திராவிட முன்னேற்ற கழகத்தின் செயல் தலைவராக அந்த கட்சியின் பொருளாளரும், தமிழக சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவருமான ஸ்டாலின் இன்று தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
சென்னை அண்ணா அறிவாலயத்தில் திராவிட முன்னேற்றக் கழத்தின் பொதுச் செயலாளர் அன்பழகனின் தலைமையில் திராவிட முன்னேற்றக் கழகத்தின் பொதுக்குழுக் கூட்டம் இன்று புதன்கிழமை காலை ஆரம்பமானது.
கூட்டத்தின் தொடக்கத்தில் மறைந்த தமிழக முதல்வர் ஜெயலலிதா மற்றும் கியூபா நாட்டின் புரட்சிகர தலைவர் பிடல் காஸ்ட்ரோ உள்ளிட்ட மறைந்த பிரமுகர்களுக்கு இரங்கல் தெரிவிக்க்பபட்டது.
அதனைத் தொடர்ந்து செயற்குழுக் கூட்டத்தில் பல தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்ட நிலையில், திராவிட முன்னேற்றக் கழகத்தின் செயல் தலைவராக ஸ்டாலினை நியமிக்க வேண்டும் என்ற தீர்மானமும் முன்வைக்கப்பட்டு அவையில் நிறைவேற்றப்பட்டுள்ளது.
அதனை தொடர்ந்து கட்சியின் பொருளாளராக தொடர்ந்தும் ஸ்டாலின் செயல்படுவார் என்றும், அதனுடன் கூடுதல் பொறுப்பாக கட்சியில் அவர் செயல் தலைவராகவும் செயல்படுவார் எனவும் அன்பழகன் அறிவித்துள்ளார்.
இன்றைய நிகழ்வில் உரையாற்றிய ஸ்டானின், கனத்த இதயத்துடன் செயல் தலைவர் பொறுப்பை ஏற்பதாக தெரிவித்துள்ளதுடன், இதனை ஒரு பதவியாக ஏற்றுக்கொள்ளாது, ஒரு பொறுப்பாகவே ஏற்றுக்கொள்வதாகவும் கூறியுள்ளார்.
தற்போது கட்சியின் தலைவரும் தனது தந்தையுமான கருணாநிதியின் உடல்நிலை இருக்கும் சூழலில், தமக்கு இந்த செயல் தலைவர் தேர்வு பெரிதாக எந்த மகிழ்ச்சியையும் அளிக்கவில்லை என்றும் அவர் கூறியுள்ளார்.
இதேவேளை திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைவரான கருணாநிதி உடல்நிலை சரியில்லாத காரணத்தால் இன்றைய கூட்டத்தில் கலந்துகொள்ளவில்லை.
1969ஆம் ஆண்டு திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைவராக பொறுப்பேற்று கொண்ட கருணாநிதி கலந்து கொள்ளாத முதல் பொதுக்குழு கூட்டம் இது என்பது குறிப்பிடத்தக்கது.