இந்த ஆண்டிலாவது எங்கள் துயரங்கள் தீராதா? என்ற எதிர்பார்ப்புடன்தான்
ஈழத் தமிழர்களின் வாழ்வில், ஒவ்வொரு ஆண்டும் பிறக்கின்றன. இலங்கை அரசுடனான உரிமைப் போரைாட்டத்தில் கடந்த அறுபது வருடங்களை எவ்வாறு வெறுமையுடன் கழித்தோமோ அவ்வாறே 2016ஆம் ஆண்டும் விடைபெற்றுச் சென்றது. ராஜபக்சவை தோல்வியடைச் செய்தமை, மற்றும் இலங்கையில் ஆட்சி மாற்றித்திற்கு உதவியமை போன்ற முக்கியத்துவங்களை கொண்ட 2015 ஆம் ஆண்டு, இனப்பிரச்சினைக்கு ஒரு தீர்வினை எட்டும் ஆண்டாக 2016ஐ மாற்றும் என்ற எதிர்பார்ப்பை தமிழ் தலமைகள் முன்வைத்தன.
ஸ்ரீலங்கா சுதந்திரதினத்தில் சம்பந்தன்
இந்த வருடம் இலங்கை அரசியலில் இடம்பெற்ற சில முக்கிய விடயங்களை பத்தி நினைவுபடுத்திச் செல்ல விரும்புகிறது. இந்த வருடம் பெப்ருவரி 04 ஆம் திகதி கொழும்பு காலிமுகத்திடலில் இடம்பெற்ற ஸ்ரீலங்காவின் 68 சுதந்திரதின நிகழ்வில் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவரும் எதிர்கட்சித் தலைவருமான இரா.சம்பந்தன் கலந்துகொண்டார். இலங்கையில் இனப்பிரச்சினையின் பின்னர் மிக நெடிய காலத்தின் பின்னர் வடக்கு கிழக்கு மக்களால் பெரும்பான்மையாக தெரிவு செய்யப்பட்ட தரப்பின் பிரதிநிதி ஒருவர் கலந்துகொண்டமை இதுவே முதற் தடவையாகும்.
அதாவது 43 ஆண்டுகளாக தமிழ் மக்களின் பிரதிநிதிகள் ஸ்ரீலங்கா சுதந்திரதினத்தை புறக்கணித்திருந்தனர். புதிய சூழலில் நடைபெறும் சுதந்திரதினம் தமிழ் மக்களுக்கு நன்மை பயக்கும் என்ற நம்பிக்கையிலேயே சுதந்திரதின நிகழ்வுகளில் கலந்துகொண்டதாக சம்பந்தன் கூறினார். தமிழர் தரப்பிடையே இதற்கு கடும் விமர்சனங்களும் எழுந்திருந்தமையும் குறிப்பிடத்தக்கது.
பான் கீ மூன் விஜயம்
ஓகஸ்ட் 31 ஆம் திகதி ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச் செயலாளர் பான் கீ மூன் இலங்கைக்கு விஜயம் ஒன்றை மேற்கொண்டார். இலங்கையில் இடம்பெற்ற இனப்படுகொலைப் போர் குறித்து பக்கச் சார்பற்ற சர்வதேச விசாரணையை ஈழத் தமிழ் மக்கள் வலியுறுத்தும் கால கட்டத்தில் இவரது பயணம் தமிழ் மக்களுக்குப் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியது. யாழ்ப்பாணத்திற்கு மூன் விஜயம் மேற்கொண்ட போது காணாமல் போகச் செய்யப்பட்டவர்களின் உறவுகள் கவன ஈர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். ஆனாலும் மூன் அவர்களை சந்திக்கவில்லை.
பாதிக்கப்பட்ட மக்களை சந்தித்து அவர்களின் ஏக்கங்கள், ஆதங்கள்கள், குரல்களை பான் கீ மூன் கேட்கவில்லை என்று விமர்சிக்கப்பட்டது. தமிழ் மண் இன்று எதிர்கொள்ளும் பிரச்சினைகள் மற்றும் தமிழர்களின் கோரிக்கைகள் தொடர்பில் வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி. விக்கினேஸ்வரன் எடுத்துரைத்தார்.
