வங்கக்கடலில் உருவான நடா புயல், யாழ்ப்பாணத்துக்கு அருகே நிலை கொண்டுள்ள நிலையில், வடக்கில் மழையும், சூறைக்காற்றும் வீசி வருகின்றது. அத்துடன் வரலாறு காணாத வகையில் பகல் நேர வெப்பநிலை, 19 பாகை செல்சியசுக்கு கீழ் இறங்கியதால், கடும் குளிரால் மக்கள் அவதிப்படுகின்றனர்.யாழ். குடாநாட்டின் காலநிலை தொடர்பாக யாழ். மாவட்ட வானிலை அவதான நிலைய பொறுப்பதிகாரி பிரதீபன் கூறுகையில், தென்மேற்கு வங்க கடலில் உருவான ´நடா´ சூறாவளி தற்சமயம் காங்கேசன்துறையில் இருந்து வடக்கே 200 கிலோ மீற்றர் தூரத்தில் மையம் கொண்டுள்ளது. இது தமிழகத்தின் வடக் கு பக்கமாக நகர்ந்து செல்லும் என எதிர்பார்க்கப்படுகின்றது.
புத்தளம் தொடக்கம் காங்கேசன்துறை, திருகோணமலை ஆகிய பகுதிகளில் காற்றின் வேகம் 30 கிலோ மீற்றர் தொடக்கம் 40 கிலோ மீற்றர் வேகம் வரையில் காணப்படும். அதேவேளை கா ற்றின் வேகம் 60 தொடக்கம் 70 கிலோ மீற்றர் வரையில் அதிகரிக்கலாம். அதேவேளை ஆழம் கூடிய பகுதிகளில் காற்றின் வேகம் 60 தொடக்கம் 70 கிலோ மீற்றர் வரையில் இருக்கும் எனவே கடற்றொழிலாளர்கள் அவதானமாக இருக்கும்படி எச்சரிக்கப்படுகின்றார்கள்.
மேலும் நேற்று மாலை 16.8 பாகை செல்சியஸ் ஆக காணப்பட்ட குடாநாட்டின் வெப்ப நிலையானது, இன்று பகல் தற்சமயம் 19.8 பாகை செல்சிஸ் ஆக காணப்பட்டது. இதனால் குளிர் அதிகமாக காணப்படும். மேலும் தற்சமயம் காற்று தரையில் 26 கிலோ மீற்றர் வேகத்தி ல் வீசி வருகின்றது. மேலும் நேற்று மாலை தொடக்கம் இன்றைய தினம் காலை 8.30 மணி வரையில் 35 மில்லி மீற்றர் மழை வீழ்ச்சி பதிவாகியுள்ளது.
இதேவேளை முல்லைத்தீவு மாவட்டத்தின் கரையோரப் பகுதிகளில் கடும் காற்று வீசி வருவதோடு, புயல் தாக்கம் ஏற்பட வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ள நிலையில் மக்கள் கடும் பாதிப்புக்குள்ளாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. காற்று பலமாக வீசுவதோடு பாரிய அலைகள் எழ கடல் கொந்தளிப்பாக காணப்படுவதானாலும், தொடர்ச்சியாக மழை பெய்து வருவதாலும் மீன்பிடியை ஜீவனோபாயமாக கொண்ட முல்லைத்தீவை சேர்ந்த கடற்றொழிலாளர்கள் எவரும் கடலுக்கு செல்ல முடியாத நிலை காணப்படுகின்றது.
இதனால் தொழிலை மேற்கொள்ளும் வள்ளங்கள் உள்ளிட்ட மீன்பிடி உபகரணங்களையும் கரையிலிருந்து அப்புறப்படுத்தியுள்ளதை காணமுடிகின்றது.