சிரியாவின் அலெப்போ நகரில் இருந்து, ஆயிரக்கணக்கான கிளர்ச்சியாளர்களையும், பொது மக்களையும் வெளியேற்றும் நடவடிக்கையை மீண்டும் ஆரம்பிப்பது தொடர்பில் உறுதியின்மையே நிலவி வருவதாக தெரிவிக்கப்படுகிறது.
கிளர்ச்சியாளர்களின் பிடியில் இருக்கும் சிறிய இடத்தில் இருந்து பேருந்துகள் மூலம் மக்கள் வெளியேற ஆரம்பித்து விட்டனர் என்று அரசு ஊடகம் தெரிவித்திருக்கிற போதிலும், அதனை இன்னமும் உறுதிப்படுத்த முடியாதுள்ளதாக கூறப்படுகிறது.
அரசின் கட்டுப்பாட்டில் இருக்கும் பகுதிகளில் இருந்து நகரின் மேற்கில் கிளர்ச்சியாளர்களால் முற்றுகையிடப்பட்டுள்ள நகரத்திற்கு மக்கள் வெளியேறி செல்லும் அதேவேளையில், அலெப்போவிலிருந்து மக்கள் வெளியேறுவதும் நடைபெறும் என்று திட்டமிடப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
ஆனால் அரசு கட்டுப்பாட்டில் இருக்கின்ற பகுதிகளில் இருந்து மக்களை வெளியேற்றுவதற்காக சென்ற பேருந்துகளை, மக்களை வெளியேற்றும் இந்த திட்டத்தை எதிர்க்கின்ற கிளர்ச்சியாளர்கள் தீ வைத்து எரித்துவிட்டதாக செயற்பாட்டாளர்கள் தெரிவித்திருக்கின்றனர்.
இதற்கிடையில் சுமார் 350 பேர் அலெப்போவின் கிழக்குப் பகுதியில் இருந்து வெளியேற்றப்பட்டிருப்பதாக மருத்துவ அதிகாரி ஒருவர் கூறியுள்ளார்.
வெளியேற்ற நடவடிக்கை தற்காலிகமாய் நிறுத்திவைக்கப்பட்டிருந்த நிலையில், நேற்று பின்னிரவில் அந்த வெளியேற்றம் இடம்பெற்றதாகவும், ஐந்து பேருந்துகளில் அவர்கள் அனுப்பப்பட்டதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.