சனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கும் எதிர்க்கட்சி தலைவர் இரா.சம்பந்தன் தலைமையிலான தமிழ்த் தேசியக் கூட்டமைபின் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கும் இடையில் இன்று சந்திப்பொன்று இடம்பெற்றுள்ளது.
நாடாளுமன்றக் கட்டிடத் தொகுதியில் இடம்பெற்ற இந்த சந்திப்பின் போது, வடக்கு மற்றும் கிழக்கில் உள்ள தமிழ் மக்கள் தற்போதைய நாளாந்த வாழ்க்கையில் எதிர்கொண்டு வரும் பல்வேறு பிரச்சினைகள் தொடர்பில் சனாதிபதியிடம் எடுத்துக் கூறியுள்ளதாக இரா.சம்பந்தன் தெரிவித்துள்ளார்.
குறிப்பாக காணி தொடர்பான பிரச்சினை, அரசியல் கைதிகள் பிரச்சினை, அபிவிருத்தி தொடர்பான பிரச்சினை மற்றும் வடக்கு கிழக்கில் நிலை கொண்டுள்ள இராணுவம் தொடர்பான பிரச்சினைகள் தொடர்பில் சனாதிபதியுடன் பேசியிருந்ததாகவும் அவர் தகவல் வெளியிட்டுள்ளா.
வடக்குக் கிழக்கில் இராணுவம் நிலைகொண்டுள்ளதால் ஏற்பட்டுள்ள பொருளாதார பிரச்சினை மற்றும் அபிவிருத்தி தொடர்பான பிரச்சினைகள் குறித்து சனாதிபதிக்கு தாம் தெளிவு படுத்தியுள்ளதாகவும், இந்த விடயங்கள் தொடர்பில் விரைவில் பிரதமரையும் சந்திக்க இருப்பதாகவும் இரா.சம்பந்தன் தெரிவித்துள்ளார்.
அத்துடன் சனாதிபதியுடனான இன்றைய சந்திப்பின் போது புதிய அரசியலமைப்பு குறித்தும் பேசப்பட்டுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.