சீனாவின் தணிக்கைத் தேவைகளைப் பூர்த்தி செய்யும் சிறப்பு மென்பொருளைத் தயாரிப்பதில் ஃபேஸ்புக் நிறுவனம் மும்முரமாக ஈடுபட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
சீன ஊடக மற்றும் பொழுதுபோக்கு சந்தையில் ஃபேஸ்புக் மீண்டும் நுழைந்துகொள்ளும் வகையில், இந்த சிறப்பம்சம் கொண்ட மென்பொருள் உருவாக்கப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.
இந்த தகல் குறித்த நிறுவனத்தில் பணியாற்றி வரும் பணியாளர்களிடம் இருந்து தமக்கு கிடைத்துள்ளதாக நியூ யோர்க் டைம்ஸ் நாளேடு தெரிவித்துள்ளது.
ஆனால் இந்த மென்பொருளின் இருப்பு குறித்து உறுதி செய்யவோ, அல்லது மறுப்பு தெரிவிக்கவோ ஃபேஸ்புக் நிறுவனம் மறுப்புத் தெரிவித்துள்ளது.
எனினும் சீனா குறித்து புரிந்து கொள்வதற்கும், அறிந்து கொள்வதற்கும் தாங்கள் நேரம் செலவிட்டு வருவதாக குறிப்பிட்டுள்ளது.
1.8 பில்லியன் தீவிர பயன்பாட்டாளர்களை கொண்ட ஃபேஸ்புக் வலைதளம், தற்போது தான் பங்கு வகிக்கும் சந்தைகளைத் தாண்டி உலகெங்கும் உள்ள பல பகுதிகளுக்கும் நுழைய வேண்டும் என்பதற்காக கடுமையான முயற்சிகளை எடுத்து வருவதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.