நாம் உண்ணும் உணவின் நகலே நாம் என்கிறார் ஓர் அறிஞர்.
நம் மண்ணில், நம் ஊரில், நம் பகுதியில் விளைகின்ற எந்தப் பொருளும் நமக்குப் பெரிதாக கேடு விளைவித்து விடாது. எங்கோ விளைகின்ற, யாரோ சொல்லுகின்ற உணவுப் பொருள்களை விட நம் மண்ணில் விளையும் பொருள்களை உண்ணுவதே உடல்நலத்திற்கு உகந்தது என்பது இயற்கை ஆர்வலர்களின் பிரகடனம்.
எந்த உணவிலெல்லாம் அதிகப்படியான ருசி இருக்கிறதோ அவையெல்லாம் குறைக்கப்பட வேண்டியவை அல்லது தவிர்க்கப்பட வேண்டியவை. காரணம் கெடுதலான செயற்கைப் பொருள்களிலிருந்தே அந்த ருசி கிடைக்கிறது. முன்பெல்லாம் எந்த வீட்டை எடுத்தாலும் கருப்பட்டி காப்பிதான் உண்டு.
உளுந்தும், கருப்பட்டியும் சேர்ந்த உளுந்தக்களி, வெந்தயமும் கருப்பட்டியும் சேர்ந்து வெந்தயக்கனி ஆகியவை அன்று பிரபலமான காலை உணவுகள்.
பெண் குழந்தைகள் பூப்பெய்து விட்டால் கருப்பட்டி, உளுந்து, நல்லெண்ணெய் சேர்த்து களி செய்து கொடுப்பது சம்பிரதாயமாக இருந்தது. இன்று சீனியின் ஆதிக்கத்தில் கருப்பட்டி காணாமல் போய்க் கொண்டிருக்கிறது. சீனியை நேரடியாகக் குறைக்க முயற்சிப்பவர்கள்கூட சீனி கலந்த கேக், சாக்லெட், குளிர்பானங்கள், ஐஸ்கிரீம் ஆகியவற்றை குறைக்க விரும்புவதில்லை.
சுத்தமான பசு நெய்யை பார்க்க முடியவில்லை. பசு நெய், பருப்பு அல்லது கீரை கலந்த சாதத்தைவிட குழந்தைகளுக்கு சத்தான உணவு வேறு எதுவும் இல்லை. ஆனால் பெற்றோர்கள் டப்பாக்களில் அடைக்கப்பட்ட உணவைத்தான் பெரிதும் விரும்புகின்றனர்.
நெய்யில் செய்யப்பட்ட பொறிகடலை மாவு உருண்டை, பொரி உருண்டை, குழந்தைகளுக்கு புரோட்டின், கார்போ ஹைட்ரேட், நல்ல கொழுப்பு நிறைந்த எளிதில் ஜீரணமாகும் நல்ல உணவு. பெரியவர்களுக்கும் கூட ஏற்றது.
சாப்பிட்டவுடன் வெற்றிலை பாக்கு, சுண்ணாம்பு கலந்த தாம்பூலம் போடுவதை முன்காலத்தில் பழக்கமாக வைத்திருந்தார்கள். வெற்றிலையின் காரம், பாக்கின் துவர்ப்பு, இவை சிறிது சுண்ணாம்புடன் சேரும்போது சீரணம் உள்பட பல நன்மைகளைச் செய்கிறது.
நாம் உண்ணும் உணவில் இனிப்பு, துவர்ப்பு, கசப்பு ஆகிய 3 சுவைகளும் அவசியம் இடம்பெற வேண்டும்.காரம், புளிப்பு, உப்பு ஆகிய 3 சுவைகளும் முடிந்தவரை குறைக்கப்பட வேண்டும். இப்பொழுது இது தலைகீழாக நடந்து கொண்டிருக்கிறது.
காலையில் அரசனைப்போல் திருப்தியாகச் சாப்பிடு. இரவில் பிச்சைக்காரனைப் போல் குறைவாகச் சாப்பிடு என்பது சான்றோர் வாக்கு. ஆனால் இன்றைய அவசர கதியான வாழ்க்கைச் சூழலில் காலையில் சாப்பிட்டும் சாப்பிடாமலும் அல்லது பட்டினி கிடந்தும் வேலைக்குச் சென்று மாலை வீடு திரும்பி இரவில் வயிறு புடைக்க விருந்துண்ணும் மக்கள்தான் ஏராளம். அதுவும் இரவு 9 மணிக்கு மேல் உண்டவுடன் உறக்கம். இது நம் உடலமைப்புக்கும் இயற்கைக்கும் முரணான பழக்கம். இதுவே தொடரும்போது விளைவை அனுபவிக்கத்தானே வேண்டும்.
