சிங்கள பௌத்த மேலாதிக்கத்திலிருந்து தமது மொழியையும், மண்ணையும் பாதுகாத்து கொள்வதற்காக கிழக்கு மாகாண தமிழ் மக்கள் மாத்திரமன்றி தமிழ்பேசும் முஸ்லிம் மக்களும் எழுக தமிழ் பேரணியில் பங்கேற்க வேண்டும் என்று தமிழ்த்தேசிய கூட்டமைப்பின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சுரேஷ் பிரேமச்சந்திரன் அழைப்பு விடுத்துள்ளார்.
வடக்கு கிழக்கு என்பது இணைக்கப்படவேண்டும், சமஷ்டி அரசியலமைப்பு முறை உருவாக்கப்பட வேண்டும், காணமல்போனோருக்கான அலுவலகம் உருவாக்கப்பட்டு தீர்வுகள் கண்டறியப்படவேண்டும், அரசியல் கைதிகள் விடுவிக்கப்படவேண்டும் உள்ளிட்ட நியாயமான கோரிக்கைகள் வடக்கு மாகாணத்தில் முன்னெடுக்கப்பட்ட எழுக தமிழ் போராட்டத்தின் ஊடாக மிகத் தெளிவாக முன்வைக்கப்பட்டதனையும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
கிழக்கு மாகாணத்திலும் அவ்வாறானதொரு எழுக தமிழை நடத்துவதற்கு தமிழ்மக்கள் வேரவையும் தமிழ் மக்கள் பேரவையில் இணைந்துள்ள ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி, தமிழ் மக்கள் விடுதலை கழகம், மற்றும் தமிழரசு கட்சியினுடைய ஒரு பிரிவினர், தமிழ்த்தேசிய மக்கள் முன்னணி போன்ற சகலரும் இணைந்து மேற்கொண்டு வருவதாகவும், பல்வேறுபட்ட கிராமங்களிலும் அதற்கான பிரசாரங்கள் இடம்பெற்றுக்கொண்டிருப்பதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
வடக்கு கிழக்கு இணைக்கப்படவேண்டும் என்பது தமிழ் மக்கள் முன்வைத்த கோரிக்கை என்ற போதிலும், இன்றைய காலகட்டத்தில் சிங்கள பௌத்த மேலாதிக்கத்தின் ஊடாகவும், அரசாங்கத்தின் மேலாதிக்க எண்ணங்களின் ஊடாகவும் வடக்கையும் கிழக்கையும் முற்றுமுழுதாக சிங்கள பௌத்த மாகாணங்களாக மாற்றக் கூடிய சூழ்நிலை காணப்படுவதனையும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
இவ்வாறான ஒரு நிலையில் வடக்கு கிழக்கு என்பது இணைவதனூடாக மாத்திரம் தான் தமிழ் மக்கள் மாத்திரமன்றி, தமிழ்பேசும் முஸ்லிம் மக்களும் கூட தங்களது இனத்துவ அடையாளங்களை காப்பாற்றிகொண்டு, ஒரே மொழி பேசக்கூடியவர்கள் என்ற அடிப்படையில் இந்த மண்ணில் சுதந்திரமாகவும், கௌரமாகவும் வாழ முடியும் எனவும் சுரேஷ் பிரேமச்சந்திரன் தெரிவித்துள்ளார்.
எனவே எமது மொழியையும், மண்ணையும் பாதுகாத்து கொள்வதற்காக கிழக்கு மாகாண தமிழ் மக்கள் மாத்திரமன்றி தமிழ்பேசும் முஸ்லிம் மக்களும் எழுக தமிழ் பேரணியில் பங்கேற்க வேண்டும் என்றும் அவர் அழைப்பு விடுத்துள்ளார்.