கொழும்பில் நடந்த நிகழ்வொன்றில் பேசிய மூன் “இலங்கை எமக்கு பல பாடங்களை புகட்டியுள்ளது. மிகவும் கடினமான பாடங்கள் பலவற்றை நாம் இலங்கையிலிருந்து படித்திருக்கிறோம். நீங்கள் உங்களது மக்களுக்கு பிரச்சினைகளை ஏற்படுத்தியுள்ளீர்கள். கட ந்த பல தசாப்தங்களாக பிரச்சினை நீடித்துவந்துள்ளது. மேலும் கடந்த காலங்களில் ஏற்பட்ட பிரச்சினைகளில் ஐ.நாவின் பணி யா ளர்கள் சிறப்பாக செயற்பட்டிருந்தால் இன்னும் அதிகமான உயிர்களைக் காப்பாற்றியிருக்கலாம். ஐ.நாவின் இலங்கைக்கான அதிகாரிகளின் செயற்பாடுகள், அவர்களினால் விடப்பட்ட தவறுகள் மற்றும் அவர்களின் பணிக்கு இடையூறாகக் காணப்பட்ட விடயங்கள் தொடர்பில் ஆராய்வதற்கு விசேட குழு ஒன்றினை அமைத்துள்ளேன். மனித உரிமை பாது காப்பின் அடிப்படையில் இக்குழு அமையப் பெற்றுள்ளது“ என்றும் தெரிவித்திருந்தார்.
செயிட் அல் ஹூசைன் விஜயம்
6 பிப்., 2016 – ஐ.நா மனித உரிமைகள் ஆணையாளர் நாயகம் செயிட் அல் ஹூசைன் மற்றும் 6 பிரதிநிதிகள் இலங்கைக்கு வருகை தந்தனர். இலங்கையில் மனித உரிமைகளின் நிலமை எவ்வாறு உள்ளன என்பது தொடர்பிலும் ஐ.நா தீர்மானம் அமுல்படுத்துவது தொடர்பிலும் அவரது விஜயம் அமைந்திருந்தது. 2009இல் இடம்பெற்ற இனப்படுகொலை, அதற்குப் பின்னரான காலத்தில் ஐ.நா மனித உரிமை அவையில் முக்கிய பேசு பொருளாக மாறியிருந்தது. இனப்படுகொலைக்கு நீதி வழங்கப்படவேண்டுமென உலகம் முழுவதுமுள்ள தமிழர்களால் வலியுறுத்தப்பட்டது.
இந்த நிலையில் செயிட் அல் ஹூசைனின் விஜயத்தின்போது சர்வதேச விசாரணை மேற்கொள்ளப்பட வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டது. இதேவேளை கடந்த ஜூலை மாதம் ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையின் 32ஆவது கூட்டத் தொடர் இடம்பெற்றிருந்தது. இதன்போது அல் ஹூசைனின் இலங்கை தொடர்பான வாய்மொழிமூல அறிக்கை இடம்பெற்றது. இதில் “போர்க்குற்ற விசாரணையில் சர்வதேச நீதிபதிகள் அவசியம் போருக்குப் பிந்தைய நீதியை நிலைநாட்ட ஸ்ரீலங்கா தவறிவிட்டது, பாதிக்கப்பட்ட மக்களுக்கான நீதியை வழங்க வேண்டும், காணி விடுவித்தல், இராணுவக் குறைப்பு, காணாமல் போகச் செய்யப்பட்டவர் விவகாரம், பயங்கரவாத தடைச்சட்டத்தை நீக்குதல் போன்ற செயற்பாடுகளிலும் ஸ்ரீலங்கா பொறுப்புக்களை நிறைவேற்றத் தவறியது” உள்ளிட்ட விடயங்களை அவர் வலியுறுத்தினார்.
