இந்த மண் எங்களின் சொந்தமண் இதன் எல்லையை மீறி யார் வந்தவன்’ என்று மண் மீட்புக்காக போராடிய போராடிய நாங்களே இன்று அந்த மண்ணை அளவுக்கு அதிகமான விவசாய இரசாயனங்களால் கொலை செய்து வருவதாக வடமாகாண விவசாய அமைச்சர் ஐங்கரநேசன் தெரிவித்துள்ளார்.
மூன்று தசாப்த காலப்போர் மண்ணுக்காகவே நடைபெற்ற நிலையில், தற்போது காலடியில் உள்ள அந்த மண் நாளுக்கு நாள் வளம் இழந்து போவது பற்றி நாம் அக்கறைப்படுவதில்லை எனவும் அவர் கவலை வெளியிட்டுள்ளார்.
வடமாகாண விவசாய அமைச்சின் ஏற்பாட்டில் “உலக மண் நாளை” முன்னிட்டு கிளிநொச்சி மாவட்ட விவசாயப் பயிற்சி நிலையத்தில் நேற்று இடம்பெற்ற கருத்தமர்விற்கு தலைமையேற்று உரையாற்றியபோதே அவர் இவ்வாறு கூறியுள்ளார்.
மண்ணைப் பற்றி நாம் அதிகம் சிந்திப்பதில்லை எனவும், வீடுகளில் நுழையும்போது வாசற்கதவருகில் காற்பாதங்களில் உள்ள மண்ணைத் தட்டிவிட்டுச் செல்வதுதான் மண் பற்றிய பெரும்பாலானோரது கவனமாக உள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
மண்ணுக்கு உயிர் உள்ளது என்பதுடன், உலகின் உயிர்ப் பல்வகைமையில் நான்கில் ஒரு பங்கு உயிரினங்கள் மண்ணுக்குள்ளேதான் வாழுகின்றன என்பதையும் சுட்டிக்காட்டியுள்ள அவர், ஒரு தேக்கரண்டி வளமான மண்ணில் மில்லியன் கணக்கான பக்ரீறியாக்களும் பல மீற்றர்கள் அளவுக்குப் பூஞ்சணை இழைகளும் காணப்படுவதனையும் விபரித்துள்ளார்.
மண்ணின் வளத்துக்கு, கனியுப்புக்களின் சுழற்சிக்கு இவை அவசியம் என்ற போதிலும், அளவுக்கு அதிகமான விவசாய இராசயனங்களைப் பயன்படுத்துவதன் மூலம் நாம் மண் உயிரினங்களைச் சாகடித்து வருகிறோம் என்பதையும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
பக்ரீறியாக்களும் பங்கசுக்களும் இல்லாத மண்ணில் எவ்வளவுதான் இரசாயன உரங்களைப் போட்டாலும் பயிர்கள் செழிப்பாக வளராது என்பதுடன், உரங்களைப் போடப் போட மண் மேலும் மேலும் தரமிழந்து கடைசியில் தரிசு நிலமாகவே மாறும் எனவும் அவர் எச்சரித்துள்ளார்.
இதேவேளை உற்பத்திகளை அதிகரிக்கச் செய்வதற்கு மாத்திரம் அன்றி, காலநிலை மாற்றத்தால் ஏற்படும் பாதிப்புகளைத் தணிப்பதற்கும் மண்வளம் பாதுகாக்கப்பட வேண்டும் எனவும் ஐங்கரநேசன் மேலும் தெரிவித்துள்ளார்.