இந்த ஆண்டு வெற்றிக்கொடி கட்டியவர் யார்?விஜய் சேதுபதி:நாயகர்களுக்குள் யார் முதன்மையானவர் என்ற போட்டி எப்போதும் இருக்கும்.
மசாலா படமா, முறுக்கு மீசை போலீஸ் படமா, கிராமத்துப் படமா, பெண்களைப் பற்றிய புரிந்துணர்வு இல்லாத ஆணின் படமா, குடும்பச் சூழ்நிலையில் தடுமாறும் இளைஞனின் படமா, சிரிப்பு ரவுடி பாத்திரமா… எல்லாவற்றுக்கும் ஒரே தேர்வு விஜய் சேதுபதி என்ற நிலையை இந்த ஆண்டு தமிழ்த் திரையுலகம் பார்த்தது. ‘சேதுபதி’, ‘காதலும் கடந்து போகும்’, ‘இறைவி’, ‘தர்மதுரை’, ‘ஆண்டவன் கட்டளை’, ‘றெக்க’ என 6 படங்களில் நடித்து இந்த ஆண்டு அதிகப் படங்களில் நடித்த நாயகன் என்ற பெருமையைப் பெற்றிருக்கிறார்.
எல்லாப் படங்களும் வெவ்வேறு கதைகளையும் மாறுபட்ட பாத்திரப் படைப்புகளையும் கொண்டவை. இவை எல்லாவற்றிலும் பொருத்திக்கொண்டது விஜய் சேதுபதிக்கே உரிய தனிச் சிறப்பு. ஆரவாரம் இல்லாத இயல்பான நடிப்பு, பாத்திரத்துக்கு ஏற்றப் பேச்சு, உடல்மொழி ஆகியவை விஜய் சேதுபதிக்குக் கைகொடுக்கின்றன. தொடர்ந்து மாறுபட்ட கதைகளைத் தேர்ந்தெடுத்துவரும் விஜய் சேதுபதி படங்களின் எண்ணிக்கையிலும், நடிப்பின் தரத்திலும், வெற்றிகளின் எண்ணிக்கையிலும் இந்த ஆண்டு முதலிடம் பெற்றிருக்கிறார்
கமல் ஹாசன், அஜித்குமார் தவிரப் பிற முன்னணி நாயகர்கள் அனைவரின் படங்களும் இந்த ஆண்டு வந்தன. ஏற்கெனவே பலமுறை வெற்றிக்கொடியைப் பறக்கவிட்டவர் என்ற வகையில் ரஜினியை விட்டுவிட்டுப் பிற நாயகர்களில் இந்த ஆண்டை வசமாக்கியவர் யார் என்று பார்ப்போம்.
விஜய்
ஆண்டுக்கு ஓரிரு படங்களில் தலையைக் காட்டும் கொள்கையைப் பின்பற்றும் விஜய், இந்த ஆண்டு நடித்து வெளியான படம் ‘தெறி’. பாசமுள்ள சாதுவான அப்பா, ஆக்ரோஷமான காவல் அதிகாரி, அன்பைக் கொட்டும் காதலன் என வெவ்வேறு வண்ணங்களைக் காட்டித் தனது ரசிகர்களைத் தெறிக்கவிட்டார் விஜய். படம் பாக்ஸ் ஆபீஸை நிரப்பியது. ஏற்ற இறக்கங்களாக விஜய்க்கு இருந்துவரும் வெற்றி – தோல்வி படங்களின் வரிசையில் ‘தெறி’ ஓரளவு வெற்றிப் படம்தான்.
விக்ரம்
விக்ரம், இரட்டை வேடங்களில் நடித்த படம் ‘இருமுகன்’. நாயகனாக ‘அகிலன்’, வில்லனாக ‘லவ்’ என இரண்டு கதாபாத்திரங்களுக்கான வேறுபாட்டை அனாயாசமாகக் காட்டி நடித்த படம். வில்லனைப் பிடிக்க அகிலன் காட்டும் தீவிரம், கொஞ்சமும் அலட்டிக்கொள்ளாத ‘லவ்’வின் வில்லத்தனம் இரண்டும் ரசிகர்களுக்குப் பிடித்திருந்தன. வசூல் ரீதியாக வெற்றி பெற்றாலும் காட்சிகளில் இல்லாத நம்பகத்தன்மை போன்ற காரணங்களால் கடுமையான விமர்சனங்களும் எழுந்தன.
சூர்யா
முன்னணி நாயகர்கள் ஆண்டுக்கு ஒரு படத்தில் தலைகாட்டினால் போதும் என்ற இலக்கணத்துக்கு இந்த ஆண்டு சூர்யாவும் தப்பவில்லை. ‘24’ என்ற த்ரில்லர் பாணி படத்தில் மட்டுமே நடித்தார். மூன்று பாத்திரங்களில் நடித்திருந்தாலும் மூன்றுக்கும் நன்கு வித்தியாசம் காட்டி நடித்ததில் ரசிகர்களை நிமிர்ந்து உட்கார வைத்தார். ஆனால், அவரது வழக்கமான முக பாவனைகளும், காட்சி அமைப்பு களும் ஏற்படுத்தும் சலிப்பு படத்தின் மீதான ஈடுபாட்டைக் குறைக்கவும் செய்தன.