இலங்கையில் நடந்தது இனப்படுகொலை என்ற தீர்மானம் வடக்கு மாகாண சபையில் நிறைவேற்றப்பட்டதுடன் சர்வதேச ரீதியாக இதற்கு நீதி விசாரணை வேண்டும் என்றும் வலியுறுத்தப்படுகிறது. ஐக்கிய நாடுகள் சபையோ, இதனை வெறும் போர்க்குற்றமாக மாத்திரம் பார்ப்பது நடந்த இனப்படுகொலையை மறைக்கும் செயலாகும். ஆட்சி மாற்றத்தின் பின்னர், மேற்குலக நாடுகளின் அணுகுமுறை மற்றும் .நாவின் அணுகுமுறை என்பனவும் ஈழத் தமிழ் மக்களின் நீதியை பெறும் எதிர்பார்ப்பை கவலைக்குள்ளாக்கியுள்ளது.
கொத்துக் குண்டு
20 ஜூன், 2016 – இலங்கை இறுதிக் கட்ட போரில் கொத்து குண்டுகள் வீசப்பட்டன என்று பிரிட்டனின் தி கார்டியன் நாளிதழ் ஆதாரத்துடன் செய்தி வெளியிட்டது.தொண்டு நிறுவனப் பணியாளர் ஒருவரே இந்தப் புகைப்படத்தை பிரித்தானிய ஊடகத்திற்கு வழங்கினார். வழமைபோல இலங்கை அரசாங்கம் இந்த குற்றத்தை மறுத்தது. இறுதிப்போரில் தடைசெய்யப்பட்ட கொத்துக் குண்டை வீசி மக்களை அழித்தமைக்கான பல்வேறு ஆதாரங்கள் வெளிவந்த நிலையில் இந்தப் புகைப்படம் இலங்கை அரசுக்கு புதிய நெருக்கடியை ஏற்படுத்தியது.
காணாமல் போகச் செய்யப்பட்டவர்கள்
பரணமக அறிக்கை இந்த வருடம் இறுதிப்படுத்தப்பட்டது. போரில் காணாமல் போகச் செய்யப்பட்டவர்கள் தொடர்பான பிரச்சினையை மூடி மறைப்பதற்காகவே காணாமல் போனோரை கண்டறியும் ஆனைக்குழுவை இலங்கை அரசு அமைத்ததா என்ற கேள்வி வலுத்தது. 18ஆயிரம் முறைப்பாடுகள் ஆணைக்குழுவுக்கு கிடைத்தன. ஆனால் காணாமல் போகச் செய்யப்பட்ட, சரணடைந்து காணாமல் போகச் செய்யப்பட்ட எவர் ஒருவரும் கண்டுபிடிக்கப்படவில்லை. இலங்கையின் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவினால் சர்வதேச நெருக்கடிகளை சமாளிக்கும்பொருட்டு 2013ஆம் ஆண்டு ஓகஸ்ட் மாதம் 13ஆம் திகதி இவ் ஆணைக்குழு நியமிக்கப்பட்டது.
வெள்ளைக்கொடி விவகாரம், இசைப்பிரியா கொலை, சாள்ஸ் கொலை, சனல் 4 ஆவணப்படங்கள் தொடர்பாக விசாரணைக்குப் பரிந்துரைத்துள்ளதாகவும் ஐ.நா நிபுணர்கள் அறிக்கையையைவிட இது பாரதூரமான அறிக்கை என்று அமைச்சர் அரச பேச்சாளர் ராஜித சேனாரத்தின கூறினார். இவை பாரதூரமான மன்னிக்க முடியாத விடயங்கள் என்பது உலகறிந்தது. ஆனால் அதற்கு நீதியான விசாரணை இலங்கை அரசால் முன்னெடுக்க முடியாது என்பதே ஈழத் தமிழர் நிலைப்பாடு. இவ்வாறான அறிக்கைகள் வெறும் அறிக்கையாகவே இலங்கையில் முடங்கும். ஈழத் தமிழர்களு்ககு நீதியே தேவையானது.
