கிளிநொச்சி கனகபுரம் மாவீரர் துயிலுமில்லத்தில் பொது நினைவுச் சமாதி அமைக்கும் பணிகள் இன்று வியாழக்கிழமை ஆரம்பிக்கப்பட்டுள்ளன.
இன்று முற்பகல் மாவீரர் துயிலுமில்லத்தில் ஒன்று கூடிய மாவீரர்களின் உறவினர்கள் மற்றும் முன்னாள் போராளிகள் சிலர் இந்தப் பணியை ஆரம்பித்துள்ளனர்.
போர் முடிவுக்கு வந்தப் பின்னர் கடந்த ஆண்டு மாவீரர் நாள் நினைவுசுரப்படுவதற்கு அனுமதியளிக்கப்பட்ட போதிலும், அப்போது வெறும் தரையில் சிதைக்கப்பட்ட கல்லறை மற்றும் நினைவுக் கற்களின் எச்சங்களை குவித்து அதன் முன் விளக்கேற்றியே நினைவு கூரல்கள் முன்னெடுக்கப்பட்டன.
இந்தநிலையில் துயிலுமில்லத்தை வழமை போன்று மாற்றி அமைக்கும் வரைக்கும் ஒரு பொதுவான நினைவுச் சமாதியினை அமைத்து நினைவு கூருவதற்கு தீர்மானித்து அந்தப் பணிகளை இன்று ஆரம்பித்துள்ளதாகவும், மாவீரர்களின் உறவினர்கள் தாம் கொண்டு சென்ற செங்கற்கள், சீமெந்து என்பவற்றைக் கொண்டு நினைவுச் சமாதியை அமைக்கும் ஏற்பாடுகளை முன்னெடுத்ததாகவும், வவுனியா மாவட்ட பிரஜைகள் குழுவின ஊடக தொடர்பாளர் தெரிவித்துள்ளார்.
முன்னதாக முள்ளம் தண்டு வடம் பாதிக்கப்பட்ட முன்னாள் போராளி ஒருவர் அடிக்கல் வைத்து ஆரம்பித்து வைக்க, ஏனையவர்களாலும் அடிக்கல் நாட்டப்பட்டு பொதுச் சமாதி அமைக்கும் பணிகள் தொடர்ந்து முன்னெடுக்கப்பட்டதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
துயிலுமில்லத்தை வைத்து எவரும் அரசியல் செய்ய நாம் அனுமதிக்க முடியாது எனவும், கடந்த மாவீரர் நாளன்று கனகபுரம் மாவீரர் துயிலுமில்லத்தில் மிக மோசமான அரசியல் அசிங்கம் நடந்தேறியது எனவும் தெரிவித்துள்ள அவர், ஒரு குடும்பத்தில் இரண்டு மூன்று பிள்ளைகளை மண்ணுக்காக அர்ப்பணித்தவர்கள் இருக்க, எவ்வித தியாகமும் செய்யாத ஒருவர் விளக்கேற்றியுள்ளதாகவும் அவர் அதிருப்தி வெளியிட்டுள்ளார்.
மாவீரர் துயிலுமில்லத்தில் அரசியல் செய்வதனை தாம் மட்டுமன்றி தமிழ் மக்கள் எவரும் விரும்ப மாட்டார்கள் எனவும் தெரிவித்துள்ள அவர், கிளிநொச்சியில் நிலவுகின்ற அரசியல் சூழ்நிலையில், தற்போது அமைக்கப்படும் இந்த சமாதியை இங்குள்ள நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவர் உடைத்துவிட்டு, இராணுவ புலனாய்வுப்பிரிவினர் மீது பழியை சுமதிவிடலாம் எனவும், அல்லது இராணுவப் புலனாய்வுப் பிரிவினரும் உடைந்துவிடக்கூடிய நிலைமையே தற்போது காணப்படுவதாகவும் அவர் அச்சம் வெளியிட்டுள்ளார்.
இதேவேளை இந்த நிகழ்வின் போது கருத்து வெளியிட்ட எழிலன் எனப்படும் முன்னாள் போராளி, மாவீரர் துயிலுமில்லங்களை புனரமைப்பதற்கா தயவு செய்து புலம் பெயர் உறவுகள் எந்தவொரு அரசியல்வாதிகளிடமும் நிதியை வழங்க வேண்டாம் எனவும், அப்படி வழங்கினால் அதிலும் அவர்கள் ஊழல் செய்வார்களே தவிர திருப்தியான பணிகள் இடம்பெறாது என்றும் தெரிவித்துள்ளார்.
கடந்த காலத்திலும் தன் போன்ற முள்ளம் தண்டு வடம் பாதிக்கப்பட்டவர்கள் உட்பட முன்னாள் போராளிகளை வைத்து இந்த அரசியல் வாதிக்ள கோடிக்கணக்கான நிதியை வெளிநாடுகளில் இருந்து திரட்டியிருப்பதாகவும், எனினும் யாருக்கு எதிராக ஆயுதம் ஏந்தினோமோ அவர்களிடம் வேலை கேட்டுசெல்கின்ற அவலம்தான் தற்போது தங்களுக்கு ஏற்பட்டுள்ளதாகவும் அவர் கவலை வெளியிட்டுள்ளார்.
எங்களின் பெயரால் சேகரிக்கப்பட்ட நிதி அவ்வாறான அரசியல்வாதிகளின் வங்கி கணக்கையே நிரப்பியுள்ளது எனவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.