போரில் உயிர்நீத்த தமது உறவினர்களை யார் எந்த பெயரைக் கொண்டு நினைவுகூர்ந்தாலும் பிரச்சினை இல்லை எனவும், ஆனால் மாவீரர்களை நினைவுகூர முடியாது என்றும் அமைச்சரவை பேச்சாளரான அமைச்சர் ராஜித சேனாரத்ன தெரிவித்துள்ளார்.
வடமாகாண சபை உறுப்பினர் சிவாஜிலிங்கம் தலைமையில் கடந்த முறை முன்னெடுக்கப்பட்ட மாவீரர் நினைவுகூரலில் குறைந்த எண்ணிக்கையிலானவர்களே கலந்துகொண்டதாகவும், இம்முறை எத்தனை பேர் கலந்துகொள்வார்கள் என்பதை தாம் பார்த்துக் கொண்டிருப்பதாகவும் அவர் சவால் விடுத்துள்ளார்.
போரின் போது தமிழ் மக்கள் பலர் பலியாகியுள்ளமையால், உயிர்நீத்த மக்களை நினைவுகூருவதில் எந்தப் பிரச்சினையும் இல்லை என்ற போதிலும், உயிர்நீத்த மக்களையே நினைவுகூருவதாக வடமாகாண சபை உறுப்பினரான சிவாஜிலிங்கமும் கூறியுள்ளமையால், உயிர்நீத்த மக்களை எந்தப் பெயரைக் கொண்டு நினைவுகூர்ந்தாலும் பிரச்சினையில்லை எனவும், அதனை தடுக்கவும் தம்மால் முடியாது என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
கடந்த முறை மாவீரர் நினைவேந்தலை சிவாஜிலிங்கம் முன்னெடுத்தபோது அதில் 13 பேரே கலந்து கொண்டிருந்ததாகவும், இம்முறை எத்தனை பேர் கலந்துகொள்வார்கள் என்பதை பார்க்கதானே போகின்றோம் என்றும் அவர் ஏளனம் வெளியிட்டுள்ளார்.
கடந்த தேர்தலின்போது சிவாஜிலிங்கம் மற்றும் சுரேஸ் பிரேமச்சந்திரன் ஆகியோர் இருந்த ஆசனத்தையும் இழந்துள்ள நிலையில், கொழும்பிலிருந்து சென்ற சுமந்திரன் தேர்தலில் வெற்றிபெற்றுள்ளதாகவும் தெரிவித்துள்ள அவர், தமிழ் மக்களின் அரசியல் தெரிவுகளையும் இகழ்ச்சிக்குள்ளாக்கியுள்ளார்.
அதேவேளை வடமாகாண முதலமைச்சர் விக்னேஸ்வரன் உச்சநீதிமன்ற நீதியரசராக பணியாற்றியவரைப் போன்று இன்று செயற்படுவதில்லை எனவும், இவ்வாறான கீழ்த்தரமான அரசியல் நடத்தைதான் வடக்கு, கிழக்கில் வாக்குகளை சிதறடிப்பதற்காக பயன்படுத்தப்பட்டதாகவும் அமைச்சர் ராஜித சேனாரத்ன மேலும் தெரிவித்துள்ளார்.
இதேவேளை போரில் உயிர்நீத்த உறவுகளை மாவீரர் என்ற பெயரில் நினைவுகூர்வதால் தற்போதைய நல்லிணக்க முயற்சிகளே பாதிப்படையும் என்று ஐக்கிய தேசியக் கட்சியின் அமைச்சராக உள்ள டி.எம். சுவாமிநாதனும் தெரிவித்துள்ளார்.
மாவீரர்களை நினைவுகூர்வதால் தமிழ் – சிங்கள மக்களிடையே ஏற்படுத்தப்பட்டுவரும் நல்லிணக்கம் பாதித்துவிடும் எனவும், எனவே உயிர்நீத்த உறவுகளை மாவீரர் என்ற பெயரில் நினைவுகூராமல் அவர்களை அஞ்சலிப்பதே சிறந்தது என்றும் அவர் குறிப்பிட்டுள்ள அவர், அண்மையிலும் ஒட்டுமொத்த தமிழ் மக்கள் உட்படை அனைவரையும் அவமதிக்கும் வகையில் நடந்துகொண்ட பெளத்த பிக்குவின் செயற்பாடுகள் தொடர்பில் கருத்துக்கள் எதனையும் வெளியிடவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.