உலகெங்கும் வாழும் தமிழர்களால் தை முதல் தேதியன்று கொண்டாடப்படுவது பொங்கல்.
மஞ்சள் தோரணங்கள் கட்டி, புது அரிசியில் பொங்கல் பொங்கி, கரும்பு உண்டு கொண்டாடப்படும் பொங்கல் விழா தைப்பொங்கல். தை 1 அன்று தமிழர்களால் சிறப்பாக கொண்டாடப்படும் ஒரு தனிப்பெரும் விழா. தமிழர் திருநாளாக தமிழ்நாடு, இலங்கை, மலேசியா, சிங்கப்பூர், ஐரோப்பிய நாடுகள், வட அமெரிக்கா, தென் ஆபிரிக்கா, மொரிசியசு என தமிழர் வாழும் அனைத்து நாடுகளிலும் கொண்டாடப்படுகிறது. இவ்விழா சமயங்கள் கடந்து அனேக தமிழர்களால் கொண்டாடப்படுகிறது.
பொங்கல் பண்டிகை நான்கு நாள் பண்டிகையாகும். மார்கழி கடைசி நாளன்று போகி கொண்டாடப்படுகிறது. அந்நாளில், பழையன கழித்து புதியன புகுத்தல் வழக்கம்.
தை முதல் தேதியன்றே தமிழ்ப் புத்தாண்டு தொடங்கும் நாள் என்று மூத்த தமிழ்ச் சான்றோர்களின் வாக்கினைப் பின்பற்றி, தை முதல் தேதியை தமிழ்ப் புத்தாண்டாக கடைபிடிப்பது என்று தமிழக அரசு முடிவெடுத்து, அதற்கான சட்டமும் நிறைவேற்றப்பட்டுள்ளது.
“பொங்கல் பண்டிகை” என்பது அறுவடைத் திருநாளாகக் கொண்டாடப்படுகிறது. ஆண்டு முழுவதும் நமக்கு உதவி புரியும் இயற்கைக்கும், விவசாயத்திற்குப் பயன்படும் கால்நடைகளுக்கும் நன்றி தெரிவிக்கும் நாளாக பொங்கலைக் கொண்டாடி மகிழ்கிறோம்.
பொங்கல் என்பதற்கு “பொங்கி வழிதல்”, “பொங்குதல்” என்பது பொருள். அதாவது புதிய பானையில், புத்தரிசியிட்டு, அரிசியில் இருந்து பால் பொங்கி வழிந்து பொங்கி வருவதால், தை பிறந்துள்ள புத்தாண்டு முழுவதும் நம் வாழ்வும், வளமும் அந்தப் பால் போன்று பொங்கி சிறக்கும். மகிழ்ச்சியும், திளைப்பும் ஒருசேரப் பல்கிப் பெருகுவதோடு, கழனியெல்லாம் பெருகி, அறுவடை மென்மேலும் அதிகரிக்கும் என்பதே இந்தப் பண்டிகையின் மேலோங்கிய தத்துவமும், தொன்றுதொட்டு வரும் நம்பிக்கையுமாகும்.
பொங்கல் தினத்தன்று வயல்களில் விளைந்து, அறுவடைக்குத் தயாராக இருக்கும் நெற்கதிர்களில் சிறிதளவைக் கொண்டு வந்து வீட்டில் படைத்து வணங்குவதும் வாடிக்கையாக உள்ளது. தவிர, காடுகளில் விளையக்கூடிய அனைத்து வகை காய்கறிகளையும், பூமிக்குள் விளையும் கிழங்கு வகைகளையும் படைத்து வழிபடுகிறார்கள்.
அறுவடை தொடங்கியதைக் குறிக்கும் வகையில், பயிர் விளைச்சலுக்கு உதவிய மழை, சூரியன், கால்நடைகள் மற்றும் விவசாயத் தொழிலாளர்களுக்கு நன்றி தெரிவித்து அவர்களுக்கு வேண்டியதைச் செய்யும் நாளே தைப் பொங்கல் திருநாள் எனலாம்.
பொங்கல் தினத்தன்று வீட்டின் வாசலில் வண்ணக்கோலமிட்டு, அதன்மீது அடுப்புக் கட்டியை வைத்து அவற்றில் புதிய பானைகளில் வெண்பொங்கலும், சர்க்கரை பொங்கலும் தனித்தனியே செய்து, சூரியனுக்குப் படைத்து வழிபடுகிறோம்.
இயற்கை வளத்தால், மும்மாரி மழை பொழிந்தால் மட்டுமே விவசாயம் பெருகும். காடு, கழனி நனையும். சூரிய வெளிச்சம் பட்டால்தான் பயிர் வளர்ச்சியடைந்து சாகுபடி சிறக்கும்.
