ஜெர்மனி தலைநகர் பெர்லினில் கிறிஸ்துமஸ் பண்டிகையையொட்டி சந்தை அமைக்கப்பட்டுள்ளது. கடந்த 19-ந்தேதி அங்கு கூடிய ஏராளமான மக்கள் கிறிஸ்துமஸ் பண்டிகைக்கான பொருட்களை வாங்கி கொண்டிருந்தனர். அப்போது அதிவேகமாக வந்த ஒரு லாரி கிறிஸ்துமஸ் சந்தைக்குள் புகுந்தது. கடைகள் மீது மோதியது. அதில் லாரி சக்கரத்தில் சிக்கிய பலரின் உடல்கள் நசுங்கின. இச்சம்பவத்தில் 12 பேர் பலியாகினர். 24 பேர் காயம் அடைந்தனர். அவர்களில் 14 பேரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளது.
இந்நிலையில் பெர்லினின் பிரென்ஸ்லாயுயெர் பெர்க் மாவட்டத்தில் உள்ள உள்ள ஷாப்பிங் சென்டரில் சந்தேகத்திற்குரிய ஒரு பொருள் கிடப்பதாக போலீசாருக்கு தகவல் வந்தது. உடனடியாக போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்தனர். அந்த ஷாப்பிங் சென்டரை தங்களது கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வந்தனர். அதேபோல் உள்ளூர் ரெயில் மற்றும் டிராம்ஸ் போக்குவரத்தை உடனடியாக நிறுத்தினார்கள். இதனால் அப்பகுதியில் பரபரப்பு நிலவியது.
இதற்கிடையில் 19-ந்தேதி தாக்குதல் நடைபெற்ற இடத்தில் மீண்டும் கிறிஸ்துமஸ் பண்டிகை பொருட்களுக்கான விற்பனை சந்தைகள் திறக்கப்பட்டுள்ளன.