விஷ ஊசி விவகாரம்
31 ஜூலை, 2016, இலங்கை அரசின் நல்லிணக்கப் பொறிமுறைக்கான மக்கள் கருத்தறியும் குழுவின் அமர்வில் விஷ ஊசி விவகாரம் தொடர்பில் முன்னாள் போராளி ஒருவர் சாட்சியம் அளித்தார். தடுப்பு முகாங்களில் இருந்தபோது தமக்கு தடுப்பு ஊசி ஏற்பட்டதாகவும் தற்போது தனது உடலில் மாற்றம் ஏற்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார். அத்துடன் விஷ ஊசி தொடர்பான சந்தேகங்கள் தமது வாழ்வில் பெரும் அச்சத்தை உளத் தாக்கத்தை ஏற்படுத்தியிருப்பதாக மற்றுமொரு போராளி வவுனியாவில் சாட்சியம் அளித்தார்.
தடுப்பு முகாம்களில் இருந்து வெளிவந்த நிலையில் பல முன்னாள் போராளிகள் திடீர் மரணத்திற்கு உள்ளாகினர். விடுதலைப் புலிகளின் அரசியல்துறை மகளீர் பொறுப்பாளராக இருந்த தமிழினி புற்றுநோயால் சாவடைந்தததை தொடர்ந்து, கிளிநொச்சியை சேர்ந்த சிவகௌரி புற்றுநோயினால் மரணமடைந்தார். மாந்தை கிழக்கு பாண்டியன் குளத்தை சேர்ந்த சோமசுந்தரம் டிகுணதாசன், வவுனியா பனிக்க நீராவி புளியங்குளத்தை சேர்ந்த அமலதாஸ், அண்மையில் வவுனியா நெடுங்கேணியை சேர்ந்த ஸ்டீபன் முதலியோரின் திடீர் மரணங்களும் முன்னாள் போராளிகளிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளன.
நல்லிணக்கப் பொறிமுறை குறித்த கலந்தாலோசனை செயலணியின், யுத்த குற்றங்கள் தொடர்பிலான விசாரணையை குறித்த 500 பக்கங்கள் கொண்ட அறிக்கை தயாரிக்கப்பட்டுள்ளது. இதில் சர்வதேச விசாரணையை தமிழர்கள் வலியுறுத்தியிருப்பதன் காரணத்தால் இவ் அறிக்கையும் அதனையே வலியுறுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது. தமிழர்களின் எதிர்பார்ப்பை இலங்கை அரசு நிறைவேற்றுமா? அறிக்கையுடன் முடங்குமா என வரும்காலத்தில் தெரியும்.
தனி ஈழம் வேண்டும்
இலங்கை அரசின் அரசியலமைப்பு கருத்தறியும் அமர்வு 2016 பெப்ரவரி மாத்தில் இடம்பெற்றது. ஆட்சி மற்றத்தின் பின்னர், புதிய அரசியலமைப்பு ஒன்றின் மூலம் இனப்பிரச்சினைக்கான தீர்வுகளை முன்வைப்பதாக இலங்கை அரசு சர்வதேசத்திற்கு வாக்குறுதி அளித்தது. அந்த தீர்வு எப்படி இருக்க வேண்டும் என்று கருத்தறியும் அமர்வுகளை வடக்கு கிழக்கில் நடத்தியது. இதில் கலந்துகொள்ளக்கூடிய மக்கள் இலங்கையில் நிலவும் இனப்பிரச்சினைக்கு தமிழீழ மாநில அரசை நிலவுவதே உரிய தீர்வு என்று வலியுறுத்தினார்கள்.
