தமிழர் தாயகப் பிரதேசங்களில் மாவீரர் நாள் நிகழ்வுகளை நடாத்துவதற்கான தயார்படுத்தல்களில் தமிழ் மக்கள் மும்முரமாக ஈடுபட்டுள்ளனர்.
தமிழீழ விடுதலைக்காக உயிர்நீத்த மாவீரர்களை நாளை நவம்பர் 27இல் நினைவு கூர்வதற்கு தமிழர் தாயகப் பகுதிகளில் முன்னெடுக்கப்படும் தீவிரமான ஏற்பாடுகளில் பொதுமக்கள் மட்டுமல்லாது தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற மற்றும் மாகாணசபை உறுப்பினர்கள் உள்ளிட்ட பலரும் முனைப்புடன் கலந்துகொண்டுள்ளனர்.
இவர்கள் அனைவரும் இராணுவ ஆக்கிரமிப்பில் இல்லாத மாவீரர் துயிலுமில்லங்களை துப்புரவு செய்யும் சிரமதானம் பணிகளில் கடந்த இரண்டு நாட்களாக ஈடுபட்டு வருகின்றனர்.
2008ஆம் ஆண்டுக்குப் பின்னர் சுமார் 8 ஆண்டுகள் கடந்து இந்த துயிலுமில்லங்களில் மாவீரர் நாள் நிகழ்வுகளை முன்னெடுப்பதற்கான ஏற்பாடுகளில் தமிழ் மக்கள் இம்முறை வெளிப்படையாவே ஈடுபட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
தமிழர் தாயகமான வடக்கு, கிழக்கு பகுதி சிறிலங்கா இராணுவத்தின் முழுமையான ஆக்கிரமிப்பின்கீழ் வந்த பின்னர், அனைத்து மாவீரர் துயிலுமில்லங்களும் சிறிலங்கா படையினரால் அழிக்கப்பட்டு, அங்கிருந்த மாவீரர்களின் வித்துடல்கள் விதைக்கப்பட்ட கல்லறைகளும், நடுகற்களும் சிதைக்கப்பட்டுள்ளன.
அதற்குப் பின்னரும், இந்த இடங்களில் தமிழ்மக்கள் நினைவுகூரல் நிகழ்வுகளை நடாத்தக் கூடாது என்பதற்காக, துயிலுமில்லங்களின் மீது ஆக்கிரமிப்பாளர்களின் படைத்தளங்கள் அமைக்கப்பட்டிருந்தன.
எனினும் கடந்த ஆண்டு இலங்கையில் ஏற்பட்ட ஆட்சி மாற்றத்தையடுத்து, வன்னியில் உள்ள சில துயிலுமில்லங்களில் இருந்து சிறிலங்கா படையினர் வெளியேறியுள்ளனர்.
இந்த நிலையிலேயே விடுவிக்கப்பட்ட கிளிநொச்சி மாவட்டத்திலுள்ள கனகபுரம், முழங்காவில் துயிலுமில்லங்கள், முல்லைத்தீவு மாவட்டத்திலுள்ள வன்னிவிளாங்குளம் துயிலுமில்லம், யாழ்.மாவட்டத்தில் உள்ள உடுத்துறை துயிலுமில்லம் என்பனவே மாவீரர் நாளுக்காக தயார்ப்படுத்தப்பட்டுள்ளன.
இந்த மாவீரர் துயிலுமில்லங்களில் நாளை மாலை மாவீரர்கள் நினைவாக சுடர் ஏற்றி வணக்கம் செலுத்துவதற்கு திட்டமிடப்பட்டு அதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.