தமிழீழ விடுதலைப் புலிகளின் காலத்தில் வடக்கில் பணியாற்றிய வைத்தியர்களும் சுகாதார ஊழியர்களும் அர்ப்பணிப்புடன் செயற்பட்டதுடன், அதற்கு மக்களிடமிருந்தும் வலுவான ஆதரவு கிடைக்கப்பெற்றதாக வடமாகாண சுகாதார அமைச்சர் சத்தியலிங்கம் தெரிவித்துள்ளார்.
ஆனால் இப்போது அந்த நிலையினைக் காணமுடியவில்லை எனவும் அவர் கவலை வெளியிட்டுள்ளார்.
முல்லைத்தீவு மாவட்டத்தின் தேவிபுரம் பகுதியில் ஆரம்ப மருத்துவ பராமரிப்பு நிலையம் ஒன்றினைத் திறந்துவைத்து உரையாற்றும் போதே அவர் இவ்வாறு கூறியுள்ளார்.
வடக்கின் சுகாதார தேவையானது ஏனைய மாகாணங்களை விட அதிகமானது எனவும், அவற்றை நிவர்த்திசெய்வதற்கு ஆளணி பற்றாக்குறை காணப்படுவதுடன், மத்திய அரசாங்கத்தினால் ஒதுக்கப்படும் நிதி போதுமானதாக இல்லை என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
போரினால் மோசமாகப் பாதிக்கப்பட்டவர்களும், முள்ளந்தண்டு வடம் பாதிக்கப்பட்டவர்களும் அதிகமாக வடக்கில் வாழ்கின்ற நிலையில், அவர்களின் நலன் கருதி பாரிய சுகாதார வேலைத்திட்டங்களை உருவாக்கவேண்டிய நிர்ப்பந்தம் உருவாகியுள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.