முல்லைத்தீவு மாவட்டத்தில் கூடிய விரைவில் தமிழ் மக்கள் சிறுபான்மை இனமாக மாறும் நிலை ஏற்படும் என்று வட மாகாண சபை உறுப்பினர் ரவிகரன் தெரிவித்துள்ளார்.
யாழ்ப்பாணத்தில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்துக் கொண்டு உரையாற்றும்போதே இதனைத் தெரிவித்துள்ள அவர், முல்லைத்தீவு மாவட்டத்தில் தமிழர்களை சிறுபான்மையாக்குவதற்கான அடித்தளங்கள் இடப்பட்டு வருவதனைச் சுட்டிக்காட்டியுள்ளார்.
மக்களிருக்கும் நிலங்களை முல்லைத்தீவின் ஒரு தனிப் பிரதேச செயலர் பிரிவாக இணைத்து, அந்த பகுதியை வெலி ஓயா பகுதி எனச் சொல்லிக் கொண்டு, திட்டமிட்ட வகையிலான குடியேற்றங்களை பெரும்பான்மையினர் மேற்கொண்டு வருவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
இவ்வாறான திட்டமிட்ட நடவடிக்கைகள் தொடருமானால் முல்லைத்தீவு மாவட்டம் கூடிய விரைவில் பெரும்பான்மையினரின் கைகளுக்கு பறிபோய், சிறுபான்மை இனமாகத் தமிழ் மக்கள் மாறும் நிலை உருவாகும் எனவும் அவர் கவலை வெளியிட்டுள்ளார்.
இதேவேளை கிழக்கு மாகாணத்தில் தமிழ் பிரதிநிதித்துவம் குறைக்கப்படும் அபாயம் ஏற்பட்டுள்ளதாக ஈரோஸ் கட்சியின் செயலாளர் ராஜநாதன் பிரபாகரன் தெரிவித்துள்ளார்.
கிழக்கு மாகாணத்தில், குறிப்பாக மட்டக்களப்பு மாவட்டத்தில் தமிழ் கிராமங்கள் பிரிக்கப்பட்டு ஏனைய இனத்தவரின் ஆதிக்கத்தின் கீழுள்ள உள்ளூராட்சி சபைகளுடன் இணைக்கப்பட்டு வருவதனைச் சுட்டிக்காட்டியுள்ள அவர், இதன் மூலம் தமிழ் மக்களின் நிலங்களை அபகரிக்க முயற்சி மேற்கொள்ளப்பட்டு வருவதாக குற்றஞ்சாட்டியுள்ளார்.
இதன் விளைவாக கிழக்கில் தமிழ் பிரதிநிதித்துவம் குறைக்கப்படும் நிலை ஏற்பட்டுள்ளதாகவும், மட்டக்களப்பு – பொலன்னறுவை பிரதான வீதியிலுள்ள பிள்ளையாரடி தமிழ் கிராமத்திலுள்ள மக்கள் இடம்பெயர்ந்த நிலையில், அங்கு தமிழ் கிராமம் இருந்ததற்கான அடையாளமே இல்லாமல் போயுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
இதேபோன்று ஓட்டமாவடி பிரதேச செயலாளர் பிரிவு அமைக்கப்படுவதன் மூலம், தமிழ் மக்களின் 40 ஏக்கர் பாரம்பரிய பிரதேசமும் இல்லாமல் போகும் நிலை ஏற்படும் என்றும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.