விளைந்த பயிரை அறுவடை செய்து தானியமாக்குவதற்கு தொழிலாளர்கள் உதவுகிறார்கள். பயிர் நடுவதற்கு ஏதுவாக உழவுக்கும், அறுவடைக்குப் பின் போரடிப்பதற்கும், விளைந்த தானியங்களை உரிய இடத்திற்குக் கொண்டு செல்வதற்கும் கால்நடைகள் பெரிதும் உதவுகின்றன. எனவே தான் விவசாயத் தொழிலாளர்களை வீடுகளுக்கு அழைத்து, சூரியனுக்குப் படைத்த பொங்கல் உள்ளிட்டவற்றை அளித்து வயிறாரச் சாப்பிடச் செய்வதுடன், அவர்களுக்குத் தேவையான வேட்டி, துண்டு, சேலை உள்ளிட்ட துணிகளையும் வழங்கி கவுரவிக்கிறோம்.
துணி-மணிகளுடன் சிறிய தொகை ஒன்றை பொங்கல்படியாக அளிக்கும் வழக்கமும் உள்ளது. தமிழகத்தின் தென் மாவட்டங்களில் விவசாயத் தொழிலாளர்களுக்கு மட்டுமின்றி வீட்டில் உள்ள குழந்தைகளுக்கும், வயதில் சிறியவர்களுக்கும் பெரியவர்கள் பொங்கல்படி அளிப்பார்கள்.
பொங்கல்படி வாங்குவதற்கென்றே உறவினர்கள் வீடுகளுக்குச் செல்லும் வழக்கமும் இருந்துள்ளது.
பொங்கல்படி எனும் சிறிய தொகையை விடவும், பொங்கள் திருநாளில் உறவினர்கள் ஒருவரையொருவர் சந்தித்து, பேசிக் கொள்வதுடன் நீண்ட காலம் பார்க்காமல் இருப்பவர்களும் சந்திக்க ஏதுவாகிறது. இதனால் உறவினர்களுக்கு இடையேயான உறவும் வலுப்படும்.
“உழவுக்கும், தொழிலுக்கும் வந்தனை செய்வோம்” என்பதற்கேற்ப ஆண்டு முழுவதும் விவசாயத்திற்கு பயன்படும் எருதுகள் உள்ளிட்ட கால்நடைகளுக்கு பொங்கல் வைத்து படைத்து, அவற்றுக்கும் அளித்து, நாமும் உண்டு மகிழ்கிறோம். இதற்காகவே மாட்டுப் பொங்கல் என தனியாக ஒரு நாளில் கொண்டாடி மகிழ்கிறோம்.
மாடுகளின் கொம்புகளுக்கு வர்ணம் தீட்டி, சிங்காரித்து அவற்றின் கழுத்தில், உரிமையாளரின் வசதிக்கேற்ப கரும்பு முதல் தங்கக்காசு வரை கட்டி சாலைகளில் ஓட விடுவதும் மாட்டுப் பொங்கலின் சிறப்பாக அமைகிறது. துள்ளித்திரிந்து ஓடிவரும் மாடுகளைப் பிடிக்கும் கட்டிளங்காளைகளாக விடலைகளும், விடலைகளை வேடிக்கை பார்க்கும் இளம் பெண்களும் மகிழ்ச்சி பூரிப்பில் திளைப்பதும் தைப் பொங்கல் முடிந்த மறுநாளில் தான்.
தமிழர் திருநாளாம் பொங்கலை இன்றளவும் கொண்டாடுவதில் இருந்தே பண்டைய காலத்தில், வாழ்ந்த தமிழக மக்களின் தொன்மைச் சிறப்புகளை நாம் அறிந்து கொள்ள முடிகிறது. தற்கால இளைய சமுதாயத்தினருக்கும், பல்கிப் பெருகிவிட்ட பெருநகர வாழ்மக்களுக்கும் தமிழர்களின் பாரம்பரிய கலாசாரத்தை பறைசாற்றுவதாகவும் தைப் பொங்கல் விளங்குகிறது என்பதை மறுப்பதற்கில்லை.
“பழையன கழிதலும், புதியன புகுதலும்” என்பதற்கேற்ப, குயவர்களுக்கு வாழ்வாதாரம் அளிக்கக்கூடிய வகையில், வீடுகளில் உள்ள பழைய மட்பாண்டங்களை (பானைகள், குடிநீருக்காக பயன்படுத்தும் குவளைகள்) பொங்கலுக்கு முன்தினம் போட்டுடைத்து விட்டு, தைத்திங்கள் முதல் நாளில் இருந்து புதிய பானைகளில் சமைக்கும் வழக்கமும் தொன்றுதொட்டு இருந்து வந்துள்ளது என்பதை அறிகிறோம். இதனால், மட்பாண்டங்களைச் செய்து பிழைப்பு நடத்துவோருக்கு வருவாய் கிடைப்பதுடன், வீடுகளிலும் புதிய பானைகளுடன் கூடிய நிலை உருவாகி, மனதிற்குப் புத்துணர்ச்சியைத் தரும். பொதுவாகவே மண்பானைகளில் சமைக்கப்படும் உணவு வகைகளுக்கு தனியான சுவையுண்டு என்பதை அவற்றை சாப்பிட்டு ரசித்தவர்கள் அறிய முடியும்.
