இந்த ஆண்டின் முதலாவது கடுமையான பனிப்பொழிவு இன்று ரொரன்ரோவில் ஏற்படவுள்ள நிலையில், அதனை எதிர்கொள்வதற்கான தயார்படுத்தல்களில் நகர அதிகாரிகள் ஈடுபட்டு வருகின்றனர்.
ரொரன்ரோ நகரின் குளிர்கால நடவடிக்கை திணைக்களம் தீவிரமாக தனது நடவடிக்கைகளை முன்னெடுத்து வருவதாகவும், இன்று அதிகாலை நான்கு மணி முதலே பல வீதிகளிலும் உப்பு வீசும் பணிகள் ஆரம்பமாகியுள்ள நிலையில், அது இன்றைய காலைப் போக்குவரத்து நெரிசல் குறையும் நேரம் வரையில் நீடிக்கும் என்றும் தெரிவிக்கப்படுகிறது.
கடுமையான பனிப்பொழிவு, வீதிகள் வழுக்கும் தன்மை, பார்வைப் புலக் குறைபாடு உள்ளிட்ட அச்சுறுத்தல்களை உள்ளடக்கிய போக்குவரத்து எச்சரிக்கை ரொரன்ரோ உள்ளிட்ட ஒன்ராறியோவின் தென் பாகங்களில் தொடர்ந்தும் நடைமுறையில் உள்ளமை குறிப்பிடத்தக்கது.
இன்று சுமார் பத்து சென்ரிமீட்டர் வரையிலான பனிப்பொழிவு பதிவாகக்கூடும் எனவும், நேரம் செல்லச் செல்ல காற்றின் வேகம் அதிகரிப்பதோடு, பனிப்பொழிவும் அதிகரிக்கலாம் எனவும் கனேடிய சுற்றுச் சூழல் திணைக்களம் விடுத்துள்ள எச்சரிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அத்துடன் இன்று நண்பகலுக்கு பின்னர் பனிப்பொழிவானது, மழை வீழ்ச்சியாக மாறுவதற்கான வாய்ப்புகளும் உள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.