மரபை மீறி தைவான் அதிபர் சாங் இங்க் வென்னுடன் டிரம்ப் தொலைபேசியில் பேசினார். இதற்கு சீனா கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளது.
தூதரக உறவு இல்லை
கிழக்கு ஆசியாவில் உள்ள தீவு நாடு தைவான். இந்த நாட்டை தன்னிடம் இருந்து பிரிந்து சென்ற ஒரு மாகாணமாக சீனா இன்னும் கருதுகிறது. கடந்த காலத்தில், போர் தொடுத்து தைவானை கைப்பற்றப்போவதாக சீனா மிரட்டல்கள் விடுத்தது உண்டு.
அந்த நாட்டின் அதிபராக சாய் இங்க் வென் (வயது 59) என்ற பெண் தலைவர் உள்ளார்.
தைவானுக்கும், அமெரிக்காவுக்கும் இடையேயான தூதரக உறவு 1979–ம் ஆண்டு முறிந்து போனது.
மரபை மீறிய நடவடிக்கை
இந்த நிலையில் அமெரிக்க ஜனாதிபதியாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள டொனால்டு டிரம்புடன் தைவான் அதிபர் சாய் இங்க் வென் நேற்று முன்தினம் தொலைபேசியில் பேசினார்.
அவருடன் டிரம்பும் சகஜமாக பேசினார். அமெரிக்க ஜனாதிபதியோ, ஜனாதிபதியாக தேர்ந்தெடுக்கப்பட்ட ஒருவரோ கடந்த 37 ஆண்டுகளில் இதுவரை தைவான் அதிபருடன் நேரடியாக தொலைபேசியில் பேசியது இல்லை. அந்த வகையில், தைவான் அதிபருடன் டிரம்ப் பேசியது மரபை மீறிய நடவடிக்கை ஆகும்.
டிரம்ப் ஆலோசகர்கள் குழு அறிக்கை
இரு தலைவர்கள் சந்திப்பு குறித்து டிரம்ப் ஆலோசகர்கள் குழு ஒரு அறிக்கை வெளியிட்டுள்ளது.
அதில், ‘‘ஜனாதிபதியாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள டிரம்ப், தைவான் அதிபர் சாய் இங்க் வென்னுடன் நேற்று (நேற்று முன்தினம்) தொலைபேசியில் பேசினார். அப்போது டிரம்புக்கு தைவான் அதிபர் வாழ்த்து தெரிவித்தார். இரு தலைவர்களும் நெருக்கமான பொருளாதார, அரசியல், ராணுவ உறவுகள் வைத்துக்கொள்வது குறித்து கவனத்தில் கொண்டார்கள். தைவான் அதிபராக தேர்ந்தெடுக்கப்பட்டபோது சாய் இங்க் வென்னுக்கு டிரம்பும் வாழ்த்து தெரிவித்துள்ளார்’’ என கூறி உள்ளனர்.
இரு தரப்பு தகவல்
டிரம்பும் இது தொடர்பாக டுவிட்டரில், ‘‘ஜனாதிபதி தேர்தலில் வெற்றி பெற்ற என்னை வாழ்த்துவதற்காக தைவான் அதிபர் என்னுடன் தொலைபேசியில் பேசினார்’’ என குறிப்பிட்டுள்ளார்.
இதேபோன்று தைவான் அதிபர் அலுவலகம் நேற்று ஒரு அறிக்கை வெளியிட்டது. அதில், ‘‘ஆசியாவை பாதிக்கக்கூடிய விஷயங்கள் பற்றியும், அமெரிக்க–தைவான் உறவின் எதிர்காலம் குறித்தும் டிரம்பும், தைவான் அதிபரும் விவாதித்தனர். தைவான் அதிபர் இரு தரப்பு ஒருங்கிணைப்பு மற்றும் தொடர்பை வலுப்படுத்த ஆர்வம் கொண்டுள்ளார். எதிர்காலத்தில் சர்வதேச காரியங்களில் பங்கேற்பதற்கும், பங்களிப்பு செய்வதற்கும் கூடுதல் வாய்ப்புகளை தைவான் பெறுவதற்கு அமெரிக்கா தொடர்ந்து ஆதரவு அளிக்கும் என டிரம்பிடம் தைவான் அதிபர் நம்பிக்கை தெரிவித்தார்’’ என கூறப்பட்டுள்ளது.
சீனா கடும் எதிர்ப்பு
டிரம்பும், தைவான் அதிபர் சாய் இங்க் வென்னும் தொலைபேசியில் பேசியதற்கு சீனா கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளது.
இது தொடர்பாக தனது புகாரை அமெரிக்காவிடம் பதிவு செய்துள்ளதாக சீன வெளியுறவுத்துறை அமைச்சகம் நேற்று தெரிவித்தது.
சீன வெளியுறவு மந்திரி வாங் யி, ‘‘தைவானின் குட்டி தந்திரம் இது’’ என வர்ணித்தார்.