அப்பல்லோ மருத்துவமனையில் 75 நாட்களாக சிகிச்சை பெற்று வரும் முதல்வர் ஜெயலலிதாவுக்கு நேற்று மாலை திடீரென மாரைடைப்பு ஏற்பட்டதாக அப்பல்லோ மருத்துவமனையில் இரவில் அறிக்கை வெளியிட்டது. இது தமிழகம் முழுவதும் பெரும் பரபரப்பையும், பதற்றத்தையும் ஏற்படுத்தியது. ஆஞ்சியோ சிகிச்சைக்குப் பின்னர் முதல்வரின் உடல்நலம் சீராக இருப்பதாக மருத்துவமனை வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன.
லண்டன் மருத்துவர் ரிச்சர்ட் பீலே ஆலோசனைப்படி, முதல்வர் ஜெயலலிதாவுக்கு சிகிச்சையளிக்கப்பட்டு வருவதாகவும் அப்போலோ மருத்துவமனை தெரிவித்தது.
ஜெயலலிதாவிற்கு இதய நோய் மருத்துவர்கள், சுவாசயியல் நிபுணர்கள் அவருக்கு தீவிர சிகிச்சை அளித்தனர். தீவிர சிகிச்சை நிபுணர்களும் ஜெயலலிதாவிற்கு சிகிச்சை அளித்தனர் .எக்ஸ்ட்ரா கார்போரியல் என்னும் எந்திரத்தை இதயத்தோடு பொருத்தி இதயத்துடிப்பை சீராக்க முயற்சி செய்தனர்.
தொலைக்காட்சிகளில் செய்தியைப் பார்த்த அதிமுக தொண்டர்கள் உடனடியாக அப்பலோ மருத்துவமனை முன்பாக கட்டுக்கடங்காமல் திரண்டனர். கதறி அழுதபடி பலரும் மருத்துவமனையில் குவிந்தனர். ஆளுநர் வித்யாசாகர் ராவும் மும்பையில் இருந்து சென்னை வந்து முதல்வர் ஜெயலலிதா குறித்து கேட்டறிந்தார்.
மாரடைப்பு காரணமாக தீவிரமாக உடல் நலம் பாதிக்கப்பட்டுள்ள முதல்வர் ஜெயலலிதாவிற்கு அதிகாலையில் ஆஞ்ஜியோ சிகிச்சை அளிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதயநாளத்தில் ஏற்பட்டுள்ள அடைப்பை சரி செய் இந்த ஆஞ்சியோ சிகிச்சை அளிக்கப்பட்டுள்ளதாக தெரிகிறது.
இதய நாளத்தில் உள்ள அடைப்பை அறுவை சிகிச்சை இன்றி சரி செய்யக் கூடிய ஆஞ்சியோ சிகிச்சை ஆகும். ஆஞ்சியோ சிகிச்சை முடிந்த நிலையில் மருத்துவர்களின் தீவிர கண்காணிப்பில் தற்போது முதல்வர் ஜெயலலிதா உள்ளதாக மருத்துவமனை வட்டாரங்கள் தகவல் தெரிவித்துள்ளன.
நள்ளிரவு கடுங்குளிர் அதிகாலை திடீர் மழை கொட்டிய போதும் அதிமுக தொண்டர்கள் கண்ணீர் மல்க விடாது பிரார்த்தனையில் ஈடுபட்டனர். இதனிடையே ஆஞ்சியோ சிகிச்சைக்குப் பின்னர் முதல்வர் ஜெயலலிதாவின் உடல்நிலை சீராக இருப்பதாக மருத்துவமனை வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன.
தமிழகம் முழுவதும் இருந்தும் அதிமுகவினர் இரவோடு இரவாக சென்னை நோக்கி புறப்பட்டு வருவதால் இன்று அப்பல்லோ மருத்துவமனை வாசலில் தொண்டர்களின் கூட்டம் அதிகரித்து வருகிறது. மருத்துவமனை முன்பு கூடுதல் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளதால் பதற்றமும் அதிகரித்துள்ளது.