வடக்கில் இடம்பெறும் கஞ்சா கடத்தலை இராணுவம் மற்றும் காவல்த்தறையினரால் ஏன் கட்டு ப்படுத்த முடியவில்லை என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் முல்லைத்தீவு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சாந்தி சிறிஸ்கந்தராஜா கேள்வியெழுப்பியுள்ளார்.
நாடாளுமன்றத்தில் இன்று இடம்பெற்ற வரவு செலவுத் திட்டம் மீதான குழுநிலை விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே இதனைத் தெரிவித்துள்ள அவர், வடக்கு கிழக்குப் பகுதியில் சட்டம், நீதி, ஒழுங்கு, எவ்வாறான முறையில் உள்ளது என்பதையும், இதற்கு ஏன் அச்சுறுத்தல் வருகின்றது என்பதையும், இவற்றை ஏன் இங்கு நிலைநாட்ட முடியாமல் உள்ளது என்பதனையும் சீர்தூக்கிப் பார்க்க வேண்டியவர்களாக உள்ளோம் என்றும் குறிப்பிட்டுள்ளார்.
வடக்கு கிழக்கில் சட்டம், நீதி எதனை நிலைநாட்டியுள்ளதாகக் கேள்வியெழுப்பிய அவர், வடக்கில் பல்வேறு பிரச்சினைகளை பொதுமக்கள் எதிர்கொள்கின்ற நிலையில் சட்டம், நீதி, நியாயம் என்பன கிடைக்காது ஏமாற்றப்பட்டவர்களாக வாழ்வதாகவும், வடக்கு கிழக்கு மக்களை ஏமாற்றுகின்ற வகையில், வேலைவாய்ப்புக்களை வழங்குவதில் மக்கள் புறந்தள்ளப்படுவதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
வடக்கு, கிழக்கு மக்களுக்கு நிம்மதியான வாழ்க்கை முறை அமைத்துக் கொடுக்கப்படவில்லை என்றும், கிளிநொச்சி உப்பளத் தொழிற்சாலை, மன்னார் உப்பளத் தொழிற்சாலை என்பன தனியாருக்கு விற்பனை செய்யப்படுவதாகவும் குற்றஞ்சாட்டியுள்ள அவர், இவற்றுக்கு எதிராக மக்கள் எதிர்ப்பு போராட்டத்தை நடத்துவதற்கு முனைவதாகவும் தெரிவித்துள்ளார்.
வடக்கில் ஒரு இலட்சத்திற்கும் அதிகமான இராணுவம் உள்ளதுடன், அவர்களுக்கு வரவு செலவுத் திட்டத்தில் 25 ஆயிரம் கோடி ரூபா நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ள நிலையில், வடக்கு கிழக்கில் சட்டம், பாதுகாப்பு கேள்விக்குறியாகியுள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
முல்லைத்தீவு – கொக்குளாய் பகுதியில் தனியார் ஒருவருடைய காணியில் புத்தர் சிலை நிர்மாணிக்கப்பட்டு வரும் நிலையில், இதுவரை காலமும் இதுதொடர்பாக நீதிமன்றங்கள், காவல் நிலையங்கள் சென்று பழக்க ப்படாத மக்கள், தங்களுடை உரிமைகளைப் பெற்றுக்கொள்வதற்காக காவல் நிலையங்கள் மற்றும் நீதிமன்றங்களுக்கு சென்றுவர வேண்டிய சூழ்ல் ஏற்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
போர் இடம்பெற்ற காலத்தில, வடக்கு கிழக்கில் முன்னர் சுதந்திரமாக வாழ்ந்த பெண்களுக்கு, போர் முடிவடைந்த பின்னர், பாதுகாப்பு இல்லை என்றும், சிறு பிள்ளைகள் கூட வெளியில் செல்வதற்கு பாதுகாப்பு இல்லை என்றும் கவலை வெளியிட்டுள்ள அவர், பல்வேறு அச்சுறுத்தல்களுக்கு மத்தியில் தமது வேலை வாய்ப்புக்களை தமிழ் ம்ககள் இழந்து நிற்பதாகவும் தெரிவித்துள்ளார்.
வடக்கில் போர் இடம்பெற்ற காலத்தில் குடிபோதை, குடும்ப முரண்பாடுகள், பாடசாலை மாணவர்களுக்கு இடையில் முரண்பாடுகள் என எவையும் இருக்கவில்லை எனவும், தற்பொழுது வடக்கில் இராணுவம், காவல்த்துறை என்பன அதிக அளவில் இருந்தும், நீதி நியாயத்தை, ஒழுக்கத்தை நிலை நாட்ட முடியாமல் உள்ளது என்றால், இதன் உட்கருத்து என்ன என்றும் சாந்தி சிறிஸ்கந்தராஜா கேள்வியெழுப்பியுள்ளார்.