ஒடிசா மாநிலம், பூரியில் உள்ள கடற்கரையில் ‘கிறிஸ்துமஸ் தாத்தா’ எனப்படும் ஆயிரம் சான்ட்டா கிளாஸ்களின் உருவத்தை மணல் ஓவியமாக செதுக்கியதன் மூலம் பிரபல மணல் ஓவியர் சுதர்சன் பட்நாயக் புதியதொரு உலக சாதனையை நிகழ்த்தியுள்ளார்.கிறிஸ்துமஸ் பண்டிகையின் முந்தையநாள் பரிசுப் பொருட்கள் கொண்ட மூட்டையுடன் சிகப்புநிற அங்கி அணிந்து வீடுவீடாகவரும் வெண்தாடி தாத்தா, குழந்தைகளால் அன்புடன் ’கிறிஸ்துமஸ் தாத்தா’ என்று அழைக்கப்படுகிறார்.
அந்த தாத்தாவின் ஆங்கிலப் பெயர் சான்ட்டா கிளாஸ். 4ம் நூற்றாண்டைச் சேர்ந்த செயின்ட் நிகோலாஸ் என்ற புனிதரின் நினைவாகவே சான்ட்டா கிளாஸ் (கிறிஸ்துமஸ் தாத்தா) உருவாக்கப்பட்டார்.
உலகம் முழுவதும் இன்று கிறிஸ்துமஸ் பண்டிகை கொண்டாடப்பட்டுவரும் நிலையில் கிறிஸ்துமஸ் தாத்தாவின் பெயரையும், புகழையும் உலக சாதனை புத்தகத்தில் இடம்பெற வைக்கும் வகையில் ஒடிசா மாநில மணல் ஓவியக் கலைஞர் சுதர்சன் பட்நாயக் புதியதொரு உலக சாதனையை நிகழ்த்தியுள்ளார்.
ஒடிசா மாநிலம், பூரி நகரில் உள்ள கடற்கரையில் ’உலகத்துக்கு மகிழ்ச்சியை கொண்டு வாருங்கள்’ என்ற தலைப்பில் ஆயிரம் சான்ட்டா கிளாஸ்களின் உருவத்தை இவர் மணல் ஓவியமாக செதுக்கியுள்ளார்.
அதன் அருகாமையில் அன்னை மேரி மற்றும் குழந்தை இயேசுவின் திருவுருவங்களையும் மணல் சிற்பமாக செதுக்கி, கிறிஸ்துமஸ் வாழ்த்துகளை தெரிவித்துள்ளார்.
சான்ட்டா திருவிழாவாக அறிவிக்கப்பட்டுள்ள இந்த மணல் ஓவியங்களை வரும் ஜனவரி மாதம் முதல் தேதிவரை பொதுமக்கள் கண்டு களிக்கலாம்.
ஒடிசா மாநிலத்தை சேர்ந்த சுதர்சன் பட்நாயக் உள்நாட்டில் நடக்கும் மகிழ்ச்சியான சம்பவங்கள் மற்றும் துக்க நிகழ்வுகளை பூரி கடற்கரையில் மணல் சிற்பங்களை செதுக்கி மக்களின் மனங்களிலும் அந்த பாதிப்பை உண்டாக்கி வருகிறார்.
ரஷிய தலைநகர் மாஸ்கோவில் இந்த ஆண்டு நடந்த சர்வதேச மணற்சிற்ப போட்டியில் இந்தியாவின் பிரபல மணற்சிற்ப கலைஞரான சுதர்சன் பட்நாயக் தங்கப் பதக்கத்தை வென்று தாய்நாட்டிற்கு பெருமை சேர்த்தார்.
இதுவரை 50-க்கும் மேற்பட்ட சர்வதேச மணற்சிற்ப போட்டிகளில் கலந்து கொண்டுள்ள சுதர்சன் பட்நாயக் இந்தியாவிற்காக பல விருதுகளை பெற்று தந்துள்ளதும், இந்த சாதனைக்காக இவருக்கு சென்ற 2014-ம் ஆண்டு நாட்டின் 4-வது உயரிய விருதான பத்மஸ்ரீ விருதை வழங்கி மத்திய அரசு கவுரவித்திருந்ததும் குறிப்பிடத்தக்கது.