பிரதமர் ஜஸ்டின் ரூடோ இன்று பழங்குடியின மக்கள் தலைவர்களைச் சந்தித்து கலந்துரையாடவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
பழங்குடியின மக்கள் நீண்காலமாக எதிர்நோக்கிவரும் பிரச்சினைகள் தொடர்பில் விசாரணைகளை மேற்கொண்ட உண்மை மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவின் இறுதி அறிக்கை வெளியிடப்பட்டு சரியாக ஒரு ஆண்டு நிறைவில் இந்த சந்திப்பு இடம்பெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
பழங்குடியின மக்களது பிரச்சினைகள் தொடர்பில் ஆறு ஆண்டுகளாக ஆய்வுகளை மேற்கொண்ட, முதலாவது பழங்குடியின நீதிபதி மூரே சின்கிளைர்(Murray Sinclair) தலைமையிலான ஆணைக்குழு, தமது விசாரணைகளின் முடிவில் கடந்த ஆண்டு இறுதியில் 94 பரிந்துரைகள் அடங்கிய தனது இறுதி அறிக்கையை வெளியிட்டிருந்தது.
இவ்வாறான நிலையிலேயே, இன்று பழங்குடியின மக்களது தலைவர்களைச் சந்திக்கவுள்ள பிரதமர் ஜஸ்டின் ரூடோ, ஆணைக்குழுவினால் முன்வைக்கப்பட்ட பரிந்துரைகள் தொடர்பிலான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும் தெரிவித்துள்ளார்.
குறிப்பாக ஆணைக்குழுவினால் பரிந்துரைக்கப்பட்டவற்றில், மத்திய நீதித்துறையின் கீழ்வரும் 45 செயற்திட்டங்களில் 36 திட்டங்கள் குறித்து நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
இதேவேளை காணாமல்போன மற்றும் கொலை செய்யப்பட்ட பழங்குடியின பெண்கள் மற்றும் சிறுமிகள் குறித்த விசாரணைகளையும் ஆணைக்குழு பரிந்துரைத்துள்ள நிலையில், அவைகுறித்த விசாரணைகள் அடுத்த ஆண்டில் ஆரம்பிக்கப்படும் எனவும் எதிர்பார்க்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.