வீதி விபத்துக்களில் உயிரிழந்த பாதசாரிகளின் எண்ணிக்கை கடந்த எட்டு ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு இந்த ஆண்டில் அதிகரித்துள்ளதாக ஒன்ராறியோ மாகாண காவல்த்துறையினர் தெரிவித்துள்ளனர்.
ஒன்ராறியோவில் மாகாண காவல்த்துறையினரின் கண்காணிப்பில் உள்ள வீதிகளில் மட்டும், இந்த ஆண்டில் இதுவரை 30 பாதசாரிகள் பலியாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
கடந்த ஆண்டு முழுவதுமான காலப் பகுதியில் 25 பாதசாரிகள் மட்டுமே வீதி விபத்துக்களில் உயிரிழந்துள்ள நிலையில், இந்த ஆண்டு முடிவடைவதற்கு இன்னமும் ஒரு மாதத்திற்றும் அதிகமான காலப்பகுதி இருக்கும் நிலையில், இதுவரை 30 பாதசாரிகள் உயிரிழந்து விட்டதனை அதிகாரிகள் சுட்டிக்காட்டியுள்ளனர்.
இதற்கு முன்னர் இவ்வாறு அதிக அளவில் பாதசாரிகள் உயிரிழந்த சம்பவம் 2007ஆம் ஆண்டிலேயே பதிவாகியுள்ளதாகவும், அந்த ஆண்டில் 37பாதசாரிகள் வீதி விபத்துக்களில் உயிரிழந்ததாகவும் ஒன்ராறியோ மாகாண காவல்த்துறையினர் விபரம் வெளியிட்டுள்ளனர்.
எனவே பாதசாரிகள் குறித்து மிகவும் விழிப்புடன் இருக்குமாறும், வாகனங்களைச் செலுத்திச் செல்லும் போது நடந்து செல்வோர் குறித்து அதிக அக்கறை காட்டுமாறும் காவல்த்துறையினர் வாகன சாரதிகளிடம் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.