மோசமான மோதல்கள் இடம்பெற்ற சிரியாவின் அலெப்போ நகரில் பாரிய பேரழிவுகள் ஏற்பட்டுள்ள போதிலும், சிரியாவின் உள்நாட்டுப் போரில் கனேடிய இராணுவம் தலையிடப் போவதில்லை என்று பாதுகாப்பு அமைச்சர் ஹர்ஜித் சஜான் தெரிவித்துள்ளார்.
ரஷ்யாவின் உதவியுடன் அலெப்போ மீது பாரிய தாக்குதல்களை மேற்கொண்ட சிரிய அரசாங்கப் படைகள், அந்த நகரத்தினை சுற்றிவளைத்துள்ள நிலையில், அங்கு மோசமான உயிரிழப்புகளும், பேரழிவுகளும் ஏற்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
அலெப்போ நகர் இவ்வாறு கடும் அழிவினைச் சந்தித்து வருகின்றது என்பது தமக்குத் தெரியும் எனவும், இந்த நிலையில் மாற்றம் ஏற்பட வேண்டும் எனவும் தெரிவித்துள்ள பாதுகாப்பு அமைச்சர், எனினும் நமது இராணுவத்தினை இதற்குள் ஈடுபடுத்துவதில்லை என்பதில் கனேடிய மத்திய அரசாங்கம் திடமாக உள்ளதாக குறிப்பிட்டுள்ளார்.
ஐ.எஸ் அமைப்புக்கு எதிரான நடவடிக்கைகளில் ஈடுபட்டுவரும் நாடுகளின் பாதுகாப்பு அமைச்சர்கள் மட்ட மாநாடு இலண்டனில் இடம்பெறும் நிலையில், அங்கிருந்தே இந்த தகவலை வெளியிட்டுள்ள அவர், கனேடிய படைகள் தற்போது ஈராக்கிலேயே உள்ளதாகவும், தற்போதைக்கு அதுவே தமது திட்டமாக உள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.
ஈராக்கில் ஐ.எஸ் அமைப்புக்கு எதிராக தாக்குதல்களை மேற்கொண்டுவரும் கூட்டுப் படைகளின் போர் விமானங்களுக்கு எரிபொருள் நிரப்பும் விமான உதவியையும், கண்காணிப்பு விமானங்கள் மூலம் இலக்குகள் குறித்த தகவல்களை வழங்கும் பணியையும் கனேடிய இராணுவம் தற்போது மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
அத்துடன் மோதல்களில் நேரடியாக ஈடுபட்டுவரும் குர்திய படைகளுக்கு பயிற்சிகள், ஆலோசனைகளை வழங்கும் நடவடிக்கையிலும் சுமார் 200 கனேடிய சிறப்பு படையினர் ஈடுபட்டுள்ளனர்.
இவ்வாறான நிலையில், ஈராக்கில் கனேடிய படைகளின் நடவடிக்கைகள் 2017ஆம் ஆண்டிலும் தொடரும் என்ற போதிலும், சிரிய மோதல்களில் இராணுவ ரீதியில் தலையீடு செய்யும் திட்டங்கள் எவையும் கனடாவுக்குத் தற்போதைக்கு இல்லை என்றும் பாதுகாப்பு அமைச்சர் ஹர்ஜித் சஜான் மேலும் தெரிவித்துள்ளார்.