போர்க்கால மீறல்கள் குறித்த விசாரணைப் பொறிமுறையில் வெளிநாட்டு நீதிபதிகளையும் உள்ளடக்க வேண்டும் என்று, நல்லிணக்கப் பொறிமுறைக்கான கலந்தாய்வு செயலணி முன்வைத்திருந்த அறிக்கையின் பரிந்துரையை சிறிலங்கா அரசாங்கம் நிராகரித்துள்ளது.
கொழும்பில் இன்று அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் செய்தியாளர் சந்திப்பில் இதுகுறித்து கருத்து வெளியிட்ட அமைச்சர் ராஜித சேனாரத்ன-
‘போர் தொடர்பான விசாரணைகளில் வெளிநாட்டு நீதிபதிகளை உள்ளடக்குவது பற்றிய யோசனைகளை யாராலும் சமர்ப்பிக்க முடியும். ஆனால் அரசாங்கத்தின் முடிவே இறுதியானது.
அரசாங்கத்தினால் அமைக்கப்பட்ட குழுவொன்று திட்டம் ஒன்றை முன்வைத்தால், அதனை நடைமுறைப்படுத்துவதா இல்லையா என்று அரசாங்கம் தான் முடிவு செய்யும்.
போருடன் தொடர்புடைய சம்பவங்கள் குறித்து உள்நாட்டு விசாரணையே நடத்துவது என்று அரசாங்கம் தெளிவான நிலைப்பாட்டில் உள்ளது. தேவைப்பட்டால் இந்த விசாரணைகளுக்கு வெளிநாட்டு தொழில்நுட்ப உதவி பெறப்படும்.
இதனை நாங்கள் ஐ.நா மனித உரிமை ஆணையாளரிடமும் தெளிவாக கூறிவிட்டோம்.
நாங்கள் நியமித்த செயலணி என்பதற்காக அதன் அனைத்துப் பரிந்துரைகளையும் ஏற்க வேண்டுமென்ற கட்டாயம் இல்லை.
அத்துடன் இந்த செயலணியில் இடம்பெற்றிருந்தவர்கள் விஞ்ஞான ரீதியில் மிகப்பெரிய உயரத்தில் இருப்பவர்களோ, அல்லது உயர்ந்த மட்ட நிபுணத்துவம் கொண்டவர்களோ அல்ல. எமது நாட்டைச் சேர்ந்தவர்களே இதில் இடம்பெற்றுள்ளனர்.
எனவே இவர்களின் பரிந்துரைகளை கட்டாயம் ஏற்க வேண்டுமென்ற எந்த நியதியும் கிடையாது” என்று கூறினார்.