ஒற்றை ஆட்சிக்குள் தமிழர்களின் இனப்பிரச்சனைக்கு என்றுமே தீர்வு காணமுடியாது என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சிவமோகன் இலங்கை நாடாளுமன்றில் தெரிவித்துள்ளார்.
வடக்கு கிழக்கு மாகாணங்களில் வாழும் தமிழ முஸ்லீம் மக்களுக்கான வாழ்வியல் பிரச்சனைகள் தனித்துவமானவை என்பதையும், நாம் வடகிழக்கில் எதிர்நோக்கும் பிரச்சனைகள் ஏனைய மாகாண மக்களுக்கு இல்லாதவை என்பதை முதலில் இந்த நாடாளுமன்றம் உணர்ந்துகொள்ள முன்வர வேண்டும் எனவும் அவர் வலியுறுத்தியுள்ளார்.
1948 இல் இலங்கை சுதந்திரமடைந்த பின்னர், இன்று 70 ஆண்டுகளைக் கடக்கின்ற பொழுதிலும், இலங்கை ஒரு நாடு என்று எண்ணுபவர்கள், வடக்கு கிழக்கு மக்களின் யதார்த்த பூர்வமான பிரச்சனைகளை உணர முன்வரவில்லையென்பது கசப்பான ஒரு உண்மை எனவும் தெரிவித்துள்ள அவர், இப்படியாக உருவாகிய இனப்பிரச்சனையே ஒரு பாரிய தமிழ் இன விடுதலைப் போராக உருவெடுத்தது என்பதும் யாவரும் இலகுவில் மறந்துவிடக் கூடியது அல்ல எனவும் தெரிவித்துள்ளார்.
ஒரு பாரிய உள்நாட்டுப் போரில் தமிழர்களும், சிங்களவர்களும் நேருக்கு நேர் மோதினார்கள் என்பதை அனைத்துலக சமூகம் உட்பட எவரும் மறந்துவிட முடியாது எனவும், பல இலட்சம் தமிழ், சிங்கள, முஸ்லீம் மக்களை பலி கொடுத்த பின்னர், நல்லிணக்கம் தொடர்பில் நாடாளுமன்றில் விவாதித்துக் கொண்டிருக்கும் அதே வேளையில், வடக்கு கிழக்கு மாகாணங்களில் பலாத்காரமான சிங்கள குடியேற்றங்கள் ஏற்படுத்தப்படுவதனையும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
இராணுவத்தின் துணையுடன வெலியோயாவில் என்ன நடைபெற்றது எனவும், போர் இடம்பெற்ற காலத்தில் தமிழர்கள் விரட்டியடிக்கப்பட்டு சிங்கள குடியேற்றங்கள் ஏற்படுத்தப்படவில்லையா எனவும் கேள்வி எழுப்பியுளள் அவர், மணலாறு என்ற தமிழ் பெயருடன் இருந்த பிரதேசம் வெலியோயா என்று பெயர் மாற்றம் செய்யப்பட்டு, ஜனக புர, கல்யாண புர, போகஸ்வெவ என்று பல சிங்கள குடியேற்றங்களாக உருவெடுத்துள்ளதையும் சுட்டிக்காட்டியுள்ளார்.
அதேபோல தமிழ் பாரம்பரிய பிரதேசமாக இருந்த கன்னியா வெந்நீர் ஊற்று பகுதி இன்று முழுமையாக ஒரு சிங்கள அத்துமீறல்களுக்கு உள்ளாக்கப்பட்டுள்ளது என்பதை அங்கு செல்லும் அனைவராலும் புரிந்துகொள்ள முடியும் எனவும், 1000 ஏக்கர் அபிவிருத்தித் திட்டம் என்ற போர்வையில் டொலர் ஃபாம், கென் ஃபாம் என்ற சிங்கள குடியேற்றங்கள் 1984ம் ஆண்டில் ஏற்படுத்தப்பட்டதுடன், தனிக்கல் என அழைக்கப்பட்ட தமிழ் பிரதேசம் கல்யாண புர என்ற குடியேற்றமாக அபிவிருத்தி செய்யப்பட்டது எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
இவைதான் எமது தமிழர்கள் எதிர்நோக்கும் இனப்பிரச்சனை எனவும், வட மாகாண சபைக்கு உரித்தான கடமைகள் அனைத்தும் ஏட்டுச் சுரைக்காயாகவே காணப்படுவதுடன், 13 வது திருத்தம் என்று கூறி ஒப்பந்தம் கைச்சாத்திட்ட அரசு அனைத்தையும் நிர்மூலமாக்கிய நிலையில், இவையே இன்று இனப்பிரச்சனையாக உருவெடுத்து நிற்கின்றது எனவும் அவர் விபரித்துள்ளார்.
1949ம் ஆண்டு கல்லோயா குடியேற்றம் என்று ஆரம்பித்த திட்டமிட்ட இன ரீதியான குடியேற்றங்கள், இன்றும் மன்னார் சிலாபத்துறையில் சிங்கள மீனவர் குடியேற்றம் வரை தொடர்ந்து வருகின்றது எனவும், இந்தப் பிரச்சனை வடக்கு கிழக்கு மாகாணங்கள் தவிர்ந்த வேறு எந்த ஒரு மாகாணத்திற்கும் இல்லாதது என்பதுடன், இது தான் வடக்கு கிழக்கு மாகாணங்களுக்குரிய, மக்களுக்குரிய பிரச்சனையாக இன்று இருந்து வருகின்றது என்றும் விளக்கியுள்ளார்.
எனவே திட்டமிட்ட அரசியல் ரீதியான இராணுவ மயப்படுத்தப்பட்ட குடியேற்றங்களும், காணி ஆக்கிரமிப்பு நடவடிக்கைகளும் வடக்கு கிழக்கு மாகாணங்களுக்குரிய தனித்துவமான பிரச்சனை எனவும், இது ஒரு இனரீதியான பிரச்சனையாக எமது மக்களால் எதிர்நோக்கப்படுகின்றது என்பதையும் நாடாளுமன்றில் சுட்டிக்காட்டியுள்ள சிவமோகன், அதே போல் முல்லைத்தீவு மாவட்டத்தில் பொதுமக்களின் காணிகளையும் எமது மாவட்டத்திற்கு முக்கியத்துவமான காணிகளையும் இராணுவத்தினர் தற்போதும் அபகரித்திருக்கிறார்கள் எனவும் அதிருப்தி வெளியிட்டுள்ளார்.
எமது வட்டுவாகல் பிரதேசம, கொக்கிளாய், புதுக்குடியிருப்பு, கேப்பாப்புலவு என பல கிராமங்கள் இராணுவத்தால் ஆக்கிரமிக்கப்பட்டிருப்பது கவலைக்குரிய விடயம், எனவும:. இது இராணுவ அராஜகத்தின் ஒரு வடிவம் என்றும், இதுதான் எமது பிரச்சனையின் இன்னொரு வடிவம் என்றும் தெரிவித்துள்ள அவர், ஒற்றை ஆட்சியில் தமிழர்களின் பிரச்சனைகளுக்கு என்றும் தீர்வு வராது என்றே தாம் நம்புவதாகவும் தெரிவித்துள்ளார்.