சிரியாவில் ஷியா பிரிவைச் சேர்ந்த அதிபர் ஆசாத்துக்கும் சன்னி பிரிவைச் சேர்ந்த கிளர்ச்சிப் படைகளுக்கும் இடையே 6 ஆண்டுகளுக்கும் மேலாக உள்நாட்டுப் போர் நடைபெற்று வருகிறது. அலெப்போ நகரை தலைமையிடமாகக் கொண்டு கிளர்ச்சிப் படைகள் செயல்பட்டு வந்தன. அந்த நகரின் மீது போரைத் தீவிரப்படுத்தியுள்ள அரசுப் படைகள் பாதிக்கும் மேற்பட்ட பகுதிகளை வசப்படுத்தியுள்ளன. தற்போது போர்முனையில் அப்பாவி மக்கள் சிக்கித் தவித்து வருகின்றனர்.
இந்தப் போரில் அரசுப் படைகளுக்கு ஆதரவாக தனது படைகளை அதிக எண்ணிக்கையில் குவித்திருக்கிறது ரஷ்யா.
இந்த நிலையில், அலெப்போவில் உள்ள அப்பாவி மக்கள் மீதான தாக்குதலை ரஷ்யா நிறுத்திக்கொள்ள வேண்டும் என்று வலியுறுத்தி, கோலாலம்பூரில் உள்ள ரஷ்ய தூதரகம் முன்பு வெள்ளிக்கிழமை ஆயிரக்கணக்கான மலேசிய மற்றும் சிரிய முஸ்லிம்கள் திரண்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.