இலங்கையின் முன்னைய அரசாங்கத்தில் பிரதி அமைச்சராக இருந்த கருணா எனப்படும் விநாயகமூர்த்தி முரளிதரன் இன்று முற்பகல் நிதிக் குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
800 மில்லியன் ரூபா பெறுமதியான குண்டுதுளைக்காத அரச வாகனத்தை தவறாகப் பயன்படுத்தினார் என்று குற்றச்சாட்டின் பேரிலேயே, கருணாவை நிதிக் குற்றப் புலனாய்வுப் பிரிவு அதிகாரிகள் கைது செய்துள்ளனர்.
இந்தக் குற்றச்சாட்டுத் தொடர்பாக வாக்குமூலம் அளிப்பதற்காக நிதிக்குற்றப் புலனாய்வுப் பிரிவு முன்னர், இன்று காலை கருணா முன்னிலையாகியிருந்தமை குறிப்பிடத்தக்கது.
இதையடுத்தே அவரைக் கைது செய்யத காவல்த்துறையினர் நீதிமன்றில் முன்னிலைப்படுத்திய நிலையில், அவரை எதிர்வரும் டிசம்பர் 7ம் நாள் வரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
இதேவேளை தனது கைது தொடர்பில் கருத்து வெளியிட்டுள்ள அவர், தான் கொலை செய்து, கொள்ளையில் ஈடுபட்டு நீதிமன்றம் போகவில்லை எனவும், ஒப்படைக்கப்பட்ட ஒரு இத்துபோன வாகனத்துக்காகவே தன்னை அழைத்துள்ளதாகவும் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.