இஸ்ரேல் நாட்டின் வடபகுதியில் உள்ள ஹைஃபா நகரில் ஏற்பட்டுள்ள காட்டுத் தீ காரணமாக சுமார் 80,000இற்கும் அதிகமானவர்கள் அங்கிருந்து வெளியேற்றப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
இந்த காட்டுத்தீ கடந்த மூன்று நாட்களாகக் கொழுந்துவிட்டு எரிந்துகொண்டிருப்பதாகவும், வறண்ட வானிலையும் கடுமையான காற்றும் காட்டுத் தீயின் வேகத்தை அதிகரித்தமையால் நேற்று நிலைமை மேலும் மோசமானதாகவும் கூறப்படுகிறது.
இதேவேளை இந்த தீ பரவல் சம்பவங்களில் சில வேண்டுமென்றே தூண்டப்பட்டவை என்று தாங்கள் நம்புவதாக கூறும் அதிகாரிகள், அரசியல் நோக்கம் கொண்ட பயங்கரவாதச் செயலாகக் கூட அது இருக்கலாம் என்றும் சந்தேகம் வெளியிட்டுள்ளனர்.
அத்துடன் வேண்டுமென்றே தீ வைத்த சந்தேகத்தின் பேரில் 12 பேரை அந்த நாட்டுக் காவல்த்துறையினர் கைது செய்துள்ளனர்.
இதேவேளை கொழுந்துவிட்டு எரிந்துகொண்டிருக்கும் இந்த காட்டுத் தீயைக் கட்டுப்பாட்டினுள் கொண்டுவரும் பொருட்டு, இஸ்ரேலுக்கு உதவ கிரேக்கம், சைப்ரஸ், க்ரோஷியா, துருக்கி, ரஷ்யா உள்ளிட்ட நாடுகள் பல முன்வந்துள்ளன.