வடக்கில் மாணவர்களுக்கு சிங்கள பாடத்தை கற்பிப்பதற்கு ஆசிரியர்கள் எவரும் இல்லை எனவும், எனவே இது தொடர்பில் வடமாகாண முதலமைச்சர், கல்வியமைச்சர் ஆகியோர் கவனத்தில் கொள்ளவேண்டுமென வடமாகாண ஆளுநர் றெஜினோல்ட் குரே தெரிவித்துள்ளார்.
வலிகாம கல்வி வலயத்திற்கு உட்பட்ட பாடசாலை ஆசிரியர்கள்,அதிபர்களை கௌரவிக்கும் நிகழ்வு இன்று சுன்னாகம் இராமநாதன் மகளிர் கல்லூரியில் நடைபெற்ற நிலையில், இதில் பிரதம அதிதியாக கலந்து கொண்டு உரையாற்றும்போதே வடமாகாண ஆளுநர் ரெஜினோல்ட் குரே இதனைத் தெரிவித்துள்ளார்.
முப்பது ஆண்டுகால போரில் எந்த தலைவர்களும் வெற்றிபெறவில்லை, என்றும் அதனால் ஏற்பட்ட இழப்புக்கள், துன்பம் என்பவற்றிலிருந்து மீண்டு வருவதற்கு மாணவர்கள் நன்றாக கற்க வேண்டும் எனவும், கல்வியால் மட்டுமே இந்த உலகை வெற்றி கொள்ள முடியும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
வெளிமாவட்டத்தில் தமிழ் சொல்லி கொடுப்பதற்கு ஆசிரியர்கள் உள்ள போதிலும், வடக்கு மாகாணத்தில் சிங்களம் சொல்லிக் கொடுப்பதற்கு ஆசிரியர்கள் இல்லை என்றும், எனவே இது தொடர்பாக கல்வி அமைச்சர் ,வடக்கு முதல்வர் ஆகியோர் நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்றும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
இதேவேளை நுவரெலியா – தலவாக்கலை பகுதியில் இனந்தெரியாத நபர்களின் தாக்குதலில் பாடசாலை மாணவன் ஒருவர் காயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டுள்ளதாகவும், சிங்கள மொழி பாடசாலையில் கல்வி கற்கும் 14 வயதுடைய தமிழ் மாணவன் மீதே இவ்வாறு தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
கடந்த 23 ஆம் நாள் குறித்த மாணவன் பாடசாலையில் இருந்து தனது வீட்டுக்கு செல்லும் போது இனந்தெரியாத நபர்கள் தாக்கியதாகவும், இதனையடுத்த மயக்கமடைந்த மாணவன் பெற்றோருக்கு அறிவித்த நிலையில் காவல்த்துறையிடம் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.
குறித்த அந்த தமிழ் மாணவரைத் தாக்கிய நபர்கள், குறித்த மாணவனின் வலது கரத்தில் ‘தமிழ்’ என்று எழுதிவிட்டு சென்றதாகவும் அந்த மாணவன் காவல்த்துறையினரிடம் தெரிவித்துள்ளார்.
லிந்துலை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ள மாணவனை மேலதிக சிகிச்சைக்காக நுவரெலியா மாவட்ட வைத்தியசாலைக்கு அனுப்பி வைக்க நடவடிக்கை மேற்கொள்ளப்படவுள்ளதாக கூறப்படுகிறது.