பசித்துப் புசி, நொறுங்கத்தின்றால் நூறு வயது போன்ற பழமொழிகள் பழமையாகி காலாவதியாகிவிட்டது. அரசு கூட இதைப்பற்றி அலட்டிக் கொள்வதில்லையே. பள்ளிகளிலேயே இந்த விழிப்புணர்வு பாடங்கள் தொடங்கப்பட வேண்டும். இப்பொழுதுதான் அரசு பள்ளிகளுக்கருகே சில பொருள்களை விற்கக் கூடாது என்று ஆணை பிறப்பித்துள்ளது.
இயற்கை உணவின் சிறப்பு பற்றி பள்ளி, கல்லூரிகளிலேயே வலியுறுத்தலாம்.
முளைகட்டிய பாசிப்பயிறு, கொண்டைக் கடலை, உளுந்து, காணப்பயிறு ஆகியவற்றில் நிறைய புரோட்டின், வைட்டமின், இரும்புச்சத்து ஆகியவை கிடைக்கிறதாம். பள்ளி, கல்லூரி உணவு விடுதிகளில் இவற்றை அமுலுக்கு கொண்டு வரலாமே. அரசின் ஆராய்ச்சித் துறைகள் வெளிநாடுகளில் இருப்பது போல் எந்த உணவுகளில் என்னென்ன நல்லது கெட்டது உள்ளது என ஆராய்ந்து அறிவிப்புகளை அரசே வெளியிடலாமே.
அலோபதி, ஆயுர்வேதம், இயற்கை வைத்தியம், உணவியல் வல்லுநர்கள் ஆகியோர் அடங்கிய நிபுணர்கள் குழுவை அமைத்து சரியான அறிவிப்புகளை அரசே அறிவிக்கலாம். எந்த உணவாயினும் அளவு முறை அதாவது உண்ணும் அளவும் உபயோகிக்கும் முறையும் மீறாதவரை உடல்நலத்திற்கு பாதிப்பிருக்காது. அமைதியான மனநிலை அல்லது தெளிவான விழிப்பு நிலை இருப்பவர்களை எந்த உணவுப் பழக்கமும் எதுவும் செய்துவிட முடியாது. காரணம் இந்த உணவைச் சாப்பிடலாம், சாப்பிடக்கூடாது என்பதை அவர்கள் அறிவின் தன்மையே எடுத்துச் சொல்லி விடும். எந்த விளம்பரங்களுக்கும், எந்த தூண்டுதலுக்கும் இவர்கள் அடிமையாக மாட்டார்கள்.
மது, புகை மட்டுமே உடல்நலத்தை அழிப்பதில்லை. நாம் உண்ணும், உணவும் நம் ஆரோக்கியத்தில் பெரும் பங்கு வகிக்கிறது. வெளிநாடுகளில் எடை பார்க்கும் எந்திரம் பல வீடுகளில் உள்ளது. தங்கள் எடையை அவ்வப்போது கவனித்துக் கொள்கிறார்கள். ஆனால் நாம் நம்முடைய எடை 90 கிலோ ஆன பின்பு, மருத்துவர் எடையை குறைக்கச் சொன்ன பின்பே எடை பார்க்கும் பழக்கத்தை தொடர்கிறோம். விழிப்பு நிலையில்லை.
ஆரம்பத்தில் எடை கூடும்போதே 60}லிருந்து 70 கிலோ ஆக கூடும்போதே சுதாரித்துக் கொண்டால் 90 கிலோ ஏறியிருக்காது. தேவையில்லாத பயிற்சிகள், அவஸ்தைகள் தேவைப்படாதே.
உடல்பலம், உயிர்சக்தி, ஆன்மபலம் ஆகியவற்றின் மேம்பாட்டிற்காக சித்தர்கள் கற்றுக்கொடுத்த காயகல்பப் பயிற்சி என்ற உயர்ந்த பயிற்சியை சமூக ஆர்வலர்கள் பள்ளி, கல்லூரிகளில் மாணவர்களுக்கு கற்றுக் கொடுக்கிறார்கள்.
இன்றைய சமுதாயத்தில் அரசும், ஊடகங்களும், தன்னார்வ அமைப்புகளும் மக்கள் நல ஆர்வலர்களும் அதிகம் அக்கறை எடுத்துக் கொள்ள வேண்டிய முக்கியமான விஷயம் நமது உணவு முறை. இது காலத்தின் கட்டாயம்.