யாழ். மாவட்ட தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினரும் தமிழரசுக் கட்சியின் தலைவருமான மாவை. சேனாதிராஜாவிடம் இராணுவப் புலனாய்வாளர்கள் விசாரணை மேற்கொள்ளச் சென்றமையால் பதற்ற நிலை ஏற்பட்டதாக கூறப்படுகிறது.
கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினரும் தமிழரசுக் கட்சியின் தலைவருமான மாவை.சோ.சேனாதிராஜாவின் இல்லத்திற்கு நேற்று முன்தினம் மதியம் ஓர் வாகனத்தில் சிவில் உடையில் சென்ற ஓர் குழுவினர் தம்மை இராணுவப் புலனாய்வாளர்கள் எனவும், நாடாளுமன்ற உறுப்பினரிடம் விசாரணை மேற் கொள்ளவேண்டும் எனவும் கூறியுள்ளனர்.
இதன்போது மாவை.சேனாதிராஜா வீட்டில் இல்லாத காரணத்தினால் வீட்டுக்குச் சென்ற இராணுவப் புலனாய்வாளர்கள் திரும்பிச் சென்றுள்ளனர்.
அதன் பிற்பாடு மாலையில் மீண்டும் ஓர் வாகனத்தில் அலுவலகத்திற்குச் சென்ற ஐவர் தாம் இராணுவப்புலனாய்வாளர்கள் என அடையாளப்படுத்தி நாடாளுமன்ற உறுப்பினரிடம் ஓர் விசாரணைக்கு வந்ததாக அறிமுகப்படுத்தியுள்ளனர்.
இதன்போது அலுவலகத்தில் நின்ற கட்சியிற் மூத்த உறுப்பினர் ஒருவர் நாடாளுமன்ற உறுப்பினருக்கு தகவல் வழங்கியதைத் தொடர்ந்து, அருகில் உள்ள இல்லத்தில் இருந்து சமூகமளித்த மாவை சேனாதிராஜாவிடம் இராணுவத்தினர் விசாரணை மேற்கொள்ள முற்பட்டதாக கூறப்படுகிறது.
இதன் போது தனது பாதுகாவலரை அழைத்த மாவை சேனாதிராஜா, யாழ்ப்பாணம் பொலிசாருக்கு தகவல் வழங்குமாறு பணித்ததோடு குறித்த விடயம் தொடர்பாக சபாநாயகரின் அனுமதி அல்லது நீதிமன்ற உத்தரவின்றி எவ்வாறு விசாரணை மேற்கொள்ள முடியும் என விணாவியுள்ளார்.
இதன்போது அங்கு உடனடியாக வருகை தந்த யாழ்ப்பாணம் காவல்த்துறையினர், விசாரணைக்காக வருகை தந்த இராணுவத்தினரிடம் அவர்களின் இராணுவ முகாம் போன்ற விபரங்களை கேட்டறிந்ததோடு நாடாளுமன்ற உறுப்பினரை விசாரணை செய்வதாயின் உள்ள நடைமுறைகளைப் பின்பற்ற வேண்டும் எனக் கூறி இராணுவத்தினரை திருப்பி அனுப்பி வைத்ததாக கூறப்படுகிறது.
எனினும் இந்த நடவடிக்கைக்கான அடிப்படைகள் என்ற என்ற தகவல்கள் எவையும் எந்தவொரு தரப்பினராலும் இதுவரை வெளியிடப்படவில்லை.