இலங்கையின் நல்லிணக்கப் பொறிமுறைக்கான கலந்தாலோசனை செயலணி முன்வைத்துள்ள கலப்பு நீதிமன்ற பரிந்துரைகள் குறித்து, எதிர்வரும் ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவை கூட்டத்தொடரில் ஆராயப்படவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
கலப்பு நீதிமன்றத்தை அமைத்து, போர்க்கால உரிமை மீறல்கள் குறித்து விசாரிக்க வேண்டும் என்று ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவை ஏற்கனவே வலியுறுத்தியிருந்த போதிலும், இதற்கு இலங்கை அரசாங்கம் இணங்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
எனினும் இலங்கை அரசாங்கத்தினால் அமைக்கப்பட்ட நல்லிணக்கப் பொறிமுறைக்கான கலந்தாலோசனை செயலணி, வெளிநாட்டு நீதிபதிகளுடன் கூடிய கலப்பு நீதிமன்ற விசாரணைகளுக்கு பரிந்துரைத்துந்துள்ளது.
இந்த நிலையிலேயே எதிர்வரும் மார்ச் மாதம் ஜெனிவாவில் நடைபெறவுள்ள ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் கூட்டத்தொடரில் இந்த விவகாரம் தொடர்பில் ஐக்கிய நாடுகள் சபை கவனம் செலுத்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
கலப்பு நீதிமன்ற பொறிமுறைமைக்கு சிறிங்கா பாதுகாப்பு தரப்பினர் எதிர்ப்பு வெளியிட்டுள்ளதாக கொழும்பு ஊடகமொன்று தகவல் வெளியிட்டுள்ளது.
நல்லிணக்க பொறிமுறைமை குறித்த சிறப்பு செயலணி அண்மையில் கலப்பு நீதிமன்றம் குறித்து பரிந்துரை செய்துள்ள போதிலும், இந்த யோசனையை ஏற்றுக்கொள்ள முடியாது என்று பாதுகாப்புத் தரப்பைச் சேர்ந்த அனைத்து பிரிவுகளும் தெரிவித்துள்ளதாக அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
போர்க் குற்றச் செயல் விசாரணைகளில் அனைத்துலக நீதிவான்களை உள்ளடக்கிய கலப்பு நீதிமன்றமொன்று உருவாக்கப்படுவதனை விரும்பவில்லை என்பதனை பாதுகாப்புப் படையினர் திட்டவட்டமாக தெரிவித்துளு்ளதாக அது குறிப்பிட்டுள்ளது.
அத்துடடன் இலங்கையின் போர்க்குற்ற விசாரணை விடயத்தில் அனைத்துலக நாடுகளின் தலையீட்டை கடுமையாக எதிர்ப்பதாக சிறிலங்கா பாதுகாப்பு தரப்பின் அனைத்து பிரிவினரும் அரசாங்கத்திற்கு அறிவித்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினால் விடுக்கப்பட்ட கோரிக்கைகளின் படியே நல்லிணக்க செயலணியினால் இவ்வாறான பரிந்துரைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும் அந்த ஊடகம் சுட்டிக்காட்டியுள்ளது.