கிளிநொச்சியில் அரசியலமைப்பை குறித்து கருத்தறியும் அமர்வு இடம்பெற்றது. இதில் கலந்து கொண்ட கிளிநொச்சி மக்கள் ஈழத்தின் வடக்கு கிழக்கு இணைக்கப்பட்டு சமஸ்டி அரசியல் ஆட்சி முறையின் கீழ் ஒரு மாநிலமாக்கப்பட்டு அதற்கு தமிழீழ மாநிலம் என பெயரிட வேண்டும் என்று கோரிக்கை விடுத்தார்கள். முல்லைத்தீவில் நடந்த கருத்தறியும் அமர்வில் இலங்கையின் இனப்பிரச்சினைக்கு தனித் தமிழீழம்தான் தீர்வு என்று முல்லைத்தீவு மக்கள் கூறினார்கள். அத்துடன் ஒரு இனத்தை அழித்தொழித்த நாளை வெற்றி நாளாக கொண்டாடுவதை தவிர்க்க வேண்டும் என்றும் மக்கள் கோரியிருந்தார்கள்.
அத்துடன் ஈழ மக்களின் விடிவுக்காக போராடி உயிர்நீத்த மாவீரர்களை நினைவுகூறும் உரிமையை புதிய அரசியலமைப்பு உறுதிப்படுத்த வேண்டும் என்றும் மக்களால் வலியுறுத்தப்பட்டது. இதேவேளை ஒற்றையாட்சியின் கீழ் அதிகாரத்தை பகிர்ந்தால் தமிழர்கள் அதனை எதிர்ப்பார்கள் என்றும் சமஸ்டி அடிப்படையிலேயே அதிகாரத்தை பகரிந்தளிக்க வேண்டும் என்றும் நல்லிணக்கச் செயலணியின் பொதுச் செயலாளருமான பாக்கியசோதி சரவணமுத்து வலியுறுத்தினார்.
எழுக தமிழ்
வடக்கு கிழக்கு இணைந்த தமிழர் தாயகத்தில் சுயநிர்ணய அடிப்படையில் தன்னாட்சி வேண்டும் என்றும் ஈழத்தில் நடந்த இனப்படுகொலைக்கு நீதியான சர்வதேச விசாரணை வேண்டும் என்றும் வலியுறுத்தி எழுக தமிழ் என்ற எழுச்சிப் போராட்டம் செப்டம்பர் 24 யாழ்ப்பாணத்தில் இடம்பெற்றது. 2009 இன அழிப்புப் போர் முடிவுக்கு கொண்டுவரப்பட்ட பின்னர், ஈழத்தில் நடைபெற்ற முதல் மக்கள் எழுச்சிப் போராட்டம் இதுவாகும். பல ஆயிரக்கணக்கான மக்கள் கலந்துகொண்டு தமது உரிமையையும் தமக்கான நீதியையும் வலியுறுத்தினர். வட்டுக்கோட்டைப் பிரகடனம், சுதுமலைப் பிரகடனம், பொங்குதமிழ் போன்ற வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த எழுச்சியாக இது அமைந்தது.
எழுக தமிழின் முதன்மைப் பிரகடனமாக “இ. தமிழர்களின் சுயநிர்ணய உரிமையையும் அதன் வழி தமிழ்த் தேசத்தின் இறைமையையும், நிறுவன ரீதியாக, சமஷ்டி முறைமை ஒன்றின் மூலமாக அடைந்து கொள்ளலாம் என நாம் கூறுகின்றோம். ஈ. தமிழர் தேசத்தின் தனித்துவத்தையோ, தமிழ் மக்களின் சுயநிர்ணயத்தையோ அங்கீகரிக்காத, உள்ளடக்கத்தில் தெளிவில்லாத அரை குறை தீர்வொன்றை ஏற்றுக் கொள்ள முடியாது என இப்பேரணி கூறுகின்றது.“என்று வலியுறுத்தப்பட்டது.
