புதிய அரசியல் யாப்பினால் நாட்டின் தேசிய பாதுகாப்பிற்கு எந்தவொரு அச்சுறுத்தலும் ஏற்படாது என்று இல்ஙகை சனாதிபதி மைத்ரிபால சிறிசேன முன்னாள் சிறிலங்கா இராணுவத்தினரிடம் உறுதியளித்துள்ளார்.
ரியர் அட்மிரல் சரத் வீரசேகர தலைமையிலான தேசிய படைவீரர் கூட்டமைப்பின் உறுப்பினர்களுடன் நேற்று சனாதிபதி செயலகத்தில் நடாத்திய கலந்துரையாடலின் போதே மைத்திரிபால சிறிசேன இந்த உறுதிமொழியை வழங்கியுள்ளார்.
இந்தச் சந்திப்பின்போது படைவீரர்களுக்கான உரிமைகள் மற்றும் அவர்களின் குறை நிறைகள் தொடர்பில் ஆராயப்பட்டதுடன், இதன்போது படையினருக்குத் தேவையான அனைத்து வசதிகளையும் செய்து கொடுப்பதாகவும் மைத்திரிபால சிறிசேன உறுதியளித்துள்ளார்.
இந்த சந்தர்ப்பத்தில் புதிதாக தயாரிக்கப்பட்டுவரும் அரசியல் யாப்பின் ஊடாக நாட்டை பிளவுபடுத்த முயற்சிகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக முன்னாள் சனாதிபதி மகிந்த ராஜபக்ச தலைமையிலான தரப்பு தெரிவித்துவரும் குற்றச்சாட்டுக்கள் குறித்தும் ஆராயப்பட்டுள்ளது.
இதற்கு பதிலளித்த மைத்திரிபால சிறிசேன, நாட்டை பிளவுபடுத்தவோ, நாட்டின் தேசிய பாதுகாப்பிற்கு பங்கம் ஏற்படுத்தும் வகையிலோ எந்தவித சரத்துக்களும் புதிய யாப்பில் உள்ளடக்கப்பட மாட்டாது என்று உறுதியளித்துள்ளார்.
அத்துடன் குழப்பும் நோக்கில் மேற்கொள்ளப்படும் பொய்ப்பிரசாரங்களுக்கு துணை போகக் கூடாது என்றும் முன்னாள் சிறிலங்கா இராணுவத்தினரிடம் மைத்திரிபால சிறிசேன வேண்டுகோள் விடுத்துள்ளார்.