நாட்டின் அதி உச்ச பெறுமதியான இரகசியங்களைக் கொள்ளையிடும் வகையில், கனேடிய இரகசியங்கள் மீது ரஷ்யா, சீனா ஆகிய நாடுகள் குறிவைத்து வருவதாக கனேடிய உளவு நிறுவனமான CSIS எனப்படும் கனேடிய பாதுகாப்பு புலனாய்வு சேவைகள் அமைப்பு தெரிவித்துள்ளது.
பொதுவாகவே பாதுகாப்பு அச்சுறுத்தல்களை குறிப்பிட்டுச் சுட்டிக்காட்டுவதை மிகக் குறைந்த அளவிலேயே மேற்கெர்ணடுவரும் CSIS, பகிரங்கமாக இந்த எச்சரிக்கையினை விடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
இஸ்லாமிய ஜிகாத்திய சித்தாந்தங்களால் தூண்டப்படும் இனவாத செயற்பாடுகளையும் கட்டுப்படுத்த வேண்டிய சூழ்நிலையை கனடா எதிர்கெர்ண்டுவரும் நிலையில், நீண்டகாலமாக எதிர்நோக்கிவரும் இவ்வாறான உளவுத்துறை அச்சுறுத்தல்களும் தற்போது கவலையளிக்கும் வகையில் அதிகரித்துள்ளதாகவும் அது தெரிவித்துள்ளது.
குறிப்பாக ரஷ்யா மற்றும் சீனா ஆகிய நாடுகள் கனடாவின் மிகவும் பெறுமதி வாய்ந்த, அதி முக்கியமான இரகசியங்களையும், உயர் தொழில்நுட்ப இரகசியங்களையும், அரசாங்க உத்தியோகபூர்வ நடைமுறைகளையும் இலலக்கு வைத்து செயற்பட்டு வருவதாகவும் அது விபரம் வெளியிட்டுள்ளது.
எனினும் எதிர்கொள்ள நேர்ந்துள்ள அச்சுறுத்தல்கள் தொடர்பில் விலாவாரியான விபரங்கள் எதனையும் வெளியிடாத கனேடிய புலனர்யவுத் துறையின் பேச்சாளர், இவ்வாறான சம்பவங்கள் தொடர்பில் தமது கரிசனை தற்போது மிகவும் அதிகரித்துள்ளதாக கூறியுள்ளார்.
ஒரு சில உலக நாடுகளின் பாரம்பரிய உளவு நடவடிக்கைகளின் இலக்காக இன்னமும் கனடா விளங்குவதாகவும், பல்வேறு இரகசிய வழிமுறைகள் மூலமும் கனடாவின் அரசியல், பொருளாதார, இராணுவத் தகவல்களை அவ்வாறான நாடுகள் சேகரித்து வருவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
சில நாடுகள் நேரடியான உளவாளிகள் மூலம் இதனை மேற்கொண்டுவரும் நிலையில், சில நாடுகள் கனடாவின் பொருளாதார, தந்திரோபாய நலன்கள் இலக்குகளில் தலையீடுகளை மேற்கொண்டும், சமூக அமைப்புகள் ஊடாகவும், புலம்பெயர் சமூகங்கள் மூலமாகவும் இவ்வாறான நடவடிக்கைகள் முன்னெடுத்து வருவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.