதிய யாப்பின் ஊடாக மாகாண சபைகளுக்கு அதிகாரங்களை வழங்க வேண்டிய அவசியம் இல்லையென தெரிவித்துள்ள ஜாதிக ஹெல உறுமய, அதிகாரங்கள் மத்திய அரசாங்கத்திற்கும் பிரதேச சபைகளுக்கும் இடையில் பகிரப்பட வேண்டுமென வலியுறுத்தியுள்ளது.
கொழும்பில் அமைந்துள்ள ஜாதிக ஹெல உறுமய கட்சியின் தலைமையகத்தில் இடம்பெற்ற ஊட கவியலாளர் சந்திப்பில் கருத்து வெளியிட்ட அக்கட்சியின் தலைவர் பாட்டலி சம்பிக்க ரணவக்க, ஆளுநர்களின் அதிகாரத்தை மாகாண முதலமைச்சருக்கு வழங்கவேண்டிய அவசியம் இல்லையெனவும் தெரிவித்துள்ளார்.
மத்திய அரசாங்கம், மாகாண மற்றும் பிரதேச சபைகளுக்கு என அதிகாரங்கள் மூன்றாக பகிரப்பட வேண்டுமென பலர் தெரிவிக்கின்ற போதிலும், அதிகாரங்களை இரண்டு தளங்களில் பகிரப்படுவதையே நாம் விரும்புவதாகவும், அதுவே செயற்பாட்டு வடிவத்திலும் சரியானதாக அமையும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
மாகாண ஆளுநருக்கு காணப்படும் அதிகாரங்களை மாகாண முதலமைச்சருக்கு வழங்கும் விடயமானது இந்த யாப்பின் ஊடாக செய்யக்கூடிய ஒரு விடயமல்ல எனவும், 88ஆம் ஆண்டு மாகாண சபை முறைமை கொண்டுவரப்பட்ட காலத்திலிருந்து இதுவரை எந்தவொரு ஆளுநரும் மக்களின் எண்ணங்களுக்கு எதிராக செயற்படடவில்லை என்றும் அவர் கூறியுள்ளார்.
உலகில் மூன்று வகையான ஆட்சி முறைமைகளே காணப்படுவதாகவும், பூரணமான நிறைவேற்று அதிகாரமுடைய சனாதிபதி முறைமை அமெரிக்கா போன்ற நாடுகளில் காணப்படுவதாகவும், அடுத்தது வெஸ்ட்மினிஸ்டர் முறைமை இந்தியா, பிரித்தானியா போன்ற நாடுகளில் காணப்படுவதாகவும், மூன்றாவது நிறைவேற்று அதிகாரமுடைய சனாதிபதி மற்றும் நாடாளுமன்றத்தை உள்ளடக்கிய இந்த கலப்பு முறைமையே இலங்கையில் காணப்படுவதாகவும், இதுவே இலங்கைக்கு பொருத்தமான முறையெனவும் அவர் கருத்து வெளியிட்டுள்ளார்.
இரண்டு முறை வழங்கப்படும் மக்கள் தீர்ப்பிற்கு அமைய அதிகாரத்திற்கு வருபவர்கள் ஒன்றிணைந்து நாட்டை ஆட்சிசெய்ய முடியும் எனவும், ஆகவே நிறைவேற்று அதிகார சனாதிபதி முறைமையை இல்லாமல் செய்வது தொடர்பில் தமக்கு உடன்பாடில்லை என்ற போதிலும், அதனை செய்யவேண்டுமாயின் தேர்தல் முறைமையில் மாற்றத்தை கொண்டுவந்து அதனை செய்ய வேண்டும் எனவும் சம்பிக்க ரணவக்க மேலும் தெரிவித்துள்ளார்.