சிம்பு
கடந்த சில ஆண்டுகளாகவே ஒரு படம் வெளியாவதற்கே நீண்ட காத்திருப்பில் இருந்த சிம்புவுக்கு, இந்த ஆண்டு இரண்டு படங்கள். ‘இது நம்ம ஆளு’ படத்தில் சாக்லெட் பையனாகவும், ‘அச்சம் என்பது மடமையடா’ படத்தில் தாடி வைத்து நடித்ததும்தான் வித்தியாசம். சிம்புவுக்கு நயன்தாரா ஜோடி என்பது ‘இது நம்ம ஆளு’ படம் வெளியாவதற்கு முன்பு பரபரப்பை ஏற்படுத்தியது. ஆனால் படம் வெளியான பிறகு எந்தப் பரபரப்பும் எழவில்லை. ‘அச்சம் என்பது மடமையடா’வின் முதல் பாதி அழகிய இசைக் கோலமாகவும் இரண்டாம் பாதி தாறுமாறான ஆக்ஷன் படமாகவும் அமைந்தது. ஆனால், சிம்புக்குச் சொல்லிக்கொள்ளும்படி பெரிதாக எதுவும் இல்லை.
தனுஷ்
கடந்த ஆண்டு நான்கு படங் களில் நடித்த தனுஷ், இந்த ஆண்டு ‘தொடரி’, ‘கொடி’ என இரண்டோடு திருப்தியாகிவிட்டார். கட்டுப்பாட்டை இழந்து ஓடும் ரயிலில் அரங்கேறும் காதல் என எதிர்பார்ப்பை ஏற்படுத் திய ‘தொடரி’, அந்த எதிர்பார்ப்பை நிறைவேற்ற முடியாமல் அளவுக்குச் சறுக்கியது. அதிகமான சவால் இல்லாத வேடத்திலும் தனுஷ் பக்குவமான நடிப்பைத் தந்தது ஆறு தலான விஷயம். தீபாவளி அன்று வெளிவந்த ‘கொடி’ ஓரளவு உயரப் பறந்தது. இரட்டை வேடத்துக்கு தனுஷ் முழு நியாயம் செய்திருந்தார். வழக்கமான திரைக்கதை பாணி, பலவீனமான அரசியல் சித்தரிப்பு போன்றவை ‘கொடி’யின் பட்டொளியை மங்கவைத்தன. இருந்தாலும் இரண்டில் ஒன்று சோடைபோகாமல் தப்பித்த வகையில் தனுஷுக்கு ஆறுதல்தான்.
விஷால்
விஷாலுக்கு இந்த ஆண்டு ‘கதகளி’, ‘மருது’ என இரண்டு படங்கள். ‘கதகளி’ ஆக்ஷன் கலந்த த்ரில்லர் படம். ‘மருது’ கிராமத்துக் காதலும் பழிவாங்கலும். இரண்டுமே புதுமை இல்லாத கதைகள். பாத்திரப் படைப்பும் ஈர்க்கவில்லை. உடற்கட்டும் உயரமும் கைகொடுக்கும் அளவுக்கு அவருக்கு நடிப்பு கைகொடுக்கவில்லை. அதற்கு விஷாலைக் குறை கூற முடியாது. பலவீனமான பாத்திர வார்ப்பே காரணம்.
ஏறுமுகத்தில் மூன்று முகம்
முன்னணி வரிசையில் உள்ள நாயகர்கள் பிரம்மாண்ட வெற்றிக்காகக் காத்திருக்கும் வேளையில் மூன்று நடிகர்களின் திரைப் பயணம் மேல் நோக்கிப் போய்க்கொண்டிருக்கிறது. அவர்கள் விஜய் சேதுபதி, சிவகார்த்திகேயன், கார்த்தி.
கார்த்தி
நடித்த ‘தோழா’, ‘காஷ்மோரா’ இரண்டும் வசூலிலும், உள்ளடக்கத்திலும் குறைவைக்கவில்லை. ‘தோழா’வில், கழுத்துக்குக் கீழே செயலிழந்துபோன உடலுடன் வலம்வரும் நாகர்ஜுனாவின் வாழ்வில் வண்ணம் சேர்க்கும் இயல்பான துணைவனாக நடித்துக் கவர்ந்தார் கார்த்தி. ‘காஷ்மோரா’வில் இரண்டு வேடங்கள்; மூன்று பரிமாணங்களில் வந்து ஈர்த்தார். இரண்டு படங்களுமே வெவ்வேறான கதையமைப்புகள், பாத்திரங்கள், என அமைந்ததில் கார்த்திக்கு இந்த ஆண்டு மகிழ்ச்சிகரமான ஆண்டுதான்.
சிவகார்த்திகேயன்:
ஒரே பாணியிலான நடிப்பு, நகைச்சுவை, காதல், நடனம் எனக் கலந்து கொடுத்து வேகமாக முன்னேறிக்கொண்டிருக்கிறார் சிவகார்த்திகேயன். தயாரிப்பாளர்களின் நம்பிக்கைக்குரிய நாயகராக இந்த ஆண்டு மாறியிருக்கிறார். ‘ரஜினி முருகன்’, ‘ரெமோ’ என வெளியான இரண்டுமே இந்த ஆண்டு வெற்றிப் படங்கள். நடனம், நக்கலான முக பாவனை மூலம் ‘ரஜினி முருகன்’ படத்தை ஹிட் அடிக்க வைத்தவர், ‘ரெமோ’வில் காதலர், நர்ஸ் என இருவிதத் தோற்றங்களில் வித்தியாசம் காட்டி அசத்தினார்.