நிகழ்வில் உரையாற்றிய என வடக்கு மாகாண முதலமைச்சர் “எமது வடக்கு கிழக்குப் பிராந்தியங்களில் எமது பாரம்பரிய மொழியில் நடவடிக்கைகளை நடாத்திச் செல்ல எமக்கு உரித்தில்லை. எமது காணிகள் பறிபோகின்றன. இராணுவம் மாகாணத்திற்கு வெளியில் இருந்து வருபவர்களை இங்கு குடியிருக்கச் சகல வசதிகளும் செய்து கொடுக்கின்றார்கள். எனவே வடக்கு கிழக்கைச் சிங்கள பௌத்த பிரதேசமாக மாற்றப் பிரயத்தனங்கள் எடுக்கப்பட்டு வருவதால் எமது மொழியையும் மதங்களையும், பாரம்பரியங்களையும் பாதுகாக்க வடக்கு கிழக்கு இணைப்பைக் கோரி நிற்கின்றோம். வடக்கு, கிழக்குப் பிரதேசங்கள் தமிழ்ப் பேசும் மக்களின் பாரம்பரிய வாழ்விடங்கள் என்பதை வலியுறுத்தவே வடக்கு கிழக்கு இணைப்பு அத்தியாவசியம் ஆகின்றது.” என்று தெரிவித்தார்.
மாவீர் நாள்
2009ஆம் ஆண்டு போர் முடிவுக்கு கொண்டுவரப்பட்ட பின்னர், வடக்கு கிழக்கில் மாவீரர் தினத்தை கொண்டாட இலங்கை அரசு கடும் தடையினையும் நெருக்கடியையும் வழங்கியிருந்தது. மக்கள் இரகசிய இடங்களிலேயே மாவீரர் நாளைக் கொண்டாடி வந்தனர். தமது உரிமைக்காக போரிட்டு மாண்டவர்களுக்கு விளக்கெற்றி அழவும் அனுமதி மறுக்கப்பட்டிருந்தது. இந்த நிலையில் இவ் வருடம் நவம்பர் 27 மாவீரர் துயிலும் இல்லங்களை மக்கள் தன்னெழுச்சியாக துப்புரவு செய்து அங்கு விளக்கேற்றி அஞ்சலி செலுத்தினர்.
மாவீரர் துயிலும் இல்லங்களுக்கு எத்தனை பேர் வருகிறார்கள் என்று அரச பேச்சாளர் ராஜித சவால் விடுத்தார். கிளிநொச்சி மாவீரர் துயிலும் இல்லத்தில் தொடங்கிய துப்புரவுப் பணி, முழுங்காவில், உடுத்துறை, வவுனிக்குளம் என்று பல துயிலும் இல்லங்களில் தொடர்ந்தன. பல்லாயிரக்கணக்கான மக்கள் திரண்டு மாவீரர்களுக்கு அஞ்சலித்தினர். எட்டு ஆண்டுகளாக அடக்கப்பட்ட விழிநீரை வீரர்கள் புதைந்த நிலத்தில் சிந்திய வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த நிகழ்வு நவம்பர் 27இல் நடைபெற்றது.
அரசியல் தீர்வு
கடந்த 2015ஆம் ஆண்டில் நடைபெற்ற பாராளுமன்றத் தேர்தலில் வடக்கு கிழக்கு இணைந்த சுயாட்சித் தீர்வை வென்றெடுக்கும் ஆணையை வழங்குமாறு கோரி தமிழ் தேசியக் கூட்டமைப்பு தேர்தலில் போட்டியிட்டு பெருவெற்றியீட்டியது. 2016ஆம் ஆண்டு தமிழ் மக்களுக்கு சிறந்த ஆண்டாக அமையும் என்றும் 2016இற்குள் தீர்வு பெறப்படும் என்றும் சம்பந்தன் தெரிவித்தார். 2016ஆம் ஆண்டுக்குள் ஒரு அரசியல் தீர்வு முன்வைக்கப்படும் என்ற தமிழர்களின் எதிர்பார்ப்பு ஏமாற்றமடைந்துள்ளது.
சுதந்திரத்திற்குப் பிந்தைய இன மேலாதிக்க, இனச் சிக்கல் நிலையில், நிலையான அமைதியை ஏற்படுத்தும் தீர்வு ஒன்றை முன்வைக்க தமிழ் தலமைகள் வலியுறுத்தின. அத்துடன் வடக்கு கிழக்கு இணைந்த தாயகப் பகுதி மற்றும் சுய நிர்ணய அடிப்படையிலான சுயாட்சியும் கோரப்பட்டது. தமிழ் மக்கள் இந்தத் தீவில் எதிர்கொண்ட கசப்பான அனுபவங்கள் இனியும் நிகழக்கூடாது என்றால் மேற்கண்ட அடிப்படையிலான தீர்வை குறைந்த பட்சம் வழங்குவதே அவசியமானது. ஆனால் காலம் காலமாக தீர்வு விடயத்தில் இலங்கை அரசு எவ்வாறு நடந்து கொள்கிறதோ அவ்வாறே இந்த அரசும் நடந்து கொள்கிறது.
