தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரனின் பிறந்த நாளை கொண்டாடுவதும், மாவீரர் நாளைக் கடைப்பிடிப்பதும் சிறிலங்காவின் கறுப்பு தினமாகவே பார்க்கப்படவேண்டும் என்று ஜாதிக ஹெல உறுமய எனப்படும் சிங்கள பேரினவாத அமைப்பு தெரிவித்துள்ளது. தெரிவித்துள்ளது.
தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனின் பிறந்த நாளைக் கொண்டாடுவதன் மூலமும், மாவீரர் நாளை நினைவு கூருவதன் மூலமும் வடக்கின் தமிழ் மக்கள் சொல்ல நினைப்பது என்ன என்றும் ஜாதிக ஹெல உறுமயவின் ஊடகப் பேச்சாளர் நிஷாந்த ஸ்ரீ வர்ணசிங்க கேள்வியெழுப்பியுள்ளார்.
ஜாதிக ஹெல உறுமய கட்சியின் அலுவலகத்தில் நேற்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே இதனைத் தெரிவித்துள்ள அவர், போரில் உயிர்நீத்த மக்களை வடக்கில் நினைவுகூருவதற்கு சகல மக்களுக்கும் உரிமை உள்ள போதிலும், அதனை அவர்கள் மே மாதம் 17 ஆம் 18 ஆம் மற்றும் 19 ஆம் நாட்களிலேயே நினைவுகூர வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளார்.
தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கம் இயங்கிய காலத்தில் அந்த அமைப்பின் தலைவரின் அறிவிப்பின் பிரகாரம் கொண்டுவரப்பட்ட மாவீரர் நாளில், தமிழ் மக்கள் தமது உறவுகளை நினைவுகூரக்கூடாது என்றும் அவர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனின் பிறந்த நாள் கொண்டாடப்பட்டதும், மாவீரர் நாள் நினைவுகூரப்பட்டதும் சிறிலங்காவின் ஒரு கறுப்பு தினமாகவே கருதப்படுவதாகவும், விடுதலைப் புலிகளின் ஆயுதப் போராட்டம் மூலம் சிறிலங்கா சந்திக்க நேர்ந்த இழப்புக்களை இன்று வரையில் ஈடுகொடுக்க முடியாது உள்ளதாகவும் நிஷாந்த ஸ்ரீ வர்ணசிங்க குறிப்பிட்டுள்ளார்.
தமிழ், சிங்கள, முஸ்லிம் மக்களின் அமைதியையும் நட்புறவையும் இந்த நாடு இழக்கவும் இவர்கள் காரணமானவர்கள் என்றும் அவ்வாறான நபர்களை அனுட்டிப்பது மிகவும் மோசமான ஒரு விடயமாகவே கருதப்பட வேண்டும் என்றும் தெரிவித்துள்ளார்.
வடக்கில் கடந்த காலத்தில் இருந்து ஒரு சிலர் தொடர்ச்சியாக மாவீரர் நாளைக் கடைப்பிடித்து வருவதாகக்வும் குறிப்பிட்ட அவர், அரசியல்வாதிகள் தமது அரசியல் நோக்கத்துக்காக இவ்வாறு செயற்பட்டபோதிலும், யாழ். பல்கலைக்கழக மாணவர்களும் விடுதலைப் புலிகளை நினைவுகூரும் நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவது வருத்தத்தக்க விடயம் என்றும் தெரிவித்துள்ளார்.
இளம் சமுதாயம் இன்றும் இனவாத, பிரிவினைவாத, கொள்கையில் பயிற்றுவிக்கப்படுவதும், அவர்கள் மூலம் வடக்கின் பிரிவினை வாதக் கொள்கைகள் பலப்படுத்தப்படுவதும், நாட்டின் பயணத்தின் சரியான ஒன்றாக அமையாது என்றும், இந்தச் செயற்பாடுகள் மூலம் நாட்டில் மீண்டும் ஒரு குழப்பகரமான சூழல் உருவாக்கப்படவும் வாய்ப்புக்கள் உள்ளதாகவும், தமிழ் மக்கள் புத்திசாலித்தனமாக அரசியல் பாதையைத் தெரிவு செய்ய வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.