கனேடிய அமைச்சரவையின் முக்கிய சில பதவிகளில் பிரதமர் ஜஸ்டின ரூடோ மாற்றங்களை அறிவித்துள்ள நிலையில், கனடாவின் புதிய குடிவரவு, குடியுரிமை மற்றும் அகதிகள் விவகார அமைச்சராக அஹ்மட் ஹூசென நியமிக்கப்பட்டுள்ளார்.
புதிய குடிவரவு அமைச்சரான அஹ்மட் ஹூசெனும் தனது பதின்ம வயது காலத்தில் சோமாலியாவில் இருந்து அகதியாக கனடாவுக்கு குடிபெயர்ந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.
வழக்கறிஞராகவும், சமூக செயற்பாட்டாளராகவும் விளங்கிய அவர், முதலாவது சோமாலிய கனேடியராக கடந்த 2015ஆம் ஆண்டில் நாடாளுமன்றத்திற்கு தெரிவாகியிருந்தார்.
இவ்வாறான நிலையில் தனது புதிய நியமனம் குறித்து கருத்து வெளியிட்டுள்ள அவர், அரசியலில் உள்ள அனைவருமே தமது சொந்த அனுபவங்களையும் பின்னணிகளையுமே தமது செயற்பாடுகளில் வெளிக்காட்டும் நிலையில், அந்த வகையில் தானும் அதில் வேறுபட்டு இருக்கப்போவதில்லை என்று குறிப்பிட்டுள்ளார்.
அந்த வகையில் தான் கனடாவுக்கு குடிபெயர்ந்த அனுபவங்களும், குடியேற்ற விவகார வழக்கறிஞரான அரசியலுக்கு மு்னனரான தனது அனுபவங்களும், சமூக செயற்பாட்டாளரான தனது அனுபவங்களும் தனது இந்த பதவிநிலையிலும் பிரதிபலிக்கும் எனவும் அவர் கூறியுள்ளார்.
முன்னர் கனேடிய சோமாலிய காங்கிரசின் தேசிய தலைவராகவும பதவி வகித்த அவர், சமூக ஒருமைப்பாட்டுக்கான பணிகளை முன்னெடுத்து வந்ததுடன், ஒரு சமூகத்தினை தனிப்மைப்படுத்துவது எவ்வாறு தீவிரமயமாக்கலை ஏற்படுத்தக்கூடும் என்ற விளக்கத்தினை அமெரிக்க பாதுகாப்பு அமைப்புக்கும் ஒருமுறை விளக்கியுள்ளார்.
சோமாலியாவில் இடம்பெற்ற உள்நாட்டுப் போரில் இருந்து தப்பிவந்த தமது பொற்றோருக்கு கனடா அடைக்கலம் வழங்கியதையும் நினைவுகூர்ந்துள்ள அவர், பாதிக்கப்படுவோருக்கு அடைக்கலம் வழங்குவதில் கனடா தற்போது முன்னணியில் திகழ்வதையிட்டு பெருமைப்படுவதாகவும் தெரிவித்துள்ளார்.
கனடாவின் குடிவரவுத் துறை அமைச்சராக இருந்த ஜோன் மக்கலம் சீனாவுக்கான கனேடிய தூதராக பதவி மாற்றம் பெற்றுள்ள நிலையில், புதிய குடிவரவுத் துறை அமைச்சராக அஹ்மட் ஹூசென பதவியேற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.