தமிழ் தேசியக் கூட்டமைப்பின் ஒருங்கிணைப்புக்குழு கூட்டம் இன்றுமாலை தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவரும், எதிர்க்கட்சித் தலைவருமாகிய இரா.சம்பந்தன் அவர்களது தலைமையில் கொழும்பிலுள்ள எதிர்க்கட்சித் தலைவரின் அலுவலகத்தில் இடம்பெற்றது. இன்றுமாலை 5.00மணிமுதல் 8.30மணிவரை நடைபெற்ற இக் கூட்டத்தில் தமிழரசுக் கட்சியின் சார்பில் எம்.ஏ.சுமந்திரன், மாவை சேனாதிராஜா, புளொட் சார்பில் தர்மலிங்கம் சித்தார்த்தன், வி.ராகவன், ஈ.பி.ஆர்.எல்.எவ் சார்பில் சுரேஸ் பிரேமசந்திரன், சிவசக்தி ஆனந்தன், இரா.துரைரெட்ணம், சர்வேஸ்வரன், டெலோவின் சார்பில் என்.சிறீகாந்தா, கே.கருணாகரம் (ஜனா), எம்.கே.சிவாஜிலிங்கம், ஹென்றி மகேந்திரன் ஆகியோர் கலந்துகொண்டார்கள்.
இன்றைய கூட்டத்தில் அரசியலமைப்பு மாற்றம் மற்றும் அரசியல் தீர்வு சம்பந்தமான விடயம் முழுமையாக ஆராயப்பட்டது. முக்கியமாக மக்களிடமும், தமிழ்க் கட்சிகளிடமும் இருக்கின்ற சந்தேகங்கள் குறித்தும் அரசாங்கத் தரப்பைச் சார்ந்த உயர் தலைவர்களே முரண்பட்ட கருத்துக்களைக் கூறிக் கொண்டிருப்பது தொடர்பிலும் விரிவாக கலந்துரையாடப்பட்டது. வடகிழக்கு இணைந்த மாகாணத்தில்தான் ஒரு தீர்வைக் காணமுடியும் என்றும் அதேநேரத்தில் ஒற்றையாட்சி அமைப்புக்குள் ஒரு நியாயமான தீர்வைக் காணமுடியாது என்றும் அங்கு பேசிய அனைவருமே வலியுறுத்தினார்கள்.
அத்துடன் தமிழ் தேசியக் கூட்டமைப்பும் அரச கட்சிகளும் பேச்சுவார்த்தை நடாத்தி ஒரு உடன்பாட்டிற்கு வந்தால்தான் ஒரு நியாயமான தீர்வை எட்ட முடியும் என்றும், நடவடிக்கைக் குழுவிலோ அல்லது அரசியலமைப்பு நிர்ணய சபையிலோ பேசுவதால் தீர்வு ஒன்றினை எட்டமுடியாது என்றும் கருத்துக் கூறப்பட்டது. எனவே அரசுடன் பிரச்சினைகள் தொடர்பில் பேசப்பட வேண்டுமென்றும் வலியுறுத்தப்பட்டது.
இவைகள் எல்லா விடயங்களுக்குமாக இரா.சம்பந்தன் அவர்கள் பதிலளித்தபோது, தமிழ் மக்களுடைய அபிலாசைகளை பூர்த்தி செய்யாத ஒரு தீர்வை நாம் ஏற்றுக்கொள்ள மாட்டோம். ஒற்றையாட்சிக்குள் ஒரு தீர்வை ஏற்றுக்கொள்ள முடியாது. வட கிழக்கு இணைப்பு மிக முக்கியமானது, ஆனால் இன்றைய காலகட்டத்தில் முஸ்லிம்கள் வடகிழக்கு இணைப்பைப் பற்றி பேசுவதிலேயே ஆர்வம் காட்டவில்லை. ஏனென்றால் அவர்களைப் பொறுத்தமட்டில் ஒரு தனியான அலகாக கிழக்கு மாகாணம் இருக்கின்றது. அதிலே அவர்கள் பெரும்பான்மையாக இருக்கின்றார்கள். அவர்களுக்கு நிச்சயமாகத் தெரியும் தாங்கள் எப்போதும் ஆட்சிப் பொறுப்பை பிடிக்க முடியும் என்று. இத்தகைய காரணங்களால் அவர்கள் அதுபற்றி பேசுவதற்குக் கூட அக்கறை காட்டவில்லை. இருந்தாலும் முஸ்லிம்களுடன் ஒரு உடன்பாட்டுக்கு வராமல் வடகிழக்கு இணைப்பைக் கொண்டுவருவது மிகமிகக் கடினம். ஆகவே, அவர்களுடன் பேச்சுவார்த்தைகளைத் தொடர்வதற்கான முயற்சிகளை நாங்கள் எடுக்க வேண்டும். பல்வேறு வழிகளிலே இந்தப் பிரச்சினையை அணுகமுடியும். எனவே, எல்லாவற்றையும் பற்றி முஸ்லிம்களுடன் பேச்சுவார்த்தை நடாத்தப்பட வேண்டும் என்றார்.
அதேநேரத்தில் தமிழரசுக் கட்சி உள்ளுராட்சிசபைத் தேர்தலில் தனியாக போட்டியிட முயற்சிக்கின்றதா என்று ராகவன் அவர்கள் கேள்வியெழுப்பியபோது, அதற்கு பதிலளித்த மாவை சேனாதிராஜா அவர்கள், இல்லை நாங்கள் அப்படியான ஒரு முயற்சியும் எடுக்கவில்லை என்று கூறினார். அவ்வாறாயின் ஏன் வலிவடக்கிலும், வலி தெற்கிலும் பிரகாஸ் மற்றும் சுகிர்தன் ஆகியோர் தமிழரசுக் கட்சிக்கென்று வேட்பாளர்களை தெரிவுசெய்கின்றனர் என்று ராகவம் மீண்டும் கேள்வியெழுப்பினார். இதற்கு பதிலளித்த மாவை சேனாதிராஜா அவர்கள், எனக்கு அது பற்றி தெரியாது. அது தனிப்பட்ட ஆட்களின் செயற்பாடாக இருக்கலாம். அதை நாங்கள் ஏற்றுக்கொள்ளவும் இல்லை என்று கூறினார். அப்போது இடைமறித்த சிறீகாந்த அவர்கள், எந்தக் கட்சியாக இருந்தாலும் தனியாகச் போய் கேட்பார்களாயின் அவர்கள் மக்களால் நிராகரிக்கப்படுவார்கள் என்று தெரிவித்தார்