மைத்திரியின் பதவியேற்று இரு வருடங்கள்
இலங்கையின் புதிய ஜனாதிபதியாக மைத்திரிபால சிறிசேன 2015ஆம் ஆண்டு ஜனவரி எட்டாம் திகதி பதவியேற்றார். தமிழர்களின் பிரச்சினை எனக்குத் தெரியும், ஒப்பந்தங்கள் சரிவரநிறைவேற்றியிருந்தால் பிரபாரகன் ஆயுதம் தூக்கியிரார் என்று மைத்திரிபால கூறினார். ஆனால் தமிழ் மக்களின் அடிப்படைப் பிரச்சினைகளையும் இனப்பிரச்சினையும் இனப்படுகொலை குறித்த நீதி விடயத்திலும் மேலாதிக்கத்தை பாதுகாக்கும் தந்திரபோயமான செயல்களிலேயே அவர் ஈடுபட்டு வருகிறார்.
பெரும்பாலான பகுதிகள் இன்னமும் இராணுவ வசம் உள்ளன. இராணுவ முகாங்களின் குறைப்பு, மீள்குடியேற்றம் என்பன இராணுவ மயத்திற்குப் பாதிப்பற்ற வகையில் சிறிய அளவிலேயே முன்னெடுக்கப்பட்டுள்ளன. சிங்களக்குடியேற்றங்கள், பௌத்த ஆதிக்க மயமாக்கல் என்பன தொடர்கின்றன. தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலை தொடர்பில் தமிழ் மக்கள் பல்வேறு போராட்டங்களை நடத்தியபோதும் துளியேனும் முன்னேற்றமில்லை.
இலங்கை ஆட்சி வரலாற்றில் தன்னை வித்தியாசமானவராக காட்டிக் கொள்ள நினைக்கும் மைத்திரிபால சிறிசேன ஈழத் தமிழர்களின் விடயத்தில், அவர்களின் உரிமை விடயத்தில், அவர்களின் நீதி விடயத்தில் வழமையான அரச தலைவர்போல் நடந்துகொள்கிறார். வடக்கு கிழக்கு இணைந்த தமிழர் தாயகம், சுயாட்சி, இராணுவ மய நீக்கம், இனப்படுகொலை மற்றும் மனித உரிமை மீறல்களுக்கு நீதியும் தீர்வும் போன்ற விடயத்தில் உண்மையை உண்மையாக அணுகும் போக்கே ஈழத் தமிழர்களின் வலியுறுத்தலாகும்.
2016ஆம் ஆண்டு ஏமாற்றங்களை அளித்துள்ள ஆண்டு என்றபோதும் 2017ஆம் ஆண்டை நம்பிக்கையுடனும் இன்முகத்துடனும் வரவேற்போம். இந்த ஆண்டிலே எமக்கான நீதியையும் உரிமையையும் வென்றெடுக்கும் போராட்டத்தை தொடர்ந்து முன்னெடுப்போம். எங்கள் இருப்பையும் அடையாளத்தையும் உரிமையையும் நிலைநாட்டுதல் தவிர்க்க முடியாது. இத் தீவில் அழிவற்று எமது இருப்பை நிலைநிறுத்த சிங்களப் பேரினவாத ஆதிக்க சூழலில், உலகின் நலன் மிக்க காய் நகர்த்தல்களில் இன்னமும் கடுமையாக போராட வேண்டியது நம் தலைகளில் அழுத்தப்பட்ட தவிர்க்க முடியாத சூழலாகும்.
தீபச்செல்வன்