மாவீரர் நாளை நினைவு கூர்ந்ததற்காக கைது செய்தால் சிறை செல்லவும் தயாராக இருக்கிறோம் என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினரும் இலங்கை தமிழரசுக் கட்சியின் தலைவருமான மாவை சேனாதிராஜா தெரிவித்துள்ளார்.
ஏழு ஆண்டுகளின் பின்னர், தமிழர் தாயகத்தில், மாவீரர் துயிலும் இல்லங்களில் மாவீரர் நாள் நினைவுகூரப்பட்ட நிலையில், மாவீரர் நாள் நிகழ்வுகளில் பங்கெடுத்த அனைவரையும் கைதுசெய்ய வேண்டும் என்று நாடாளுமன்ற உறுப்பினர் உதய கம்பன்பில கொழும்பில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் தெரிவித்திருந்தார்.
இது தொடர்பில் கருத்து வெளியிட்டுள்ள நாடாளுமன்ற உறுப்பினர் மாவை சேனாதிராஜா, தீவிரவாத சக்திகளும் அவர்களுடைய தலைவர்களும் வழமைபோல இப்போதும் கூக்குரல் எழுப்பியிருக்கின்றார்கள் என்றும், அவர்களுடைய சொல்லுக்கு இந்த நல்லாட்சி இடமளிக்காது என்று நம்புவதாகவும் குறிப்பிட்டுள்ளார்.
நீண்ட – நெடிய காலங்களில் சிறைகளில் சாகடிக்கப்பட்ட நாங்கள், கம்பன்பில போன்றோர் கூறுவது போல் கைதுசெய்யப்பட வேண்டும் என்றால், அந்த விலையையும் கொடுக்க ஆயத்தமாக இருப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
இவ்வளவு மக்களையும், அஞ்சலி செலுத்தியவர்களையும் கைதுசெய்ய வேண்டும் என்றால், அது மிகப் பெரிய போராட்டமாக ஆரம்பிக்கும் என்பதை சம்பந்ததப்பட்டவர்களுக்கு எச்சரிக்கையாகச் சொல்ல விரும்புவதாகவும், எந்த விலையைக் கொடுத்தும், தமிழ்த் தேசத்தினதும் – தமிழ் மக்களினதும் விடுதலையை பெறுவதற்கு ஆயத்தமாக இருப்பதாகவும் அவர் கூறியுள்ளார்.
இதேவேளை மாவீரர் நாள் கடைப்பிடிப்பதற்கு வடக்கு என்ன தனிநாடா என்று மகிந்த அணியினர் நாடாளுமன்றத்தில் கடந்த திங்கட்கிழமை எழுப்பிய கேள்விக்குப் பதிலளித்த நாடாளுமன்ற உறுப்பினர் மாவை சேனாதிராஜா, தமிழ் மக்கள் தங்கள் தனித்துவமான பண்பாடு – கலாசாரத்தை வெளிக்காட்டியிருக்கின்றார்கள் எனவும், அந்தத் தனித்துவத்தை அவர்கள் தனிநாடு என்று அங்கீகரித்திருக்கின்றார்கள் என்றும் தெரிவித்துள்ளார்.