அமெரிக்க நாட்டில் ஜனாதிபதி தேர்தலுடன், பாராளுமன்ற செனட் சபையின் 34 இடங்களுக்கும், பிரதிநிதிகள் சபையின் 435 இடங்களுக்கும் தேர்தல் நடந்தது. இந்த தேர்தலில் இந்தியர்கள் 5 பேர் ஜனநாயக கட்சி சார்பில் போட்டியிட்டு அமோக வெற்றி பெற்றார்கள். செனட் சபைக்கு கலிபோர்னியா மாகாணத்தில் இருந்து தமிழ்ப்பெண் கமலா ஹாரீஸ் (வயது 52) தேர்ந்தெடுக்கப்பட்டார்.
இதே போன்று பிரதிநிதிகள் சபைக்கு சென்னையில் பிறந்த பெண் பிரமிளா ஜெயபால் (51), வாஷிங்டன் மாகாணத்தில் இருந்து தேர்வு பெற்றார். சென்னையை பூர்வீகமாக கொண்ட ராஜா கிருஷ்ணமூர்த்தி (43), இல்லினாய்ஸ் மாகாணத்தில் இருந்து போட்டியிட்டு வெற்றி பெற்றார்.
இந்திய வம்சாவளியை சேர்ந்த ரோகன்னா (40), கலிபோர்னியா மாகாணத்தில் இருந்து பிரதிநிதிகள் சபைக்கு தேர்ந்தெடுக்கப்பட்டார். மற்றொரு இந்தியரான அமி பெரா, சிலிக்கான்வேலியில் இருந்து போட்டியிட்டு வென்றார்.
இவர்கள் அனைவரும் நேற்று முன்தினம் பதவி ஏற்றனர். இவர்களில் ராஜா கிருஷ்ணமூர்த்தி கீதையின் பெயரால் பதவி ஏற்றது குறிப்பிடத்தக்கது.
அமெரிக்க மக்கள் தொகையில் ஒரு சதவீதத்துக்கும் குறைவான மக்கள் தொகையை கொண்ட இந்தியர்களில் இருந்து 5 பேர் அந்த நாட்டின் பாராளுமன்றத்துக்கு தேர்ந்தெடுக்கப்பட்டு பதவி ஏற்றிருப்பது புதிய வரலாற்று சாதனை என்பது குறிப்பிடத்தக்கது.