தவிர, அதுவரை நிலவிய, பழைய விரும்பத்தகாத சம்பவங்கள் – சங்கடங்கள் எல்லாம் தொலைந்து, புதிய ஆண்டில் – தைத்திங்கள் முதற்கொண்டு அனைத்தும் புதியவையாக – நல்லவையாக நிகழட்டும். முந்தைய ஆண்டில் ஏற்பட்ட கசப்பான அனுபவங்கள் வரும் புத்தாண்டில் நிகழாமல், பொங்கிவரும் பால் போன்று, சர்க்கரைப் பொங்கலின் இனிப்பான சுவையைப் போன்று இருக்கட்டும் என்பதே பாரம்பரிய தத்துவமாகக் கருதப்படுகிறது.
தற்போதைய தகவல்-தொழில்நுட்ப காலத்தைப் போலல்லாமல், தொலைத்தொடர்பு வசதிகள் இல்லாத அந்நாட்களில், பரம்பரை பரம்பரையாக ஒரு சில குடும்பங்களுக்கே தெரிந்த தங்களின் பாரம்பரிய கலைகளை இளைய தலைமுறையினருக்கு பயிற்றுவித்து, வழிவழியாக அந்தக் கலைகள் சென்று சேரும் விழாவாகவும் பொங்கல் விழா இருந்து வந்துள்ளதை அறிகிறோம். தவில், சிலம்பாட்டம், மயிலாட்டம், ஒயிலாட்டம், தப்பாட்டம், நாதசுரம் இன்னிசை, வாய்ப்பாட்டு, வீணை உள்ளிட்ட தந்தி இசைக்கருவிகளை இசைத்தல், சிலேடையுடன் கூடிய பேச்சுக்கலை, நகைச்சுவை நிகழ்ச்சி என ஒவ்வொரு குடும்பத்திற்கும், அவர்கள் சார்ந்துள்ள சமூகத்திற்கும் உரிய பாரம்பரிய கலைகளை வளர்ப்பதற்காகவும் இப்பண்டிகையை காலங்காலமாக நம் முன்னோர் பயன்படுத்தி வந்திருக்கிறார்கள். இதனால் பிரத்யேக கலைகள் ஒரு தலைமுறையுடன் முடிந்து விடாமல் அடுத்தடுத்த சந்ததியினருக்கும் சென்று சேர்ந்துள்ளது.
பொங்கல் திருநாளில் வீட்டில் உள்ள வயதான முதியவர்கள் – அதாவது தாத்தா-பாட்டி தொடங்கி கைக்குழந்தைகள் வரை ஒரே ஊரில் – ஒரே இடத்தில் கூடி பரஸ்பரம் அன்பையும், பாசத்தையும் பரிமாறிக் கொண்டு, பொங்கலைக் கொண்டாடுவதை இன்றளவும் காண முடிகிறது. ஆனால், இன்று கூட்டுக் குடும்பங்களின் எண்ணிக்கை குறைந்து, மைக்ரோ குடும்பங்கள் (கணவன் – மனைவி, ஒரு குழந்தை அல்லது இரண்டு) பெருகிவிட்ட நிலையில், இன்றைய சந்ததியினருக்கு பொங்கல் பண்டிகையை ஏதாவது தென் மாவட்டங்களில் உள்ள கிராமங்களுக்கு அழைத்துச் சென்று காண்பித்தால் மட்டுமே அந்தப் பண்டிகையின் அருஞ்சிறப்பு தெரிய வரும்.
அதிலும், அறுவடை உள்ளிட்ட விவசாயத் தொழில்களுக்கு அறுவடை எந்திரங்கள், நெற்கதிரில் இருந்து நெல்லை பிரித்தெடுக்கும் எந்திரங்கள் என அனைத்தும் எந்திரகதியாகி விட்டன. மாடுகள் உழவுக்குப் பயன்படுத்தப்பட்ட நிலை மாறி இன்று டிராக்டர்கள் பயன்படுத்தப்படுவது அதிகரித்துள்ளது எனலாம்.
அதிவேகமாக வளரும் காலத்திற்கு ஏற்ப விவசாய நிலங்களும், காடு-கழனிகளும் மருகிக் கொண்டிருக்கின்றன. தமிழகத்தில் சிறு நகரங்கள் தொடங்கி, பெருநகரங்கள் வரை தொழிற்சாலைகளுக்கும், வீட்டு மனைகளுக்கும், அடுக்குமாடி குடியிருப்புகளுக்கும் கொடுத்தது போக எஞ்சியிருக்கும் விவசாய நிலங்களையாவது பாதுகாப்போம் என்ற உறுதிமொழியை இந்த தைப் புத்தாண்டில் ஏற்போமாக.
கடந்தவை கடந்தவையாக இருக்கட்டும். நம்மிடம் உள்ள விவசாய நிலங்களை விவசாயத்தைத் தவிர வேறு நோக்கங்களுக்காக விற்க மாட்டோம் என்ற உறுதியையும் ஏற்பதுடன், முந்தைய பசுமையான பொங்கல் நினைவுகளையும், மூதாதையர்களையும் மனதில் எண்ணி பொங்கலைக் கொண்டாடுவோமாக.
பொங்கட்டும் பொங்கல், தமிழர்களின் உள்ளத்தைப் போல்!